முதல்வர் குறித்து அவதூறு.. பெங்களூர் சாப்ட்வேர் இன்ஜினியர் கைது.. விசாரித்த போலீசுக்கு ட்விஸ்ட்
பெங்களூர்: தமிழக முதல்வர் முக ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், மனோ தங்கராஜ் ஆகியோரை பற்றி அவதூறாக பதிவிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகியை பெங்களூரில் வைத்து கன்னியாகுமரி மாவட்ட தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறான கருத்துக்களை பதிவிடுவோர் குறித்து புகார்களின் பேரில் போலீசார் கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாம் தமிழர் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக அணி அமைப்பாளர் ஜோசப் ராஜ்க்கு 62 வயது ஆகிறது. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை போலீஸ் நிலையத்திற்கு ஜோசப் ராஜ் கடந்த டிசம்பர் மாதம் 7-ம் தேதி அன்று புகார் மனு அளித்தார். அந்த புகார் மனுவில், எனது செல்போன் மூலமாக பேஸ்புக்கை பார்த்த போது, அதில் எனது கட்சி தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மனோ தங்கராஜ் ஆகியோரை பற்றி விஜில் ஜோன்ஸ் என்பவர் அவதூறாக கருத்துகளை பதிவிட்டிருந்தார். ஆகவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதுதொடர்பாக தக்கலை காவல் நிலைய போலீசார் நாம் தமிழர் நிரவாகி விஜில் ஜோன்ஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அவர் பெங்களூருவில் தங்கியிருந்து முகநூலில் அவதூறு கருத்துகளை பதிவிட்டது தெரியவந்தது. இந்தநிலையில் அவரை கைது செய்வதற்காக தக்கலை இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்தனர். நேற்று முன்தினம் பெங்களூரில் பதுங்கி இருந்த 44 வயதாகும் விஜில் ஜோன்சை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை பூச்சாத்தான்விளையை சேர்ந்த இவர் தற்போது பெங்களூருவில் உள்ள தாணி சந்திரா பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருவதும், அங்குள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருவதும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் அவர் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றியபடியே நாம் தமிழர் கட்சியின் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியாக இருந்தார் என்ற தகவலும் வெளியானது. இதனையடுத்து விஜில் ஜோன்சை பெங்களூருவில் இருந்து கன்னியாகுமரி அழைத்து வந்த போலீசார், அவரை கைது செய்து பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Click it and Unblock the Notifications
