சர்ச்சை கருத்து: பிரதமர் மோடி இப்படி பேசுறதுக்கு காரணமே இதுதான்.. போட்டு தாக்கிய நடிகர் பிரகாஷ் ராஜ்
பெங்களூர்: பிரதமர் மோடி நடுக்கத்தில் இருக்கிறார். இதன் காரணமாக இந்து - முஸ்லிம் குறித்து வெறுப்பு கருத்துக்களை மோடி கூறியுள்ளார். 10 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ள பிரதமர் மோடி தனது சாதனைகளை சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டியது தானே என்று நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சித்து பேசியுள்ளார்.
பொதுமக்களின் சொத்துகளையும், தங்கத்தையும் கணக்கெடுத்து, அவற்றை அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் சமூகத்தினருக்கு பகிர்ந்து அளிக்க காங்கிரஸ் கட்சி விரும்புகிறது என்று பிரதமர் மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார். பிரதமர் மோடியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையாக தேர்தல் களத்தில் மாறியிருக்கிறது.

பிரகாஷ் ராஜ் விமர்சனம்: மோடியின் பேச்சு வெறுப்பூட்டும் விதமாக இருப்பதாக கூறி எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. தேர்தல் ஆணையத்திலும் புகார் தெரிவித்தன. மத்தியில் ஆளும் பாஜகவை கடுமையாக விமர்சித்து வரும் நடிகர் பிரகாஷ் ராஜ்ஜும் மோடியை இந்த விவகாரத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். பிரகாஷ் ராஜ் கூறியதாவது:-
கண், காது இல்லா தேர்தல் ஆணையம்: முதல்கட்ட லோக்சபா தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் பாஜகவுக்கு எதிராக ஒரு தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அதனால் பிரதமர் மோடி நடுக்கத்தில் இருக்கிறார். இதன் காரணமாக இந்து - முஸ்லிம் குறித்து வெறுப்பு கருத்துக்களை மோடி கூறியுள்ளார். தேர்தல் நடத்தை விதிகளில் சாதி - மத உணர்வுகளை தூண்டும் வகையில் பேசக்கூடாது என கூறப்பட்டுள்ளது.
ஆனால், அதை கண்டுகொள்ளாமல் பிரதமர் பேசியது விதிமீறல் இல்லையா?... இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய தேர்தல் ஆணையத்திற்கு காது, கண், மூக்கு இருப்பது போல் தெரியவில்லை. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பேசிய கருத்தில் தனக்கு தேவையான வார்த்தைகளை மட்டும் எடுத்து மோடி பேசியது சரியல்ல.
உலகிற்கே தலைகுனிவு: அப்படி என்றால் எதற்காக இந்து - முஸ்லிம் குறித்து மத வெறுப்பு கருத்துக்களை பேசுகிறார். அவருக்கு நம்பிக்கை இல்லை என்பதை இது காட்டுகிறது. மோடியின் இந்த வெறுப்பு கருத்து ஒட்டுமொத்த உலகிற்கும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. 10 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ள பிரதமர் மோடி தனது சாதனைகளை சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டியது தானே.. இவ்வாறு நடிகர் பிரகாஷ் ராஜ் கூறினார்.
நான் சில உண்மைகளை பேசினேன்: எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், நேற்று ராஜஸ்தானின் டோங்க் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "எனது பேச்சு ஒட்டுமொத்த காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணிக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் நான் ராஜஸ்தானில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசியிருந்தேன். எனது உரையில் நான் சில உண்மைகளை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தினேன்..
ஏன் காங்கிரஸ் பயப்படுகிறது?: இது ஒட்டுமொத்த காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளை பீதியில் ஆழ்த்தியுள்ளது. காங்கிரஸ் செய்யும் சதியை மட்டுமே நான் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தினேன். மக்களின் சொத்தை அபகரித்து, அதை சில பிரிவினருக்கு பங்கிட்டு கொடுக்கும் காங்கிரஸின் சதியை நான் அம்பலப்படுத்தியிருக்கிறேன். இந்த உண்மையை கண்டு காங்கிரஸ் ஏன் அஞ்சுகிறது என்பது எனக்கு புரியவில்லை" என்று பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications