உக்ரைனில் இந்திய மாணவர் பலி: நீட் தேர்வுக்கு எதிராக வலுக்கும் கோஷம்.. சித்தராமையாவும் போர்க்கொடி
பெங்களூரு: உக்ரைனில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய மாணவனின் மரணத்துக்கு காரணம் நீட் தேர்வுதான் என கருத்து தெரிவித்துள்ளார் கர்நாடக மாநில எதிர்கட்சித் தலைவர் சித்தராமையா.
உக்ரைனில் ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், இந்திய மாணவர் நவீன் சுட்டுக் கொல்லப்பட்டார். மளிகை பொருள்களை வாங்குவதற்காக ஒரு கடை வாசலில் நின்றிருந்த போது அவர் மீது துப்பாக்கிச் சூட்டை ரஷ்ய ராணுவம் நடத்தியதாக இந்திய மாணவருடைய நண்பர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் இருந்து பல இந்தியர்கள் அண்டை நாடுகளுக்கு வந்து, அங்கிருந்து இந்தியாவுக்கு மீட்கப்பட்டு வருகின்றனர். ஆனால் சில இந்திய மாணவர்கள் உக்ரைனைவிட்டு வெளியே வரமுடியாமல் அங்கேயே இருக்கிறார்கள்.

நவீன்
உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரில் மருத்துவம் படிக்கும் மாணவர் நவீன் சேகரப்பா. இவர் கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் தாலுகா சாலக்கேரி கிராமத்தை சேர்ந்தவர். 20 வயதான நவீன் உக்ரைனில் உள்ள பல்கலைக்கழக்கில் 4 ஆவது ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். உக்ரைனில் போர் நடந்து வருவதால், அங்கிருக்கும் பதுங்கு குழியில் தங்கி வந்தார் நவீன். இந்நிலையில் நேற்று ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்திய போது இந்திய மாணவர் நவீன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

நவீன் தந்தை
இந்நிலையில் உயிரிழந்த மாணவர் நவீனின் தந்தை சேகரப்பா ஞானகவுடா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''எனது மகன் நவீன் பி.யூ.சி-யில் 97 சதவிகித மதிப்பெண் பெற்றிருந்தான். ஆனாலும் அவனால் கர்நாடகாவில் மருத்துவ படிப்புக்கான இடம் கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தாலும் ஒரு சீட்டுக்காக கோடிக்கணக்கில் பணம் செலவழிக்க வேண்டி இருக்கிறது. ஆனால் உக்ரைன் போன்ற வெளிநாடுகளில் இதே படிப்புக்கு குறைவான செலவில் கற்றுத் தரப்படுகிறது. அதனால் தான் என் மகனை மருத்துவம் படிக்க உக்ரைனுக்கு அனுப்பி வைத்தேன்'' என்று பேசி இருந்தார்.

சித்தராமையா
இந்நிலையில் கர்நாடக மாநில எதிர்கட்சித் தலைவர் சித்தராமையா நவீன் இறப்பு குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் ''மாணவர் நவீன் இறப்பு துரதிருஷ்டவசமானது. நவீன் குடும்பத்தாருக்கு என்னுடைய இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். உக்ரைனில் இருக்கும் பிற நாட்டினரை வெளியேற சொல்லி இரு நாடுகளும் எச்சரித்திருந்தன. அப்போதெல்லாம் இதுகுறித்து மத்திய அரசு எதுவும் பேசவில்லை.

பாஜக தான் காரணம்
போர் குறித்து எச்சரித்தும் இந்த மத்திய அரசு தூங்கிக்கொண்டிருந்தது. அவர்கள் விழிப்போடு இருந்திருந்தால், நவீன் பிழைத்திருப்பான். பிரதமர் மோடியின் தோல்வியால் தான் இது நடந்தது. மாணவர் நவீனின் ரத்தம் உங்கள் கைகளில் இருக்கிறது. மாணவர்கள் போரைப்பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருந்தபோது, அலட்சியமாக இருந்ததை ஏற்க முடியாது.
Recommended Video

நீட் எனும் பேரழிவு
வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள், இந்தியாவில் தகுதித் தேர்வில் தேர்சி பெறுவதில்லை என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். இது பொறுப்பில்லாத பேச்சு. நீட் எனும் பேரழிவால் இது நிகழ்ந்திருக்கிறது. ஆனால் இது குறித்து இப்போது பேச முடியாது. ஆனால் உத்தரப்பிரதேச தேர்தலுக்காக மீட்புப் பணிக்கு ஆபரேஷன் கங்கா என்று பெயர்வைத்து மாணவர்களை அழைத்துவருவதை எப்படி பார்ப்பது'' என்று சித்தராமையா தெரிவித்துள்ளார். சித்தராமையா போலவே கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியும் நவீன் மரணத்துக்கு நீட் தான் காரணம் என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
