கன்னட சினிமாவிலும் பாலியல் தொல்லை- நடிகைகள் சஞ்சனா கல்ராணி, நீது பரபர புகார்- விசாரிக்க எதிர்ப்பு!
பெங்களூர்: மலையாள மற்றும் தமிழ் சினிமாவைப் போல நடிகைகளுக்கான பாலியல் தொல்லை விவகாரம் கன்னட சினிமா உலகிலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கன்னட சினிமாவில் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக நடிகைகள் சஞ்சனா கல்ராணி, நீது பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் நடிகைகள் தெரிவித்துள்ள பாலியல் தொல்லை புகார் குறித்து விசாரிக்க குழு அமைக்கக் கூடாது என கன்னட சினிமா வர்த்தக சபை கூட்டத்தில் தயாரிப்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் மலையாள திரை உலகில் நடிகைகளுக்கு பாலியல் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டது தொடர்பாக ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி புயலைக் கிளப்பியது. இதனையடுத்து முன்னணி நடிகர்களும் பாலியல் தொல்லை வழக்குகளில் சிக்கி வருகின்றனர். இதேபோல தமிழ் சினிமாவிலும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் வரிசை கட்டி வலம் வருகின்றன.

இதனைத் தொடர்ந்து கர்நாடகா முதல்வர் சித்தராமையாவை கன்னட இயக்குநர் கவிதா லங்கேஷ் தலைமையிலான குழுவினர் நேரில் சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர். அத்துடன் 153 நடிகர் -நடிகைகள் கன்னட சினிமா உலகின் பாலியல் தொல்லை குறித்து விசாரிக்க குழு அமைக்க கோரியும் முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் அனுப்பினர்.
இந்த பின்னணியில் கர்நாடகா மகளிர் ஆணையத்தின் வேண்டுகோளில் கர்நாடகா சினிமா வர்த்தக சபையின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கர்நாடகா மகளிர் ஆணைய தலைவர் நாகலட்சுமியும் பங்கேற்றார். கன்னட சினிமாவில் நடிகைகள், பெண் கலைஞர்களுக்கான பாலியல் தொல்லை தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால் கன்னட சினிமா இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் விசாரணை குழு அமைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் கன்னட சினிமாவில் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாகவும் விசாரணை குழு அமைத்துதான் ஆக வேண்டும் என்றும் நடிகைகள் சஞ்சனா கல்ராணி, நீது ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர். அத்துடன் கர்நாடக சினிமா வர்த்தக சபை கூட்டத்தில் தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் தொல்லை புகார்கள் குறித்து பேசவிடாமல் தடுக்கப்பட்டதாகவும் நடிகைகள் புகார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications