பிரஜ்வல் 400 பெண்களை பலாத்காரம் செய்தார் என பேசுவதா? ராகுல் காந்தி மீது கர்நாடகா போலீசில் புகார்
பெங்களூர்: கர்நாடகா மதச்சார்பற்ற ஜனதா தளம்( ஜேடிஎஸ்) எம்பி பிரஜ்வல் ரேவண்ணா 400 பெண்களை பலாத்காரம் செய்ததாக மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவதூறு பரப்பியதாக கர்நாடகா போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலம் ஹாசன் லோக்சபா தொகுதி எம்பியாக இருப்பவர் பிரஜ்வல் ரேவண்ணா. தற்போதைய லோக்சபா தேர்தலில் பாஜக-ஜேடிஎஸ் கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். ஹாசன் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 26-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.

ஹாசன் தொகுதியில் வாக்குப் பதிவுக்கு முன்னதாக பிரஜ்வல் ரேவண்ணா குறித்த ஆபாச வீடியோக்கள் பரவின. அத்தொகுதி முழுவதும் பிரஜ்வல் ரேவண்ணாவின் 3,000 ஆபாச வீடியோக்கள் பென் டிரைவ்கள் மூலம் விநியோகிக்கப்பட்டது பெரும் புயலைக் கிளப்பியது.
இது தொடர்பாக கர்நாடகா சிறப்புப் புலனாய்வுக் குழு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். ஏற்கனவே ஜெர்மனியில் பதுங்கி இருந்த பிரஜ்வல், லண்டனுக்கு தப்பி ஓடியதாகவும் கூறப்படுகிறது. பிரஜ்வலை கைது செய்ய இண்டர்போல் உதவியையும் கர்நாடகா போலீசார் நாடி உள்ளனர். இந்த வழக்கில் பிரஜ்வல் தந்தை ரேவண்ணா கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையாகி இருக்கிறார்.
இந்த நிலையில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது கர்நாடகா போலீஸ் டிஜிபி அலோக் மோகனிடம் ஜேடிஎஸ் கட்சி நிர்வாகிகள் ஒரு புகார் மனு கொடுத்துள்ளனர். அதில் பிரஜ்வல் ரேவண்ணா 400க்கும் அதிகமான பெண்களை பலாத்காரம் செய்திருப்பதாக ராகுல் காந்தி பேசியிருக்கிறார். 400க்கும் அதிகமான பெண்களை சீரழித்த பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஓட்டுக் கேட்ட பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் ராகுல் காந்தி பேசினார். அத்துடன் இது ஒரு கூட்டு பலாத்காரம் எனவும் தொடர்ந்து பேசுகிறார் ராகுல் காந்தி. இது பிரதமர் மோடியை அவமதிப்பதாகும். ஆகையால் ராகுல் காந்தி மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். ராகுல் காந்தியிடம் சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications