ஸ்டாலின் ஸ்டைலில் ராகுல்.. “முதல் நாளிலேயே”.. திமுக அரசின் திட்டம் கர்நாடகாவில் வாக்குறுதியாக!
பெங்களூர் : தமிழ்நாட்டில் திமுக அரசு அமைந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்திய திட்டத்தை கர்நாடகாவில் வாக்குறுதியாக அளித்துள்ளார் ராகுல் காந்தி. காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் முதல் நாளில் இருந்தே அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.
224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் 10-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதையடுத்து, பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கர்நாடகாவில் தீவிரமாகத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலானவற்றில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி வாக்குறுதி : காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து மங்களூருவில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, நாங்கள் ஏற்கனவே நான்கு தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளோம். நான் தற்போது மேலும் ஒரு வாக்குறுதியை அளிக்கிறேன். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைந்தால் முதல் நாளிலிருந்து பெண்கள் அரசு பேருந்தில் இலவச பயணம் செய்யும் திட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி ஏற்கனவே அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2,000 மாதாந்திர உதவித்தொகை, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் ஆகிய வாக்குறுதிகளை அளித்திருந்தது.
காங்கிரஸ் வாக்குறுதிகள் : மேலும், வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.3,000 மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1,500 வழங்கப்படும். மீனவர்களுக்கு ரூ.10 லட்சம் காப்பீடும் ரூ.1 லட்சம் வட்டியில்லா கடனும் வழங்கப்படும். மீன்பிடி படகுகளுக்கு ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.25 மானியம் வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்த திட்டங்கள் கர்நாடகாவில் அமையும் காங்கிரஸ் அரசின் முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே ஒப்புதல் அளிக்கப்படும் என ராகுல் காந்தி தெரிவித்தார். இந்நிலையில், பெண்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் திட்டத்தை காங்கிரஸ் ஆட்சி அமையும் நாளிலேயே செயல்படுத்துவோம் என ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.
ஸ்டாலின் ஸ்டைலில் : பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கும் திட்டம் ஏற்கனவே டெல்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முதல் நாளிலேயே இத்திட்டத்தை செயல்படுத்துவோம் என ராகுல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதியின்படி ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே மகளிருக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவச பயணம் திட்டத்தைச் செயல்படுத்த கையெழுத்திட்டார் முதல்வர் ஸ்டாலின். அதே ஸ்டைலில் கர்நாடகாவிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார் ராகுல் காந்தி.












Click it and Unblock the Notifications