நடிகை ரன்யா ராவ் பற்றி அவதூறு செய்தி வெளியிட தடை.. 32 ஊடக நிறுவனங்களுக்கு கர்நாடக ஐகோர்ட் நோட்டீஸ்!
பெங்களூர்: நடிகை ரன்யா ராவ், அவரது தந்தையான டிஜிபி குறித்து அவதூறு செய்திகளை வெளியிட ஊடகங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக போலீஸ் டிஜிபி ராமச்சந்திர ராவின் வளர்ப்பு மகளும், நடிகையுமான ரன்யா ராவ் (32) துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்ததாக கடந்த மார்ச் 3 ஆம் தேதி பெங்களூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், அவரது வீட்டில் சோதனை நடத்தி ரூ.2.67 கோடி ரொக்கப்பணம், ரூ.2.06 கோடி மதிப்பிலான தங்க நகைகளை கைப்பற்றினர்.

நடிகை ரன்யா ராவிடம் நடத்திய விசாரணையில், அவருக்கு சர்வதேச தங்கக் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும், சில முக்கிய பிரமுகர்களுக்கும், பெரிய நகைக்கடை அதிபர்களுக்கும் தங்கம் கடத்தி வந்து கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் ரன்யா ராவ் மீது வழக்குப்பதிவு செய்து, மும்பை, பெங்களூர் விமான நிலையங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே கடந்த மார்ச் 12 ஆம் தேதி, ரன்யா ராவின் தாயார் எச்.பி. ரோகிணி, சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். பின்னர் ஜூன் 2 ஆம் தேதி வரை நடிகை ரன்யா ராவுக்கு எதிராக ஊடகங்கள் எந்த அறிக்கைகளையும் வெளியிடுவதைத் தடை செய்து உத்தரவு பிறப்பித்தது. அவரது தந்தை தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து கர்நாடக உயர் நீதிமன்றமும் இதேபோன்ற உத்தரவைப் பிறப்பித்தது.
இந்த நீதிமன்ற உத்தரவுகள் இருந்தபோதிலும், சில ஊடகங்கள் தொடர்ந்து பரபரப்பான உள்ளடக்கத்தை வெளியிட்டு வருவதாக ரன்யா ராவ் குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். உயர் நீதிமன்றத்தில் அவர்கள் தாக்கல் செய்த மனுவில், இந்த வழக்கு தொடர்பாக செய்தி வெளியிடுவதற்குப் பதிலாக, ஊடகங்கள் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக அவரது நற்பெயரைக் கெடுக்கும் வகையில் அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த மனுவுக்கு பதிலளிக்க, மனுவில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்ட 32 ஊடக நிறுவனங்களுக்கும் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மேலும், நடிகை ரன்யா ராவுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, அவதூறு செய்திகளுக்கான கட்டுப்பாடுகளை மேலும் வலுப்படுத்தியது.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான துணை சொலிசிட்டர் ஜெனரல் எச்.சாந்தி பூஷண், கடந்த காலங்களில், இதுபோன்ற வழக்குகளில் பிறப்பிக்கப்பட்ட நீதித்துறை உத்தரவுகளை மீறக்கூடாது என்று ஊடக நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஊடகங்கள், வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பெண்களுக்கு எதிராக அவதூறான செய்திகளை வெளியிடுவதைத் தடுக்க வழிகாட்டுதல்களை வகுக்குமாறு மத்திய அரசுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications