கன்னட மொழி பெயர் பலகைக்காக வன்முறை! பெங்களூரில் மால்கள் மூடல்! பதற்றம்.. போலீஸ் பாதுகாப்பு!
பெங்களூர்: கன்னட மொழியில் பெயர் பலகைகள் வைக்காத வர்த்தக நிறுவனங்கள் மீது கன்னட அமைப்பினர் தாக்குதல்கள் நடத்துவதால் பெங்களூர் மாநகரில் பிரபல மால்கள் மூடப்பட்டுள்ளன. பெங்களூரில் பதற்றம் நிலவும் நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் கன்னட மொழிக்கு முன்னுரிமை தர வேண்டும் என்பது அம்மக்களின் வலியுறுத்தல். கடந்த வாரம் மார்வாரி பெண் ஒருவரை கன்னட மொழியில் பேச வலியுறுத்தி கன்னட அமைப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

மேலும் கர்நாடகாவில் கன்னட மொழியில்தான் பெயர் பலகைகளை வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இதனடிப்படையில் கர்நாடகாவில் வர்த்தக நிறுவனங்கள் தங்களது பெயர் பலகைகளில் 60% கன்னட மொழியில் எழுதி இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. பிப்ரவரி 28-ந் தேதிக்குள் கன்னட மொழியில் பெயர் பலகைகளை மாற்றாவிட்டால் வர்த்தக நிறுவனங்கள் உரிமங்கள் ரத்து செய்யப்படும் எனவும் பெங்களூர் மாநகராட்சி எச்சரித்திருந்தது.
இந்த நிலையில் கன்னட ரக்ஷண வேதிகே உள்ளிட்ட அமைப்பினர் இன்று பெங்களூரில் வன்முறையில் இறங்கினர். கன்னட மொழியில் பெயர் பலகைகள் இல்லாத பன்னாட்டு நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், ஷாப்பிங் மால்களின் பெயர் பலகைகளை அடித்து நொறுக்கினர். இந்த நிறுவனங்கள் மீதும் கன்னட ரக்ஷண வேதிகே அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இவற்றை போலீசாரும் கட்டுப்படுத்தவில்லை. போலீசார் கண்முன்னரேயே இந்த வன்முறைகளும் அரங்கேறின. அதேநேரத்தில் பெயரளவுக்கு இந்த வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கன்னடர்களின் வன்முறையைத் தொடர்ந்து பெங்களூர் நகரின் பிரபல மால்களான ஃபீனிக்ஸ் ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி, மால் ஆஃப் ஏசியா உள்ளிட்டவை மூடப்பட்டன. பெங்களூர் நகரின் எம்ஜி ரோடு உள்ளிட்ட பல இடங்களில் பெரும் பதற்றம் நிலவுகிறது. பெங்களுர் நகரில் பல இடங்களில் கன்னட அமைப்பினர் வன்முறையில் ஈடுபட்டு வருவதால் வர்த்தக நிறுவனங்கள் பலவும் அச்சத்தால் மூடப்படுகின்றன. இதனையடுத்து பெங்களூர் நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications