மோசமான வானிலை.. ரூட் மாறிய ஹெலிகாப்டர்.. அசராமல் ராகுல் செய்த ‛சம்பவம்’.. பேய்மழையிலும் நெகிழ்ச்சி
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் ராகுல் காந்தி நேற்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார். கலபுரகி மாவட்ட பிரசாரத்தில் பங்கேற்க ராகுல் காந்தி சென்றபோது மோசமான காலநிலையால் அவரது ஹெலிகாப்டர் ரூட் மாற்றி தரையிறங்கிய நிலையிலும் அசராத ராகுல் காந்தி செய்த சம்பவம் தான் காங்கிரஸ் கட்சியினரை நெகிழ்ச்சியடைய செய்தது.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜகவை வீழ்த்தி தனிமெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சி முயற்சித்து வருகிறது. மாநிலத்தில் உள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே மாதம் 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ளது. பாஜக, காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் கர்நாடகாவை வட்டமிட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே நேரத்தில் பல மாவட்டங்களுக்கு அரசியல் கட்சி பயணித்து தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் மாநில தலைவர் டிகே சிவக்குமார் உள்ளிட்டவர்கள் பம்பரமாக சுழன்று மக்களை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் நேற்று ராகுல் காந்தி மல்லிகார்ஜூன கார்கேவின் சொந்த மாவட்டமான கலபுரகி மாவட்டம் ஜீவர்கி சட்டசபை தொகுதியில் பிரசாரம் செய்ய சென்றார். இதற்காக அவர் ஹெலிகாப்டரில் ஜீவர்கிக்கு சென்றார். இந்த சமயத்தில் கலபுரகி மாவட்டத்தின் பல இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக ஜீவர்கியில் கனமழை கொட்டிதீர்த்தது.
இதனால் அங்கு ஹெலிகாப்டர் தரை இறங்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் கலபுரகி விமான நிலையத்துக்கு ரூட் மாற்றி அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு ராகுல் காந்தி தரையிறங்கினார். இதையடுத்து அவர் கலபுரகியில் இருந்து காரில் ஜீவர்கிக்கு காரில் புறப்பட்டு சென்றார். காலநிலை மாற்றத்தால் 2 மணிநேரம் தாமதமாக ராகுல் காந்தி பிரசார மேடைக்கு வந்தார்.

அப்போது அங்கு மழை ஓரளவு குறைந்து இருந்தது. ஆனாலும் தொடர்ந்து தூறல் இருந்து கொண்டே தான் இருந்தது. இதற்கு நடுவே ராகுல் காந்தியை பார்க்க ஏராளமான தொண்டர்கள் காத்திருந்தனர். இதையடுத்து ராகுல் காந்தி கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் திறந்தவெளி மேடையில் நின்று உரையாற்றினார்.
தனது உரை தொடங்கியதில் இருந்து ராகுல் காந்தி குடை எதுவும் இன்றி கொட்டிய மழையில் டீசர்ட்டுடன் நின்று பேசினார். அப்போது மழையில் இருந்து தப்பிக்க பிளாஸ்டிக் சேர்களை தலையில் வைத்து கொண்டு காங்கிரஸ் தொண்டர்கள் அவரது உரையை கேட்டனர். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ராகுல் காந்தி பேசுகையில், ‛‛விரைவில் கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு அமையும். கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் வெற்றி பெறும். 150க்கும் அதிகமான இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும். கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கப் போவது காங்கிரஸ் தான். இதை யாராலும் தடுக்க முடியாது. ‛‛கர்நாடகாவில் பாஜவுக்கு 40 சீட் மட்டும் தான் கிடைக்கும். அதற்கு மேல் கர்நாடகா மக்கள் பாஜகவுக்கு அதிக இடங்களை கொடுக்க மாட்டார்கள்'' என பேசினார்.

இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி இந்தியில் பேசினார். அதனை ஜீவர்கி தொகுதி சிட்டிங் எம்எல்ஏவும், தற்போதைய காங்கிரஸ் வேட்பாளருமான அஜய் சிங் கன்னடத்தில் மொழி பெயர்த்தார். இந்த அஜய் சிங் என்பவர் கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் தரம்சிங்கின் மகன் ஆவார். மேலும் கர்நாடகா சட்டசபையில் எதிர்க்கட்சி துணை தலைவராக உள்ளார். இவருக்கும், ராகுல் காந்திக்கும் இடையே நெருக்கமான உறவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications