ஒரு இந்து பெண்ணை இழந்தால்.. 10 முஸ்லிம் பெண்களை கவருங்கள்.. ஸ்ரீராம் சேனா தலைவர் சர்ச்சை பேச்சு
"பாஜகவின் போலி இந்துத்துவாவை நான் ஆதரித்திருந்தால், பல விஷயங்களை நான் சாதித்திருக்கலாம். ஆனால், அதில் எனக்கு விருப்பம் இல்லை"
பெங்களூர்: லவ் ஜிகாத்தில் ஒரு இந்து பெண்ணை இழந்தால், 10 முஸ்லிம் பெண்களை இந்து ஆண்கள் காதல் வலையில் வீழ்த்த வேண்டும் என்று ஸ்ரீராம் சேனா தலைவர் ப்ரமோத் முத்தாலிக் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் சமீபகாலமாக முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் இருந்து முஸ்லிம்களை ஒழிக்க வேண்டும் என பகிரங்கமாக பேசும் அளவுக்கு நிலைமை சென்று கொண்டிருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்பு கர்நாடகா மாநிலம் பெலகாவிக்கு வருகை தந்த பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்குர், இந்துக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் ஆயுதங்களை வைத்திருக்க வேண்டும் என பேசியது பெரும் புயலை கிளப்பியது. இதேபோல, லவ் ஜிகாத் என்ற பெயரில் முஸ்லிம்களுக்கு எதிரான பேச்சுகள் தற்போது அதிகரித்திருக்கின்றன.

லவ் ஜிகாத் அரசியல்
இந்து பெண்களை முஸ்லிம் ஆண்கள் திட்டமிட்டு தங்கள் காதல் வலையில் விழ வைத்து, அவர்களை மதமாற்றம் செய்வதாக பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இதற்கு அவர்கள் 'லவ் ஜிகாத்' என பெயரும் வைத்துள்ளனர். இந்த லவ் ஜிகாத்துக்கு எதிராக மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும் என பாஜக மூத்த தலைவர்களும், மத்திய அமைச்சர்களும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

"ஒரு இந்து பெண்ணை இழந்தால்"..
அந்த வகையில், ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் ப்ரமோத் முத்தாலிக் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையாகியுள்ளது. கர்நாடகா மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ப்ரமோத் முத்தாலிக் கலந்துகொண்டார். அவர் பேசியதாவது: நம் நாட்டில் நடைபெறும் லவ் ஜிகாத் குறித்து உங்களுக்கு தெரிந்திருக்கும் என நினைககிறேன். இந்து பெண்களை காதலித்து மதம் மாற்றும் செயல்கள் அதிகரித்து வருகின்றன. லவ் ஜிகாத்தில் ஒரு இந்து பெண்ணை நாம் இழந்தால், 10 முஸ்லிம் பெண்களை இந்து ஆண்கள் காதல் வலையில் வீழ்த்த வேண்டும்.

எச்சரிக்கை
அவ்வாறு நீங்கள் செய்தால் உங்களுக்கு ஸ்ரீராம் சேனா அமைப்பு துணை நிற்கும். உங்களுக்கான வேலை வாங்கித் தருவதில் இருந்து அனைத்து சமூக பாதுகாப்புகளையும் ஸ்ரீராம் சேனா வழங்கும் என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். லவ் ஜிகாத் என்ற பெயரில் நமது இந்து பெண்களை ஏமாற்றுபவர்களுக்கு இப்படிதான் நாம் எச்சரிக்கை விடுக்க வேண்டும். அப்போதுதான் அந்த வலி அவர்களுக்கு தெரியும்.

"பாஜக, ஒரு போலி இந்துத்துவா"
என் மீது 109 வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை பாஜக ஆட்சியில் பதிவு செய்யப்பட்டவை. இந்துத்துவா கொள்கையில் தீவிரமாக இருப்பதால் நமது மக்களே எனக்கு பல இடையூறுகளை தருகிறார்கள். அதனால்தான், வரும் கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்த்து உடுப்பியின் கர்கலா தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளேன். பாஜக சார்பில் போட்டியிடுமாறு அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் என்னை கேட்டுக்கொண்டார்கள். ஆனால் அதற்கு நான் ஒத்துக்கொள்ளவில்லை. பாஜகவின் போலி இந்துத்துவாவை நான் ஆதரித்திருந்தால், பல விஷயங்களை நான் சாதித்திருக்கலாம். ஆனால், அதில் எனக்கு விருப்பம் இல்லை. இவ்வாறு ப்ரமோத் முத்தாலிக் பேசினார்.












Click it and Unblock the Notifications