கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கிறதா பாஜக? சித்தராமையா- டிகே சிவக்குமார் மோதலுக்கு நடுவே பிரகலாத் ஜோஷி பதில்
பெங்களூர்: கர்நாடகாவில் முதல்வராக இருக்கும் சித்தராமையாவை நீக்கிவிட்டு டிகே சிவக்குமாரை முதல் அமைச்சராக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. டிகே சிவக்குமாரின் ஆதரவாளர்கள் முதல்வரை மாற்றியே ஆக வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். இது கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்தி கர்நாடகாவில் பாஜகவை ஆட்சியை பிடிக்க முடியுமா? பாஜகவின் அடுத்தக்கட்ட நகர்வு பற்றி மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி முக்கிய விஷயத்தை கூறியுள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக சித்தராமையா உள்ளார். துணை முதல்வராகவும், கர்நாடகா காங்கிரஸ் தலைவராகவும் டிகே சிவக்குமார் உள்ளார். கடந்த 2023ல் ல் நடந்த சட்டசபை தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி அரியணை ஏறியது. இரண்டரை ஆண்டு காலம் சித்தராமையா முதல்வராக தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் தான் தற்போது முதல்வர் பதவி மீது டிகே சிவக்குமார் கண்வைத்துள்ளார். அடுத்த இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவியை டிகே சிவக்குமாருக்கு வழங்க வேண்டும் என்று அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். டெல்லியில் முகாமிட்டு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்து பேசியுள்ளனர்.
இப்போது மல்லிகார்ஜூன கார்கே பெங்களூர் வந்துள்ளார். நேற்று முதல்வர் சித்தராமையா சந்தித்து பேசினார். இன்று டிகே சிவக்குமார் சந்தித்து பேச உள்ளார். இதனால் கர்நாடகாவில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் பாஜகவை சேர்ந்த கர்நாடகாவின் பெலகாவி நாடாளுமன்ற தொகுதியின் பாஜக எம்பி ஜெகதீஷ் ஷெட்டர் அளித்த பேட்டியில், ‛‛மகாராஷ்டிராவின் ஏக்நாத் ஷிண்டே போல் கர்நாடகாவில் முதல்வர் உருவாகிறார்'' என்று கூறினார். இதனால் சித்தராமையா, டிகே சிவக்குமார் இடையேயான போட்டியை பயன்படுத்தி கர்நாடகாவில் பாஜக ஆட்சியை கைப்பற்ற திட்டமிட்டு காய் நகர்த்துகிறதா? என்ற கேள்வி எழுந்தது.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி விளக்கம் அளித்துள்ளார். கர்நாடகாவின் உப்பள்ளி - தார்வார் நாடாளுமன்ற தொகுதியின் எம்பியாக இருக்கும் அவர் கூறியதாவது: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனது பதவிக்காலத்தை முழுமையாக முடிக்க வேண்டும். ஏனென்றால் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு முழு மெஜாரிட்டி கொடுத்துள்ளனர். எந்த சூழலிலும் பாஜக கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கும் சாத்தியக்கூறு இல்லை.
மகாராஷ்டிராவில் நடந்தது விஷயம் வேறு. அங்கு கடந்த 2020ம் ஆண்டில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் சென்ற. அப்போது பாஜக தான் தனிப்பெரும் கட்சியாக இருந்தது. பிறகு 2022ல் ஏக்நாத் ஷிண்டே எங்களுடன் வந்தார். முதல்வராக நியமிக்கப்பட்டார். ஆனால் கர்நாடகாவில் அப்படியான நிலை இல்லை. நாங்கள் எதிர்க்கட்சியாகவே செயல்படும் நிலைப்பாட்டில் இருக்கிறோம்.
மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு, நிர்வாகம் முற்றிலுமாக சீர்க்குலைந்துள்ளது. விவசாயிகளும், மக்களும் நெருக்கடியில்தவிக்கின்றனர். ஆனால் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் டெல்லிக்கு பயணம் செய்கிறார்கள். மறுபுறம் துணை முதல்வர் டிகே சிவகுமார், சிறையில் உள்ள எம்எல்ஏக்களையும் கூட சந்திக்கிறார்.
இப்போது அனைத்து எம்எல்ஏக்களையும் அவர் ஏன் நினைவில் கொள்கிறார் என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்'' என்றார். இதன்மூலம் சித்தராமையா - டிகே சிவக்குமார் இடையேயான முதல்வர் பதவி போட்டியால் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் குழப்பம் வந்தாலும் பாஜக ஆட்சியை பிடிக்காது என பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications