ஓசூர் பவித்ரா.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயரில் பெங்களூருக்கே அடித்த விபூதி.. ஆடிப்போன போலீஸ்
பெங்களூர்: பெங்களூர், ஓசூர் சுற்று வட்டார பகுதிகளில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயரை பயன்படுத்தி கடன் தருவதாக ரூ.2 கோடி மோசடி செய்த விவகாரத்தில் தமிழக பெண் உள்பட 6 பேரை பெங்களூர் போலீசார் கைது செய்தனர்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ரிசர்வ் வங்கியின் பெயர்களை பயன்படுத்தி ரூ.2 கோடி மோசடி செய்திருக்கிறது ஒரு கும்பல். அந்த கும்பலை சேர்ந்தவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர்களை பற்றி தகவல்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். அதனை இப்போது பார்ப்போம்.

பெங்களூரு புறநகர் பகுதியான ஆனேக்கல் தாலுகாவில் உள்ள சந்தாப்புரா, அத்திப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் புளூ விங்க்ஸ் என்ற அறக்கட்டளை பெயரில் சோசியல் மீடியாக்களில் நூதனமான முறையில் ஒரு விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது. அந்த நிறுவனத்தை சேர்ந்த 25 வயதாகும் பவித்ரா என்ற இளம் பெண் வெளியிட்டிருந்தார். அவர் வெளியிட்ட விளம்பரத்தில், தங்கள் அறக்கட்டளை நிறுவனத்திற்கு மத்திய அரசு சார்பில் நிதித்துறையின் கீழ் ரூ.17 கோடி விடுவிக்கப்பட்டிருக்கிறது. அந்த நிதியை மானிய முறையில் பொதுமக்களுக்கு கடனாக வழங்க ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இதற்காக தங்கள் நிறுவனத்தில் ரூ.10 லட்சம் கடன் பெற்றால், ரூ.5 லட்சத்தை அரசே மானியமாக கடனை திரும்ப செலுத்திவிடும். மீதி ரூ.5 லட்சத்தை மட்டுமே கடன் வாங்கியவர்கள் செலுத்த வேண்டும் . இந்த கடன் திட்டத்தில் சேர விரும்புவோர் முன்தொகை வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வீடியோவை பார்த்த சந்தாப்புரா, அத்திப்பள்ளி மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் மற்றும் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த மக்கள் பலரும் அந்த அறக்கட்டளையில் முன்பணம் கொடுத்து கடன் பெற விண்ணப்பித்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் சேர்ந்து சுமார் ரூ.2 கோடி வரை அறக்கட்டளையில் முன்பணம் கொடுத்துள்ளார்கள். எனினும் அவர்களுக்கு பல மாதங்கள் ஆகியும் டெபாசிட் தொகையோ, கடன் தொகையோ வழங்கப்படவில்லை. இதையடுத்து முன்பணம் செலுத்தி பணத்தை இழந்தவர்கள் சூர்யா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் தீவிரமா நடத்திய விசாரணையில் தமிழ்நாட்டின் ஓசூரை சேர்ந்த பவித்ரா என்ற பெண், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அறக்கட்டளை ஒன்றை நடத்துவதாக கூறி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ரிசர்வ் வங்கி பெயரை பயன்படுத்தி கடன் தருவதாக கூறி, பலரிடம் முன்பணம் பெற்று மோசடி செய்தது உறுதியானது.
இதையடுத்து ஓசூர் பவித்ரா உள்பட 13 பேர் மீது சூர்யா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், இந்த மோசடி சம்பவம் தொடர்பாக பவித்ரா, மஞ்சுளா, அமலேஷ் உள்பட 6 பேரை போலீசார் வெள்ளிக்கிழமை அன்று கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் 7 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications