கர்நாடகாவில் கல்லறைகளை தோண்டி.. தண்ணீர் ஊற்றும் கிராம மக்கள்.. வினோத நடைமுறை! ஏன் தெரியுமா?
பெங்களூர்: இந்தியா மத மற்றும் சமய நம்பிக்கைகளை இறுக்கமாக கொண்டிருக்கும் நாடு. எந்த அளவு எனில், மழை வேண்டி புதைக்கப்பட்ட பிணங்களின் வாயில் நீரை ஊற்றி பிரார்த்தனை செய்யும் அளவுக்கு இந்த நம்பிக்கை மக்களை ஆட்கொண்டுள்ளது.
கர்நாடக மாநிலம் தற்போது ஏறத்தாழ வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில்தான் உள்ளது. ஏனெனில் மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆங்காங்கே ஏற்பட்டுள்ளது. இப்படியான நிலையில் ஒரேயொரு கிராமத்தில் மட்டும் மழை பெய்யவே இல்லை. அட ஆமாங்க. நெஜமாவே மழை பெய்யல.

விஜயபுரா
கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள கலகேரி கிராமம்தான் அது. வறண்ட பூமி, நிலங்கள் வெடிப்புற்று ஆங்காங்கே காணப்படும் நிலை. இதை பார்த்து பயந்த கிராம மக்கள் என்னடா இது நம்ம ஊருக்கு வந்த சோதனை என கண்ணத்தில் கை வைத்து வாயை பிளந்து உட்கார்ந்து விட்டனர். அப்போது ஊருக்குள் இருந்த வயதானவர் ஒருவர் ஒரு பழைய யோசனையை சொன்னர். இதை கேட்ட மாத்திரத்தில் சோகத்தில் பிளந்த வாய்கள் அனைத்தும் ஆச்சரியத்தில் மீண்டும் பிளந்தன.

யோசனை
ஆமாங்க அந்த வயசான முதியவர் சொன்ன யோசனையை கேட்டா நீங்க கூட வாயை பொளப்பிங்க. ஊருக்குள்ள சமீபத்துல இறந்து போனவங்க கல்லறைய கண்டுபிடிச்சு இறந்தவர்களோட வாயில கொஞ்சம் தண்ணீ ஊத்தனும் அவ்வளவுதான். இந்த யோசனையை கிராமத்தினர் அனைவரும் அமர்ந்து பேசி செய்து முடிப்பது என சபதமெடுத்துக்கொண்டனர். அதன்படி கடந்த ஒரு மாதத்தில் இறந்தவர்களின் பெயர் பட்டியல் தயாரானது. பட்டியலில் உள்ளவர்களின் கல்லறையும் கண்டுபிடித்தாகிவிட்டது.

2 அடிக்கு பள்ளம்
அப்புறம் என்ன? கல்லறையில் படுத்துள்ளவர்களின் உறவினர்களை அழைத்து தலை எந்த பக்கம் என விசாரித்து சுமார் 2 அடிக்கு பள்ளமும் தோண்டப்பட்டது. அப்படி தோண்டப்பட்ட பள்ளத்தில் பைப் சொருகப்பட்டு டேங்கிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஏறத்தாழ 25க்கும் மேற்பட்ட கல்லறைகளில் ஓட்டையிட்டு தண்ணீர் பாய்ச்சியாகிவிட்டது. கடைசி கல்லறை இதுதான். அந்த நொடியில் ஓர் அற்புதம் நிகழ்ந்தது. எதிர்பாராத விதமாக அந்த கிராமத்தில் திடீரென தூறல் விழத் தொடங்கியது. மக்களின் நம்பிக்கை மீண்டும் துளிர்க்க தொடங்கியது.

1,500 பேர் வசிக்கின்றனர்
இந்த கிராமத்தில் ஒட்டுமொத்தமாக சுமார் 1,500 பேர் வசிக்கின்றனர். துவரம் பருப்பு உள்ளிட்ட பணப்பயிர்களை மக்கள் பயிரிட்டு விவசாயம் செய்கின்றனர். இப்படியான கிராமத்தில் இந்த விநோத வழக்கம் பின்பற்றப்படுவதற்கும் ஒரு காரணம் உண்டு. பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கிராமத்தில் முதியவர் ஒருவர் வாய் திறந்தவாறு இயற்கை எய்திவிட்டார். பின்னர் அவரை ஊர் மக்கள் சேர்ந்து அடக்கம் செய்துள்ளனர். இதனையடுத்து அந்த ஊரில் பஞ்சம் தலைவிரித்து ஆடியுள்ளது.

அடக்கம் செய்தல்
இது குறித்து பூசாரிகளிடம் அருள் கேட்டபோது, இறந்து போன முதியவர் தாகத்தால்தான் உயிரிழந்ததாகவும், அவரது வாயை யாரும் மூடாமல் அடக்கம் செய்ததால்தான் இந்த பஞ்சம் என கூறியுள்ளார். இதனையடுத்து கிராம மக்கள் உயிரிழந்தவர்களுக்கு தண்ணீரை கொடுக்கும் நம்பிக்கையை பின்பற்றி வந்துள்ளனர். அதன் பலனாகவும் மழையும் அவ்வப்போது பெய்து வந்துள்ளது. எனவே இதனை தங்களது வாழ்வின் ஓர் அங்கமாகவும் அவர்கள் பின்பற்ற தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications