டிகே சிவக்குமார் தம்பிக்கே செக்! பெங்களூர் புறநகரில் பாஜக வேட்பாளரான தேவேகவுடாவின் மருமகன்.. பின்னணி
பெங்களூர்: வரும் லோக்சபா தேர்தலில் பெங்களூர் புறநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் துணை முதல்வர் டிகே சிவக்குமாரின் தம்பியும், சிட்டிங் எம்பியுமான டிகே சுரேஷ் போட்டியிடுகிறார். இது காங்கிரஸின் கோட்டையாக உள்ள நிலையில் பாஜக சார்பில் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மருமகன் மஞ்சுநாத் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் டிகே சிவக்குமார் - டிகே சுரேஷ் ஆகியோருக்கு பெரும் சவால் உருவாகி உள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா உள்ளார். துணை முதல்வராகவும் டிகே சிவக்குமார் உள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். காங்கிரஸ் கட்சி தற்போது முழுவீச்சில் லோக்சபா தேர்தலுக்கு தயாராகி வருகிறது.

கர்நாடகாவை பொறுத்தமட்டில் 28 லோக்சபா தொகுதிகள் உள்ளன. கடந்த முறை 25 இடங்களில் பாஜக வென்றது. காங்கிரஸ், ஜேடிஎஸ் தலா ஒரு இடத்திலும் மண்டியாவில் சுயேச்சை வேட்பாளர் சுமலதாவும்(மறைந்த நடிகர் அம்பரீஷ் மனைவி) வெற்றி பெற்றனர்.
கடந்த முறை அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் தோற்றாலும் கூட பெங்களூர் புறநகர் தொகுதியில் மட்டும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் டிகே சுரேஷ் வெற்றி பெற்றார். இவர் டிகே சிவக்குமாரின் உடன்பிறந்த தம்பி. இவர் கடந்த 2014, 2019 தேர்தல்களில் பெங்களூரில் வெற்றி பெற்ற நிலையில் மீண்டும் வரும் லோக்சபா தேர்தலில் அங்கு காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக களமிறங்கி உள்ளார்.
பெங்களூர் புறநகர் லோக்சபா தொகுதி என்பது இப்போது காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ளது. டிகே சிவக்குமார் - டிகே சுரேஷ் ஆகியோருக்கு இந்த தொகுதியில் நல்ல செல்வாக்கு உள்ளது. இந்த தொகுதியில் டிகே சிவக்குமாரின் ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான் அதிகம் உள்ளனர். இதுதான் டிகே சுரேசை தொடர்ந்து வெற்றி பெற வைத்து வருகிறது.
இந்நிலையில் தான் வரும் லோக்சபா தேர்தலில் டிகே சுரேசின் வெற்றியை தடுக்கவும், காங்கிரஸில் பெரிய தலைவராக வளர்ந்து வரும் டிகே சிவக்குமாருக்க முட்டுக்கட்டை போடவும் பாஜகவும், முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின்(முன்னாள் முதல்வர் குமாரசாமியின் தந்தை) ஜேடிஎஸ் கட்சியும் திட்டமிட்டுள்ளன. அதன்படி இரு கட்சிகளும் வரும் லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைத்துள்ளன.
மொத்தம் 28 தொகுதிகளில் ஹாசன், மண்டியா, கோலா தொகுதிகளை பாஜக, ஜேடிஎஸ் கட்சிக்கு ஒதுக்க உள்ளது. அதேபோல் பெங்களூர் புறநகர் தொகுதியில் தேவேகவுடாவின் மருமகன் மஞ்சுநாத்தை (குமாரசாமியின் சகோதரியின் கணவர்) பாஜக சின்னத்தில் களமிறக்க திட்டமிடப்பட்டது. அதன்படி நேற்று பாஜகவின் 2வது கட்ட வேட்பாளர் பட்டியலில் பெங்களூர் புறநகர் தொகுதியில் பாஜக வேட்பாளாராக மஞ்சுநாத் அறிவிக்கப்பட்டார்.
நேற்று மதியம் மஞ்சுநாத் பாஜகவின் மூத்த தலைவர் எடியூரப்பாவை சந்தித்த நிலையில் மாலையில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர் இதய அறுவை சிகிச்சை டாக்டர் ஆவார். பெங்களூரில் அரசு நடத்தும் ஸ்ரீ ஜெயதேவா இன்ஸ்ட்டியூட் ஆப் கார்டியோவாஸ்குலார் சயின்ஸ் மற்றும் ஆய்வு மையத்தில் பணியாற்றி வந்தார். 17 ஆண்டுகளாக இங்கு பணியாற்றிய அவர் கடந்த ஜனவரி மாதம் ஓய்வு பெற்றார். இந்நிலையில் தான் தற்போது அவர் பெங்களூர் புறநகர் தொகுதி பாஜக வட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இத்தகைய சூழலில் தான் பாஜக-ஜேடிஎஸ் கட்சியின் இந்த முடிவு என்பது டிகே சிவக்குமார்- டிகே சுரேசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் மஞ்சுநாத்தும் ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர். மேலும் ஜேடிஎஸ் கட்சிக்கு பெங்களூர் புறநகர் தொகுதியில் ஓரளவு செல்வாக்கு உள்ளது. அதேபோல் பாஜகவுக்கும் கொஞ்சம் ஓட்டு உள்ளது. இருகட்சிகளும் தற்போது கைக்கோர்த்துள்ள நிலையில் அது டிகே சுரேசின் வெற்றிக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் என பாஜக-ஜேடிஎஸ் நினைக்கின்றன.
எது எப்படியோ பெங்களூர் புறநகர் லோக்சபா தேர்தலில் பாஜக-ஜேடிஎஸ்சின் வியூகம் வெல்கிறதா? இல்லாவிட்டால் பல சந்தர்ப்பங்களில் இக்கட்டில் சிக்கிய காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்களை பாதுகாத்த டிகே சிவக்குமார் சவாலை சந்தித்து தனது தம்பி டிகே சுரேசை மீண்டும் வெற்றி பெற வைக்கிறாரா? என்பதை அறிய நாம் இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டியது அவசியமாகும்.












Click it and Unblock the Notifications