ஓசூர் மக்களுக்கு "கெட்ட" செய்தி! பெங்களூர்-ஓசூர் மெட்ரோவுக்கு கர்நாடகாவில் கிளம்பிய பயங்கர எதிர்ப்பு
பெங்களூர்: பெங்களூர்- ஓசூர் மெட்ரோ நீட்டிப்பு குறித்து பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், திடீரென இந்த மெட்ரோ திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தமிழ்நாட்டின் எல்லையில் அமைந்துள்ள முக்கியமான தொழில் நகரம் ஓசூர்.. இது பெங்களூரில் இருந்து வெறும் சில கிமீ தொலைவில் அமைந்துள்ளது. ஓசூரில் வசிக்கும் மக்கள் பலரும் தினசரி வேலைக்காகப் பெங்களூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிக்குச் செல்வார்கள்.

இருப்பினும் சாலை மார்க்கமாகச் செல்ல வேண்டி இருப்பதால் வாகன நெரிசல் காரணமாக டிராபிக் பிரச்சினை எல்லாம் ஏற்படுகிறது. இதைத் தீர்க்கும் வகையிலேயே தொழில் நகரான ஓசூர் மற்றும் ஐடி நகரமான பெங்களூரையும் இணைக்கும் மெட்ரோ திட்டம் முன்மொழியப்பட்டது.
மெட்ரோ: நாட்டிலேயே இரு மாநிலங்களுக்கு இடையே மெட்ரோ அமைவது இதுவே முதல்முறை. இது இப்பகுதியின் வளர்ச்சியை நிச்சயம் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த மெட்ரோ பெங்களூரில் உள்ள பொம்மசந்திரா என்ற பகுதியையும் ஓசூரையும் இணைக்கும். சுமார் 20 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் 11.7 கிமீ கர்நாடகாவிலும்.. 8.8 கிமீ தமிழ்நாட்டிலும் அமையும். இது நிச்சயம் இந்தப் பகுதியின் வளர்ச்சிக்குப் பெரிய பூஸ்ட்டை தரும்.
இருப்பினும், இந்த மெட்ரோவுக்கு திடீரென எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சென்னை மெட்ரோ நிர்வாகம் முன்மொழிந்த இந்த திட்டத்திற்குப் பெங்களூருவில் உள்ள கன்னட ஆதரவு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினால் மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எதிர்ப்பு: இது கன்னடர்களின் அடையாளத்திற்கே அச்சுறுத்தலாக மாறும் என்பதே அவர்கள் சொல்லும் முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. சென்னை மெட்ரோ முன்மொழிந்த இந்தத் திட்டம் கன்னடர்களுக்குப் பெரியளவில் நன்மையைத் தராது என்பதே அவர்கள் வாதம். இந்த மெட்ரோ பயன்பாட்டிற்கு வந்தால், தமிழர்கள் மிக எளிதாகக் கர்நாடகாவிற்குள் வந்து செல்ல முடியும். இது பெங்களூரில் கர்நாடக மக்களின் இருப்பையே பாதிக்கக்கூடும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.
சென்னையில் உள்ள ஐடி நிறுவனங்கள் தமிழகத்தில் வசிக்கும் கர்நாடக மக்களுக்கு போதிய வேலை வழங்குவதில்லை என்றும் அவர்கள் விமர்சிக்கின்றனர். ஏற்கனவே, காவேரி மற்றும் மேகதாது விவகாரங்களில் இரு மாநிலங்களுக்கும் இடையே பதற்றமான சூழல் இருக்கிறது. இவை அனைத்தையும் சுட்டிக் காட்டியே கன்னட அமைப்புகள் இந்த மெட்ரோ திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

கன்னட அமைப்பினர்: இது குறித்து கன்னட அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், "பெங்களூர் மெட்ரோவை பெங்களூருக்குள் மட்டுமே இருக்க வேண்டும்.. இந்த மெட்ரோ திட்டத்தை ஓசூர் வரை நீட்டிப்பது தேவையற்றது.. பெங்களூருக்கு அருகில் இருப்பதால் மட்டுமே ஓசூர் ஏற்கனவே நல்ல வளர்ச்சியைப் பெற்றுவிட்டது. ஓசூரில் இதனால் பல வேலைகள் உருவானாலும் கூட அது முழுக்க முழுக்க தமிழர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. எனவே பெங்களூர் மெட்ரோவை நீட்டிக்கக் கூடாது" என்று கூறுகின்றனர்.
இன்னும் சிலர் மேகதாது திட்டத்திற்குத் தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், மெட்ரோ திட்டத்தை ஓசூர் வரை நீட்டிக்க அனுமதி அளிக்கக் கூடாது என்கிறார்கள். இந்தத் திட்டத்தைக் கர்நாடக முதல்வர் சித்தராமையா தடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் மாநிலம் தழுவிய போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications