அலறவிடும் வாட்டாள் நாகராஜ்.. நாளை கர்நாடகா பந்த்.. எந்த சேவைகள் இருக்கும்? எதுவெல்லாம் இருக்காது?
பெங்களூர்: தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதை எதிர்த்து கன்னட அமைப்புகளை சேர்ந்தவர்கள் நாளை கர்நாடகா முழுவதும் பந்த் நடத்த உள்ளனர். இதனால் ஒட்டுமொத்த கர்நாடகாவும் முடங்கும் நிலை உருவாகி உள்ளது. இந்நிலையில் தான் நாளைய பந்த்தில் பெங்களூர் உள்பட கர்நாடகா முழுவதும் எந்தெந்த சேவைகள் இருக்கும்? எந்தெந்த சேவைகள் இருக்காது? என்பது குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு-கர்நாடகா இடையேயான காவிரி நீர் பங்கீடு பிரச்சனை என்பது விஸ்வரூபமெடுத்துள்ளது. கர்நாடகாவில் மழை இல்லை. அணைகளில் தண்ணீர் இல்லை எனக்கூறி கர்நாடகா தமிழகத்துக்கான நீரை கொடுக்க மறுத்து வருகிறது. இருப்பினும் தமிழக அரசு காவிரி நீர் மேலாண்மை ஆணையம், உச்சநீதிமன்றத்தை அணுகி தமிழகத்துக்கான நீரை பெற்று வருகிறது.

இந்நிலையில் தான் நேற்று முன்தினம் காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் நடந்தது. இதில் தமிழகத்துக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீரை இன்று முதல் அடுத்த மாதம் 15ம் தேதி வரை கர்நாடகா திறக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது கர்நாடகாவுக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே தான் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கேஆர்எஸ் அணை அமைந்துள்ள மண்டியா மாவட்டத்தில் சமீபத்தில் பந்த் நடந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் பெங்களூரில் கர்நாடகா ஜல சம்ரக்சன சமிதி தலைமையில் பந்த் நடந்தது. இதன் தொடர்ச்சியாக நாளை கன்னட சங்கங்களை ஒன்றாக இணைத்து கன்னட சலுவளி கட்சியின் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கர்நாடகா முழுவதும் பந்த் நடத்தப்பட உள்ளது.
இந்த பந்த் சந்தர்ப்பத்தில் வாட்டாள் நாகராஜ் தலைமையிலான போராட்டக்காரர்கள் பெங்களூரில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட செல்கின்றனர். இதுகுறித்து வாட்டாள் நாகராஜ் கூறுகையில், ‛‛பெங்களூரில் ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்படும். எங்கள் பந்த்துக்கு போலீசார் நிபந்தனைகள் விதிக்கக்கூடாது. இந்த பந்த் ரொம்ப சீரியஸாக இருக்கும். அரசு பஸ்கள், ஓட்டல், ரெஸ்டாரண்டுகள், திரையரங்குகள் இயங்காது. பெங்களூரில் விமான சேவைகளை முடக்குவோம்'' என ஆக்ரோஷமாக தெரிவித்தார்.
இந்நிலையில் தான் நாளை நடக்கும் கர்நாடகா பந்த்தில் எந்தெந்த சேவைகள் வழக்கம்போல் கிடைக்கும். எந்தெந்த சேவைகள் இருக்காது என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பெங்களூரில் நாளை மெட்ரோ ரயில் வழக்கம்போல் இயங்கும். அதேபோல் பெங்களூர் உள்பட கர்நாடகா முழுவதும் மருத்துவமனைகள், மருந்து கடைகள் (மெடிக்கல் ஷாப்), கிளீனிக்குகள், அரசு அலுவலகங்கள், சரக்கு போக்குவரத்து, வங்கிகள் வழக்கம்போல் இயங்கும்.
மாறாக வாடகை கார்கள், ஆட்டோக்கள் இயங்காது. செல்போன் செயலி அடிப்படையில் முன்பதிவு செய்வதற்கான ஓலா, உபர் உள்ளிட்ட சேவைகளும் நாளை கிடைக்காது. மேலும் நகரில் கடைகள், மால்கள், தெருவோர கடைகள் மூடப்படும். சினிமாத்துறையினர் நாளைய பந்த்துக்கு ஆதரவு கொடுப்பதால் தியேட்டர்கள், மல்டிபிளக்ஸ்கள் மூடப்பட வாய்ப்புள்ளது. மேலும் ஹோட்டல், ரெஸ்டாரண்ட்டுகள் செயல்படாது.
இதுதவிர கேஎஸ்ஆர்டிசி, பிஎம்டிசி பஸ்களும் நாளைய தினம் இயங்காது என கூறப்படுகிறது. இதுதவிர நாளைய தினம் பெங்களூர் விமான நிலையம் முற்றுகையிடப்படும் என கூறப்பட்டுள்ளது. இதனால் விமான சேவைகளும் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அதோடு தேசிய நெடுஞ்சாலைகள் ஆங்காங்கே மறிக்கப்பட உள்ளதால் வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications