கர்நாடக தேர்தலில் மகாராஷ்டிரா விவகாரம் எதிரொலிப்பு.. விளாசும் எதிர்க்கட்சிகள்! சிக்கலில் எடியூரப்பா
Recommended Video
பெங்களூர்: மகாராஷ்டிராவில் நடந்த அரசியல் பிரச்சினைகள் கர்நாடகாவில் வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சத்தில் முதல்வர் எடியூரப்பா சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி, நடைபெற்ற நிலையில், இரு கட்சிகளையும் சேர்ந்த 17 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால், கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.
இப்போது எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. இதில் 15 தொகுதிகளுக்கு வரும் டிசம்பர் 5ம் தேதி இடைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.

செருப்பு வீச்சு
இதில் 13 தொகுதிகளில், ஏற்கனவே காங்கிரஸ், மஜதவிலிருந்து ராஜினாமா செய்து வெளியேறிய மாஜி எம்எல்ஏக்களுக்கு சீட் கொடுத்துள்ளது பாஜக. இதனால், தேர்தல் பிரச்சாரத்தில் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறார்கள் அந்த வேட்பாளர்கள். மண்டியா மாவட்டம், கே.ஆர்.பேட் தொகுதியிலிருந்து மதசார்பற்ற ஜனதாதளம் சார்பில் கடந்த வருடம் நடந்த பொதுத் தேர்தலில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் நாராயண கவுடா. இந்த நிலையில், இவர், திடீரென எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து இப்போது பாஜகவில் சேர்ந்து அதே தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோது, மஜத தொண்டர்கள் செருப்பை வீசி தாக்கினர்.

கேள்விகள்
இதேபோல அனைத்து 13 தொகுதிகளிலுமே, ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிடும் எம்எல்ஏக்களை நோக்கி, எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் கேள்வி, எதற்காக ராஜினாமா செய்தீர்கள், எதற்காக பாஜகவில் சேர்ந்தீர்கள் என்பதாக உள்ளது. பாஜகவின் அதிகார தாகத்தால்தான் இவ்வளவு பிரச்சினைகள் நடப்பதாக காங்கிரசும், மஜதவும் தீவிர பரப்புரை செய்கின்றன.

பிரச்சாரம் தீவிரம்
இந்த நிலையில், மகாராஷ்டிராவில் திடீரென பட்னாவிஸ் தலைமையில் பாஜக அரசு அமைந்ததும், அதற்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான அஜித் பவாரை ஆதரவுக்கு அழைத்ததும், கர்நாடக அரசியல் களத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. கர்நாடகாவை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும், பாஜக இதே அதிகார தாகத்தோடு இருப்பது தெளிவாக தெரிகிறது என எதிர்க்கட்சிகள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன.

அனைத்து பகுதிகள்
கர்நாடகாவில் ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் பாஜக சார்பில் போட்டியிடுவோரை மக்கள் தேர்ந்தெடுத்தால், எல்லா மாநிலங்களிலும் பாஜக இதே வித்தையை செய்யும். எனவே, கர்நாடக மக்கள் யோசித்து வாக்களித்து, பாஜகவினரை தோற்கடித்தால்தான் நாடு முழுக்க ஜனநாயகம் காப்பாற்றப்படும் என்று மஜத தலைவர் குமாரசாமியும், காங்கிரஸ் தலைவர் சித்தராமையாவும் பிரச்சாரங்கள் செய்து வருகிறார்கள்.

அதிருப்தி
ஏற்கனவே, உள்ளூர் பிரச்சினையால் பாஜக வேட்பாளர்கள் அதிருப்தியை சம்பாதித்த நிலையில், அண்டை மாநிலமான மகாராஷ்டிரா பிரச்சினையும் அவர்களுக்கு பாதகமாக மாறியுள்ளது. இந்த நேரம் பார்த்தா இப்படியாக வேண்டும் என அவர்கள் புலம்புகிறார்கள். அதேநேரம், மஜத, காங்கிரஸ் ஆகிய எதிர்க்கட்சிகள் தனித்து போட்டியிடுவதால் வாக்குகள் சிதறி நாம் ஜெயிக்கலாம் என பாஜக வேட்பாளர்கள் நினைக்கிறார்கள். என்ன நடக்கிறது என்பதை இனி வரும் நாட்கள் புரிய வைக்கும்.












Click it and Unblock the Notifications