மேகதாதுவில் அணை.. மார்ச் மாதத்திற்குள் அடிக்கல் நாட்டப்படும்.. கர்நாடக அமைச்சர் அடாவடி பேச்சு
பெங்களூர்: வரும் மார்ச் மாதத்திற்குள் மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்படும் என கர்நாடக அமைச்சர் பேசியுள்ளார். மேலும், மேகதாதுவில் அணை கட்டுவது என்பது கர்நாடக அரசி உறுதியான முடிவு என்றும், அணை கட்டுவதற்கான அனைத்து தொழில்நுட்ப மற்றும் சட்டரீதியான பணிகள் எல்லாம் நிறைவடைந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் தமிழகத்திற்கு காவிரியில் கடந்த காலங்களை விட தற்போது மிகக் குறைந்த அளவிலேயே தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றத்தில் மனு
தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விடுவது தொடர்பாக இரு மாநிலங்களுக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவுப்படி தண்ணீரை திறந்துவிட சொல்லி தமிழகம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில், எங்கள் குடிநீருக்கே தண்ணீர் தேவைப்படுகிறது என்றும் இதனால் தண்ணீர் திறந்துவிட முடியாது எனவும் கர்நாடகா கூறி வருகிறது.
காவிரி மேலாண்மை ஆணயம் உத்தரவிட்டும் தமிழகத்துக்கு காவிரியில் நீர் திறக்க மறுத்து வந்த கர்நாடகாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது விசாரணை நடந்து வரும் சூழலில், மேகதாதுவில் அணை கட்ட வரும் மார்ச மாதத்திற்குள் அடிக்கல் நாட்டப்படும் என கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் செலுவராய சாமி தெரிவித்தார். நேற்று மண்டியாவில் உள்ள விவசாயிகளை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்த அவர் பேசியதாவது:-
அணை கட்டுவதே நிரந்தர தீர்வு
காவிரி பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதற்கு நிரந்த பிரச்சினை மேகதாதுவில் புதிய அணை கட்டுவது ஒன்றே தான் முடிவு. கடந்த காலங்களை ஒப்பிடும்போது இந்த ஆண்டு குறைந்த அளவே தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மிக குறைந்த அளவு தான் காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இங்கு நிலவும் வறட்சி, அணைகளின் நீர்மட்டம் குறித்த தகவல்கள் நீதிமன்றத்திற்கு தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த அணை கட்டப்படுவதால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மேகதாது திட்டத்திற்காக கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு இணையாக, 13 மாவட்டங்களில் நிலம் ஒதுக்கீடு செய்ய வேண்டியுள்ளது. விவசாயிகள் தொடர்ந்து ஒப்புதல் அளிக்க வேண்டும். உங்கள் ஒத்துழைப்பு கிடைத்தால் என்னென்ன பணிகளி மேற்கொள்ள வேண்டுமோ அதை எல்லாம் செய்து தர தயாராக் இருக்கிறேன்.
மார்ச் மாதத்திற்குள் அடிக்கல்
வரும் மார்ச் மாதத்திற்குள் மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன். மேகதாதுவில் அணை கட்டுவது என்பது கர்நாடக அரசி உறுதியான முடிவாகும். அணை கட்டுவதற்கான அனைத்து தொழில்நுட்ப மற்றும் சட்டரீதியான பணிகள் எல்லாம் நிறைவடைந்துவிட்டன. மேலும் மத்திய நீர்வள ஆணையத்திடமும் இதற்கான முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இருக்கும் அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.. என்று கூறினார்.



Click it and Unblock the Notifications
