வந்தது புல்டோசர்.. வீடுகள், கடைகள் எதையும் விடவில்லை.. பெங்களூரில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிப்பு!
பெங்களூர்: பெங்களூரில் சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டது. இது பெரும் பிரச்சனையான நிலையில் முதல்வர் பசவராஜ் பொம்மையின் உத்தரவின்பேரில் வேறு வழியின்றி பெங்களூர் மாநகராட்சி நிர்வாகம் புல்டோசர் நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
கர்நாடகத்தில் ஆகஸ்ட் மாதம் மற்றும் செப்டம்பர் மாதம் துவக்கத்தில் கனமழை பெய்தது. வழக்கத்தை விட அதிகளவில் மழை பெய்ததால் பல இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. சில இடங்களில் மழைநீர் தேங்கி நீண்டநாட்கள் வடியாமல் இருந்தன.
குறிப்பாக கர்நாடக தலைநகர் பெங்களூரிலும் வழக்கத்தை விட அதிகளவில் மழை பெய்தது. இதனால் பெங்களூர் நகரின் சில இடங்களும் வெள்ளம், மழைநீரால் பாதிக்கப்பட்டது. ஆகஸ்ட் 30ம் தேதி மற்றும் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் கனமழை கொட்டித்தீர்த்தது. ஞாயிற்றுக்கிழமை ஒருநாளில் மட்டும் 130 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகி இருந்தது.

வெள்ளம் பாதித்த பகுதிகள்
இதனால் பெங்களூரில் பல இடங்களில் மழை நீர் தேங்கியது. இதனால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர். தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது. சில இடங்களில் உள்ள குடிசை வீடுகள் முதல் மாடமாளிகைகளை மழைநீர் சூழ்ந்தது. அதாவது பெங்களூர் மாநகராட்சியின் மகாதேவபுரா மண்டலத்தில் தான் வெள்ள பாதிப்பு அதிகமாக இருந்தது. மகாதேவபுரா, பெல்லந்தூர், மாரத்தஹள்ளி, சார்ஜாபுரா, கேஆர்புரம் பகுதிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டன.

ரூ.250 கோடி நஷ்டம்
பெங்களூரில் 100க்கும் அதிகமான லேஅவுட்களை வெள்ளம் சூழந்தது. இதனால் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ளவர்கள் கூட வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. இதுதவிர சந்தாபுரா, பொம்மனஹள்ளி, இந்திரா நகர், மாரத்தஹள்ளி, வர்த்தூர், ஒயிட்பீல்டு, அவுட்டர் ரிங் ரோடு உள்பட ஐடி நிறுவனங்கள் உள்ள இடங்களில் மழை நீர் புகுந்து கொண்டது. இதனால் ஐடி நிறுவன ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஊழியர்கள் நிறுவனத்துக்கு செல்ல முடியவில்லை. இதனால் ஐடி நிறுவனங்களுக்கு ரூ.250 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

முதல்வர் போட்ட உத்தரவு
பெங்களூர் நகரில் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டது தான் இதற்கு காரணம் என கூறப்பட்டது. இதனால் பெங்களூர் நகரில் உள்ள ஏரி, கால்வாய் உள்பட நீர்வழித்தடங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவு பிறபித்தார். இதையடுத்து அதற்கான பணிகளை பெங்களூர் மாநகராட்சி நிர்வாகம் முன்னெடுத்தது.

புல்டோசர் நடவடிக்கை
இந்த நிலையில் மகாதேவபுரா மண்டலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை நேற்று அதிகாரிகள் மேற்கொண்டனர். மகாதேவபுரா மண்டலத்தில் உள்ள மாரத்தஹள்ளி, சின்னப்பனஹள்ளி, பசவனபுரா, ஏஇசிஎஸ் லோ-அவுட், முனேகொலலு உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் கட்டங்கள் புல்டோசர் வாகனங்கள் மூலம் அகற்றப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மற்றும் வீடுகளின் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் மாநகராட்சி அதிகாரிகள் பின்வாங்கவில்லை. அதோடு போலீசாரின் உதவியுடன் மாநகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடித்து அகற்றினர்.

உரிமையாளர்கள் கண்ணீர்
இதன் தொடர்ச்சியாக இன்று 2வது நாளாக மகாதேவபுரா மண்டலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை புல்டோசர் வாகனங்கள் மூலம் மாநகராட்சி அதிகாரிகள் செய்து வருகின்றனர். 2வது நாள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது மாடி வீடுகள் உள்பட ஏராளமான வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. வீடு, கட்டடங்கள் இடிக்கப்பட்டதை பார்த்து அதன் உரிமையாளர்கள் கண்ணீர் வடித்தனர்.

கால்வாய்கள் விரிவாக்கம்
இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‛‛பெங்களூர் நகரில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றும் பணி நடத்தப்பட்டு வருகிறது. இந்த பணி தொடரும்'' என்றனர். மேலும் மாநகராட்சியின் கமிஷனர் துஷார் கிரிநாத் கூறுகையில், ‛‛ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிக்கப்பட்ட பகுதியில் மழைநீர் விரைவாக வெளியேறும் வகையில் சாக்கடை கால்வாய் விரிவாக்கம் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்'' என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications