புக் செய்த சீட்டை ஆக்கிரமித்த பயணிகள்! பெங்களூர் ஐடி ஊழியர் செய்த தரமான செயல்.. ரயில்வேக்கு தேவைதான்
பெங்களூர்: யெஸ்வந்த்பூர் - கன்னூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் தட்கலில் டிக்கெட் புக் செய்திருந்த போதும் கேரள பயணியின் இருக்கையை முன்பதிவில்லா டிக்கெட்டை எடுத்த பயணிகள் ஆக்கிரமித்துள்ளனர். இது குறித்து டிக்கெட் பரிசோதகர் உள்பட பலரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து கேரளாவை சேர்ந்த அந்த பயணிக்கு ரூ.30,000 வழங்க ரயில்வேக்கு கோர்ட் உத்தரவிட்டு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் சமீப காலமாக எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது ரயில் சீட்களை பிற பயணிகள் ஆக்கிரமிப்பதுதான். முன்பதிவு செய்த பெட்டிகளில் முன்பதிவு இல்லாத ஓபன் டிக்கெட் வைத்து இருக்கும் பயணிகள் வந்து ஆக்கிரமித்துக்கொள்ளும் நிகழ்வு அடிக்கடி நடைபெறும் சம்பவங்களில் ஒன்றாக இருக்கிறது.

முன்பதிவு டிக்கெட் எடுத்தும்
ஏசி பெட்டிகளில் கூட உரிய டிக்கெட் இல்லாத பயணிகள் ஆக்கிரமித்துக்கொள்வதால் பல மாதங்களுக்கு முன்பே டிக்கெட் புக் செய்து ரிசர்வ் செய்து வைத்து இருந்த பயணிகள் தவிக்கும் நிலை உள்ளது. அதிலும் வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் என்றால் சொல்லவே தேவையில்லை. போனால் போகட்டும் என இடம் கொடுப்பது போலத்தான் ரிசர்வேஷன் செய்த பயணிகளுக்கே டிக்கெட் இல்லாமல் பயணிகள் இடம் கொடுக்கும் நிலை இருப்பதாக பயணிகள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
பண்டிகை மற்றும் கோடை விடுமுறை போன்ற கூட்ட நெரிசல் மிக்க நாட்களில் தமிழக ரயில்களிலும் இப்போது எல்லாம் இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடைபெறுகிறது. இப்படி முன்பதிவில்லாத டிக்கெட் வைத்து இருக்கும் பயணிகள், ரிசர்வேஷன் பெட்டியை ஆக்கிரமித்துக்கொள்வது பற்றி ரயில்வே போலீசார், பணியில் இருக்கும் டிக்கெட் பரிசோதகரிடம் புகார் அளித்தால் கூட பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்பதே பயணிகளின் ஆதங்கமாக உள்ளது.
ரயில்வேக்கு அபராதம் விதித்த கோர்ட்
இந்த நிலையில் தான் இப்படி தட்கல் டிக்கெட் எடுத்திருந்தும், அந்த இருக்கையில் உட்கார்ந்து பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டதால், இது குறித்து நுகர்வோர் நீதிமன்றத்தில் முறையிட்ட பெங்களூர் ஐடி ஊழியருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க ரயில்வேக்கு உத்தரவிட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெம்ஷீத். பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி தட்கலில் டிக்கெட் புக் செய்து இருக்கிறார். யெஸ்வந்த்பூர் - கன்னூர் எக்ஸ்பிரஸ் ரயிலிலில் டிக்கெட் புக் செய்த இவர் யெஸ்வந்த்பூரில் ஏறியிருக்கிறார். லோக்சபா தேர்தலுக்கு வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு போக அவர் டிக்கெட் புக் செய்து இருந்த நிலையில், அவரது முன்பதிவு செய்த ஸ்லீப்பர் படுக்கையில் ஐந்து பயணிகள் ஆக்கிரமித்து இருந்துள்ளனர்.
டிக்கெட் பரிசோதகர் பதில் அளிக்கவில்லை
இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜாம்ஷீத், ரயில்வே போலீசாரை கூப்பிட்டுள்ளார். பொதுப்பெட்டிக்கு அடுத்த பெட்டி என்பதால், ரயில்வே போலீசார் அங்கு உடனே வந்துள்ளனர். அந்த பயணிகளை வெளியேற்ற டிக்கெட் பரிசோதகரை அழைத்த போது, டிக்கெட் பரிசோதகர் வேண்டும் என்றே வராமல் தவிர்த்து இருக்கிறார். இதனால், ரயில்வே ஹெல்ப் லைன் எண்ணான 132 க்கு ஜாம்ஷீத் போன் செய்து இருக்கிறார். இதிலும் எந்த பயனும் இல்லை.
ரயில் குறித்த புகார்களை அளிக்கும் ரயில் மதத் செயலியையும் தொடர்பு கொண்டு இருக்கிறார். அதிலும் எந்த பதிலும் இல்லை. இரு புகார்களுக்குமே தீர்வு காணப்படாத நிலையில், தீர்வு எட்டப்பட்டதாக புகாரும் முடித்து வைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் வேறு வழியில்லாமல் 10 மணி நேரம் நின்று கொண்டே பயணம் செய்து இருக்கிறார் ஜாம்ஷீத். ஸ்டேஷன் மாஸ்டரிடம் இது குறித்து புகாரளித்த போது, அங்கும் உரிய ரெஸ்பான்ஸ் இல்லை.
அபராதம் விதித்த நுகர்வோர் நீதிமன்றம்
இதையடுத்து ஐஆர்சிடிசி பாலக்காடு மற்றும் பெங்களூர் டிவிஷனிலும் புகாரளித்துள்ளார். இரண்டிலுமே உரிய பதில் கிடைக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த ஜெம்ஷீத், மாவட்ட நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் அணுகியுள்ளார். தனக்கு 4 லட்சம் ரூபய் இழப்பீடாக அளிக்க வேண்டும் என்று அவர் முறையிட்டுள்ளார். இந்த மனு மீதான விசாரணையின் போது பெங்களூர் டிவிஷன் ரயில்வே அதிகாரிகள் ஆஜராகவில்லை.
இதையடுத்து, ரயில்வே சேவைக் குறைபாடு உறுதியாகியிருப்பதாக கூறிய நுகர்வோர் நீதிமன்றம், ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. இந்த தொகையுடன் வழக்கு செலவுக்கு ஆன ரூ.5 ஆயிரம் சேர்த்து மொத்தம் 30 ஆயிரம் செலுத்த வேண்டும் வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஜனவரி 20 ஆம் தேதி உத்தரவிட கோர்ட் ஒரு மாதத்திற்குள் செலுத்த வேண்டும் எனவும் இல்லையென்றால் அதன்பிறகு ஏற்படும் காலதாமத்திற்கு 12 சதவீத வட்டியுடன் கொடுக்க வேண்டும் எனக்கூறியுள்ளது. ஆனால் தற்போது வரை இழப்பீடு தொகையை கொடுக்கவில்லையாம்.












Click it and Unblock the Notifications