விடாமல் துரத்தும் "சனாதன" சர்ச்சை.. உதயநிதி நேரில் ஆஜராக கர்நாடக நீதிமன்றம் சம்மன்! அடுத்து என்ன
சென்னை: சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கு எதிராகக் கர்நாடகாவில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், இதில் நேரில் ஆஜராக கர்நாடக நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்தாண்டு திமுக இளைஞர் அணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சென்னை காமராஜர் அரங்கில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டார்.

அப்போது உதயநிதி சனாதனம் குறித்துப் பேசியது மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. இது தொடர்பாக நாட்டில் பல்வேறு இடங்களிலும் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகப் புகார் அளிக்கப்பட்டது.
உதயநிதி சனாதனம்: அந்த மாநாட்டில் பேசிய உதயநிதி, "இந்த மாநாட்டின் தலைப்பைச் சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல்.. 'சனாதன ஒழிப்பு மாநாடு' என்று போட்டுள்ளார்கள்.. சில விஷயங்களை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா ஆகியவற்றை நாம் எதிர்க்கக் கூடாது. அவற்றை ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித் தான் இந்த சனாதனம்.
சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்... சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்பது சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனம் என்றால் நிலையானது.. மாற்ற முடியாதது. யாரும் கேள்வி கேட்க முடியாது என்று அர்த்தம்.. ஆனால் எதுவுமே நிலையானது கிடையாது.. நாம் அனைத்தையும் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம்தான் இடதுசாரிகளும் திமுகவும்" என்று பேசியிருந்தார்.
விளக்கம்: அவரது இந்தப் பேச்சுக்கு அப்போதே சர்ச்சை எழுந்தது. உதயநிதி பேச்சு குறித்து நாட்டில் பல்வேறு இடங்களிலும் புகார் அளிக்கப்பட்டது. இருப்பினும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பேச்சில் இருந்து பின்வாங்கவில்லை.. இது குறித்து அவர் கூறுகையில், "சனாதனம் என்ற கோட்பாட்டை ஒழிக்க வேண்டும் என்று தான் பேசினேன். இனிமேலும் அப்படித்தான் பேசுவேன். எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்" என்று கூறியிருந்தார்.
நேரில் ஆஜராக சம்மன்: இருப்பினும், சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கு எதிராகக் கர்நாடகாவில் வழக்கு தொடரப்பட்டது.. இந்த வழக்கில் தான் உதயநிதி நேரில் ஆஜராக கர்நாடக நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் மார்ச் 4ஆம் தேதி ஆஜராகுமாறு உதயநிதிக்குச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பரமேஷ் என்ற நபர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
கடந்தாண்டு நடந்த 5 மாநில தேர்தலிலும் சனாதனம் குறித்த உதயநிதியின் பேச்சு காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. லோக்சபா தேர்தல் சமயத்திலும் உதயநிதியின் பேச்சு குறித்து பாஜக பிரச்சாரம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications