எல்லா கதவையும் சாத்துங்க.. தியேட்டர் கழிவறையில் வீடியோ எடுத்து வசமாக சிக்கிய சிறுவர்கள்
பெங்களூர்: பெங்களூர் நகரில் உள்ள தியேட்டரில் பெண்கள் கழிப்பறைப் பயன்படுத்துவதை வீடியோ எடுக்க முயன்ற சிறுவர்கள் இருவரை காவல் துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்தனர். மைனர்கள் என்பதற்காக இவர்களை விட்டுவிடக் கூடாது. கடுமையாக தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை, உத்தரப்பிரதேசத்தில் செவிலியர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை, கேரளத்தில் நோயாளிகள் இருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர் என எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை பிரச்னைகள் அரங்கேறி வருகின்றன. ஹோட்டல், துணிக் கடைகளில் உடை மாற்றும் அறை, விடுதி என அனைத்து இடங்களிலும் வீடியோ எடுக்கும் சம்பவங்களும், அதை வைத்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

அந்த வகையில், பெங்களூரில் உள்ள ஊர்வசி தியேட்டரில் பெண்கள் கழிவறையைப் பயன்படுத்துவதை வீடியோவாக எடுக்க முயன்ற இரண்டு சிறுவர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் உள்ள கிரிநகர் பகுதியைச் சேர்ந்தவர் 23 வயதான இளம்பெண். இவர் சித்தையா சாலையில் உள்ள ஊர்வசி தியேட்டருக்கு தனது நண்பர்களுடன் கன்னட படமான பீமா படத்துக்கு சனிக்கிழமை இரவு 9.45 மணிக்குச் சென்றுள்ளார்.
இன்டர்வெல்லின் போது அந்த இளம்பெண் தியேட்டரில் உள்ள கழிவறைக்குச் சென்றுள்ளார். அப்போது, தரையில் யாரோ ஒரு நபரின் கையின் நிழல் தெரிவதை அவர் கவனித்துள்ளார். நிமிர்ந்து பார்த்தபோது செல்போன் மூலம் வீடியோ எடுத்துக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அந்த பெண் சப்தம் போட்டுள்ளார். இதையடுத்து, அந்த நபர்கள் தப்பியோடி உள்ளனர். அவர் வெளியே வந்து தேடி பார்த்த நிலையில் அந்த நபர்கள கிடைக்கவில்லை.
இதுகுறித்து, அந்தப் பெண் தியேட்டர் ஊழியர்கள் மற்றும் கலாசிபாளையம் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார் சிசிடிவி காட்சிகளை சோதனை செய்துள்ளனர். அப்போது, கழிவறை பகுதியில் இரண்டு சிறுவர்கள் சந்தேகப்படும்படி நடமாடுவது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அந்த நபர்களின் புகைப்படங்கள் தியேட்டர் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டன. படம் முடிந்தவுடன் தியேட்டரின் அனைத்துக் கதவுகளையும் பூட்டிவிட்டு ஒரு வழியில் மட்டும் பொதுமக்களை வெளியே வர அனுமதித்துள்ளனர்.
அப்போது, போலீஸிடமிருந்து தப்பிப்பதற்காக சிறுவர்களில் ஒருவன் ஜாக்கெட் ஒன்றை அணிந்துள்ளார். இருப்பினும் அவர் கையில் வைத்திருந்த தொப்பியின் மூலம் போலீஸார் அவரைப் பிடித்துள்ளனர். இதையடுத்து சிறுவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த சிறுவர்கள் ஜெயாநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், இருவரும் 14 வயது மட்டுமே ஆனவர்கள் என்பதும், பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கடைகளில் கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்த போலீஸார், அதனை சோதனை செய்தனர். அப்போது, அந்த வீடியோ அழிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, செல்போனில் உள்ள தரவுகளை மீட்க ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். விசாரணைக்குப் பிறகு சிறுவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, சிறுவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இதுதொடர்பான அறிக்கையை சிறுவர் நீதி வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மைனர்கள் என்பதற்காக அந்த சிறுவர்களை விட்டுவிடக் கூடாது. கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வீட்டை விட்டு பெண்கள் வெளியே செல்வதே பாதுகாப்பற்றதாக மாறிவிட்டது என்று பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications