கரண்ட் ஷாக்கில் சிக்கிய 4 பேர்.. யாத்திரையை நிறுத்தி மருத்துவமனைக்கு ஓடிய ராகுல்.. நெகிழ்ச்சி சம்பவம்
பெங்களூர்: ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் இன்று 4 பேர் மீது மின்சாரம் பாய்ந்த நிலையில் அவர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கே ராகுல் காந்தி சென்று நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். மேலும், அவர்களுக்கு தலா ரூ.1 லட்சத்தை நிவாரணம் வழங்குவதாக ராகுல் காந்தி கூறியதோடு, சிகிச்சை விபரங்கள் பற்றி கேட்டறிந்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.
காங்கிரஸ் தொண்டர்களை ஊக்குவிக்கும் வகையில் ராகுல் காந்தி சார்பில் கன்னியாகுமரில் இருந்து காஷ்மீர் வரை 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 150 நாட்கள் நடைபெறும் பாரத் ஜோடோ யாத்திரை துவங்கி நடைபெற்று வருகிறது.
கடந்த மாதம் 7 ம் தேதி கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபத்தில் துவங்கிய இந்த நடைப்பயணம் தமிழ்நாடு, கேரளாவை கடந்து தற்போது கர்நாடகத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது வரை ராகுல் காந்தி 1000 கிலோமீட்டரை கடந்துள்ளார்.

கர்நாடகாவில் பாரத் ஜோடோ யாத்திரை
தற்போது பாரத் ஜோடோ யாத்திரை கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது. இன்று 39வது நாளாக பாரத் ஜோடோ யாத்திரை துவங்கியது. கர்நாடகாவின் பல்லாரி மாவட்டத்தில் உள்ள சங்கனக்கல்லு கிராமத்தில் ராகுல் காந்தி பாதயாத்திரையை துவங்கினர். இந்த வேளையில் காங்கிரஸ் தொண்டர் காங்கிரஸ் கொடியை இரும்பு கம்பியில் கட்டிவைத்து அசைத்தார். இந்த கம்பி மின்வயரில் உரசியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த நபரை மின்சாரம் தாக்கியது. மேலும் அவருடன் நின்ற மேலும் 3 பேரின் மீதும் மின்சாரம் பாய்ந்தது. மின்சாரம் தாக்கி 4 பேரும் காயமடைந்தனர்.

ராகுல் காந்தி ஆறுதல்
இதையடுத்து 4 பேருக்கும்ஆம்புலன்சில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு பல்லாரி அருகே உள்ள மேல் சிகிச்சைக்காக அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என டாக்டர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே சம்பவம் குறித்து அறிந்த ராகுல் காந்தி உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 4 பேரையும் சந்தித்து கனிவாக நலம் விசாரித்தார்.

ரூ.1 லட்சம் நிவாரணம்
மேலும் அவர்களின் கைகளை பிடித்தும், தோளை தட்டிக்கொடுத்தும் ஆறுதல் கூறினார். அதோடு காயமடைந்த 4 பேரின் செலவுக்கும் தலா ரூ.1 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என ராகுல் காந்தி தெரிவித்தார். மேலும் காயமடைந்தவர்களின் நிலை என்ன? என்பது குறித்து பணியில் இருந்த மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டறிந்த ராகுல் காந்தி அவர்களின் உரிய சிகிச்சை அளிக்கும்படியும் கேட்டு கொண்டார்.

பேஸ்புக்கில் ராகுல் காந்தி கவலை
மேலும் இந்த சம்பவம் குறித்து ராகுல் காந்தி தனது பேஸ்புக் பக்கத்தில் கவலையை பகிர்ந்து கொண்டதோடு, கட்சி தொண்டர்களுக்கு அன்பான முறையில் அறிவுரை ஒன்றையும் வழங்கினார். இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது பேஸ்புக் பக்கத்தில், ‛‛இன்று யாத்திரையின் போது ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தது. கட்டி கொடியை கட்டியபோது நண்பர்கள் சிலரை மின்சாரம் தாக்கியது. இவர்கள் பல்லாரி மெக்கா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு பெரிய காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. மேலும் அவர்களின் மனஉறுதி அதிகமாக இருப்பதையும் பார்த்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.

பாதுகாப்பு-கவனமுடன் செயல்பட
இக்கட்டான சூழலில் கூட பாரத் ஜோடோ யாத்திரையில் மக்கள் உற்சாகமாக செயல்படுகின்றனர். இதற்கு சான்றாக காயமடைந்தவர்களுக்கு உடனடியாக உதவிகள் செய்யப்பட்டன. மேலும் அவர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. இந்தியாவை ஒருங்கிணைக்கும் வகையில் பாதயாத்திரையை நாம் முன்னெடுத்துள்ளோம். இதில் பங்கெடுத்து கடமையை நிறைவேற்றும்போது நாம் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும் என்பதை இந்த தருணத்தில் கூறி கொள்ள விரும்புகிறேன்'' என ராகுல் காந்தி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications