'ஐடி தலைநகரம்' ஓட்டு போட அக்கறை காட்டாத பெங்களூர் வாக்காளர்கள்? மந்த கதியில் வாக்குப்பதிவு
பெங்களூர்: இந்தியாவின் ஐடி தலைநகரம் என்று சொல்லப்படும் பெங்களூரில் வாக்குப்பதிவு மந்த கதியில் உள்ளது. தற்போது வரை 41.43 சதவிகித வாக்குகளே பதிவாகியுள்ள நிலையில், கடந்த தேர்தலில் பதிவான 57 சதவிகிதத்தை தாண்டுமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. அங்குள்ள 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கர்நாடகத்தை பொறுத்தவரை அங்கு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். பிரசாரங்கள் எல்லாம் முடிந்து இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தேர்தல் களத்தில் உள்ள சுமார் 2 ஆயிரம் வேட்பாளர்களின் தலைவிதியை வாக்காளர்கள் நிர்ணயிக்க உள்ளனர்.
வாக்குப்பதிவு தொடங்கியது முதலே விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க விரிவான பதுகாப்பு ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப்பதிவு பெரிய அளவில் சலசலப்புகள் எதுவும் இன்றி நடைபெற்று வருகிறது.

இன்று 3 மணி நிலவரப்படி வாக்குபதிவு சதவிகிதம் தாண்டியது. கர்நாடகாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது 72.13 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. அதைவிட இந்த முறை வாக்கு சதவிகிதம் அதிகரிக்குமா? என்பது மாலை 6 மணிக்கு மேல் தெரிய வரும். கர்நாடகாவில் விறு விறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வந்தாலும் தலைநகர் பெங்களூரில் வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்று வருகிறது.
இந்த முறை மட்டும் அல்ல. கடந்த 2013 மற்றும் 2018 ஆம் ஆண்டு தேர்தலிலும் பெங்களூரில் வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது. 2013 ஆம் ஆண்டு பெங்களூரில் 52.83 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்தது. 2018- ஆம் ஆண்டும் வாக்குப்பதிவு சதவீதம் பெரிதளவு அதிகரிக்கவில்லை. கடந்த 2018-ம் ஆண்டு வாக்கு சதவிகிதம் 54.72 ஆக இருந்தது.
இந்த நிலையில் இன்று நடைபெற்று வரும் தேர்தலிலும் பெங்களூர் நகரம் பிற பகுதிகளை போல இல்லாமல் சுறுசுறுப்பு இன்றி இருப்பதை காண முடிகிறது. கிராமப்புற பகுதிகளில் கூட மக்கள் வாக்குப்பதிவு துவங்கியது முதலே தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போடுவதை பார்க்க முடிகிறது.

ஆனால், இந்தியாவின் ஐடி தலைநகரம் என்று அழைக்கப்படும் பெங்களூரில் படித்த மக்கள் நிறைந்து இருந்தாலும் கூட வாக்குப்பதிவு மந்தமாக இருப்பது சற்று அதிர்ச்சி கொடுப்பதாகவே உள்ளது. பெரும் பணக்காரர்களும் நன்கு படித்தவர்களும் நிறைந்த பெங்களூரில் வாக்குப்பதிவு தேர்தலுக்கு தேர்தல் குறைந்து வருவது.. நகர மக்கள் தான் ஜனநாயக கடமையை ஆற்றுவதில் ஆர்வம் காட்டுவதில்லையோ என்று எண்ணம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் முன்வைக்கும் கருத்தாக இருக்கிறது.
பெங்களூர் நகரத்தில் மட்டும் மொத்தம் 28 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் சில தொகுதிகளில் ஐடி நிறுவனங்கள் மற்றும் பெரும் பணக்காரர்கள் வசிக்கும் தொகுதிகளாகும். இருந்தாலும் இங்கு வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்து வருவது ஜனநாயகத்திற்கு வலுசேர்ப்பதாக இல்லை என்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். அதிலும், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பெரும்பாலும் ஆக்டிவாக இருந்து அதில் அரசியல் கருத்துக்களை தெரிவித்தாலும் பலரும் வாக்களிக்க வருவதில்லை என்ற ஆதங்கத்தையும் சமூக ஆர்வலர்கள் கூறாமல் இல்லை.
சமூக பிரச்சினைகளுக்கு கையெழுத்து இயக்கம் நடத்துவது..உள்கட்டமைப்புகளில் குளறுபடி நடந்தால் மக்கள் தாமாக முன் வந்து போராட்டம் நடத்துவது என பெங்களூரு நகர மக்கள் சமூக அக்கறையுடன் செயல்படுவதை பல விஷயங்களில் காண முடியும். ஆனால் தேர்தல் என்று வந்தால் மட்டும் வாக்குப்பதிவு சதவிகிதம் தலைகீழாக செல்வதுதான் பலரையும் வியக்க வைப்பதாக இருக்கிறது. இதற்கு மக்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை எனபதையும் தாண்டி வேறு சில காரணங்களும் இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதாவது, வாக்காளர் பட்டியலில் குளறுபடி, வாக்களர்கள் வேறு இடத்திற்கு குடிபெயர்வது.. நகரங்களில் வசித்தாலும் தேர்தலின் போது சொந்த ஊருக்கு சென்று விடுவது.. சிலருக்கு இரண்டு இடங்களிலும் வாக்குகள் இருப்பது ஆகியவையும் காரணமாக சொல்லப்படுகிறது. எது எப்படியோ அனைத்து தரப்பு மக்களும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். அப்போதுதான் ஜனநாயக திருவிழா மேலும் சிறப்பு பெறும் என்பது அனைத்து தரப்பினரின் கருத்தாக இருக்கிறது.
சட்டமன்ற தேர்தலில் மட்டுமல்லாது மக்களவை தேர்தலின் போதும் பெங்களூரில் வாக்கு சதவிகிதம் குறைந்து வருவதை தான் காண முடிகிறது. கடந்த 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பெங்களூரில் 56 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது. கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் மேலும் வாக்கு சதவீதம் குறைந்து 54.1 சதவிகித வாக்குகளே பெங்களூரில் பதிவானது.












Click it and Unblock the Notifications