பெங்களூரில் டெக் ஊழியர் த*கொலை! டாக்சிக் வேலை சூழல்.. பரிதாபமாக பறிபோன இளைஞரின் உயிர்!
பெங்களூர்: பெங்களூரில் 'க்ருத்ரிம்' டெக் நிறுவனத்தின் 26 வயது இளம் ஊழியர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது தற்கொலைக்கு மோசமான பணி சூழல்தான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
'க்ருத்ரிம்' எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனம், 'ஓலா' நிறுவனத்தின் ஒரு கிளையாகும்.

ஊழியர்களின் தற்கொலை
இந்நிறுவனத்தில் கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் 26 வயது மதிக்கத்தக்க நிகில் சோம்வன்ஷி எனும் இளைஞர் வேலைக்கு சேர்ந்திருந்தார். ஆனால் கடந்த மே 8ம் தேதி அவர் பெங்களூரில் உள்ள ஒரு ஏரியில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்துக்கொண்டதாக என்டிடிவி செய்தி வெளியிட்டிருந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கர்நாடக போலீசார், விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இப்படி இருக்கையில் ரெட்டிட் சமூக ஊடகத்தில், மோசமான பணி சூழல், வேலை அழுத்தம் காரணமாக நிகில் சோம்வன்ஷி தற்கொலை செய்துக்கொண்டதாக பலர் கூறி வருகின்றனர்.
திறமையான இளைஞர்
இந்திய அறிவியல் நிறுவனத்தில் (IISc) பட்டம் பெற்ற நிகில், படிக்கும்போதே LLM மற்றும் RAG போன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் இயங்கும் சக்தி எனும் சாட்போட்டில் பணியாற்றிய அனுபவத்தை கொண்டிருக்கிறார். இந்த திட்டத்தில் IISc பெங்களூரு, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு ப்ரூக்ஸ் பல்கலைக்கழகம், கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் அகைகே டெக்னாலஜிஸ் ஆகியவை இணைந்து பணியாற்றிருந்தது.
படிப்பும் பணியும்
படிப்பை முடித்த நிகில் கொஞ்ச நாட்கள் மஹிந்திரா வங்கியிலும், இந்திய அறிவியல் நிறுவனத்திலும் பணியாற்றிருக்கிறார். இதனையடுத்துதான் 'க்ருத்ரிம்' நிறுவனத்தில் சேர்ந்திருக்கிறார். வேலைக்கு சேர்ந்தது முதல், அமெரிக்காவிலிருந்த இவரது மேனஜரால் நிகில் கடுமையாக வேலை வாங்கப்பட்டார் என்றும், தகாத மொழியில் அவமானப்படுத்தப்பட்டார் எனவும் 'கிர்கவகுட்ஸோ' என்கிற ரெட்டிட் பயனர் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்க மேனேஜர்
இந்த பதிவில், "நிகில் மூன்று பேர் கொண்ட குழுவில் இருந்தார். இந்த குழுவுக்கு ஒரு புரோஜெக்ட் கொடுக்கப்பட்டிருந்தது. வேலை அழுத்தம் காரணமாக மூவரில் 2 பேர் பணியிலிருந்து விடுபட்டுக்கொண்டனர். அவர்கள் ராஜினாமா செய்துவிட்டனர். எனவே மொத்த பொறுப்பும் நிகில் தலையில் விழுந்தது. அமெரிக்க மேனேஜர் எப்போதும் புதிய பணியாளர்களிடம் கடுகடு என்றுதான் நடந்துக்கொண்டிருப்பார். புதிய பணியாளர்களுக்கான மீட்டிங்கில் வைத்து நிகிலை அவதூறான வார்த்தைகளை கொண்டு திட்டியிருக்கிறார்.
சைக்கோ மேனேஜர்
மேனேஜர் அமெரிக்காவில் இருப்பதாலும், ஊழியர்கள் பெங்களூரில் இருப்பதாலும் தினமும் ஆன்லைன் வாயிலாக மீட்டிங் நடைபெறும். இந்த மீட்டிங்கில் பேசப்படும் வார்த்தைகள் மிகவும் மோசமானவை" என்ற கூறப்பட்டிருக்கிறது.
உறுதி செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள்
இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் 'க்ருத்ரிம்' டெக் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களால் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நிகிலுடன் பணிபுரிந்த முன்னாள் ஊழியர்கள் கூறுகையில், "ஊழியர்களை எப்படி நடத்த வேண்டும் என்று அமெரிக்க மேனஜருக்கு தெரியவில்லை. அவர் ஊழியர்களை கத்துகிறார். தகாத வார்த்தைகளால் பேசுகிறார். தற்கொலை சம்பவத்திற்கு பிறகு, ஊழியர்கள் ஊடகங்களுடனோ அல்லது காவல்துறையினருடனோ பேச வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள்" என்று ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் தெரிவித்திருக்கிறது.
டாக்சிக் வேலை சூழல்
பிசினஸ் ஸ்டாண்டர்ட் செய்தி ஊடகத்திடம் இந்நிறுவனத்தின் மற்றொரு முன்னாள் ஊழியர் ஒருவர் பேட்டியளித்துள்ளார். கடுமையான பணி சூழல், வேலை அழுத்தம், வேறு வேலை வாய்ப்புகள் கிடைக்காதது போன்றவை தற்கொலை எண்ணங்களை ஏற்படுத்தியதாகவும், ஆனால் நல்வாய்ப்பாக அந்நிறுவனத்திலிருந்து வெளியேறிவிட்டதாகவம் தெரிவித்திருக்கிறார்.
நீலிக்கண்ணீர் வடித்த நிறுவனம்
இந்த சம்பவம் குறித்த நிறுவனம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், "எங்களில் மிகவும் திறமையான இளம் ஊழியர்களில் ஒருவரான நிகில் மே.8ம் தேதி காலமானார். இது எங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு எங்களது ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கிறோம். அவரது குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவோம்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அடேங்கப்பா நிறுவனம்
இதுபோன்ற நிறுவனங்களின் நடவடிக்கைகள் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. உலகில் இந்த நிறுவனம் மட்டும்தான் ஏதோ வெட்டி முடித்து, மகா ஜனங்களை காப்பாற்ற வந்த, அல்லது அறிவியலையே புரட்டிப்போட வந்த நிறுவனம் போல இதுபோன்ற நிறுவனங்கள் செயல்படுகின்றன.
சட்டமும், ஓட்டையும்
யாரோ, முகம் தெரியாத கார்ப்பரேட் முதலாளி கொழுக்க, உயிரை கொடுத்து ஊழியர்கள் வேலை செய்து வருகிறார்கள். கார்ப்பரேட் துறையில் ஊழியர்களின் உரிமைகளை காக்கும் வகையில் சட்டங்கள் இல்லாததால்தான் இதுபோன்ற கொடுமைகள் நடக்கிறது என்றும், உறுதியான சட்டங்கள், அதை உறுதியாக அமல்படுத்தும் அரசு இருந்தால் மட்டுமே இதுபோன்ற தற்கொலைகளை தடுக்க முடியும் என்று துறைசார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications