பாஜகவுக்கு ஷாக்.. ஜனார்த்தன ரெட்டி ஆதரவாளர் தோல்வி.. சண்டூரில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி
பெங்களூர்: கர்நாடகாவில் அரசியலை ஆட்டிப்படைத்த ஜனார்த்தன ரெட்டி மீண்டும் பாஜகவில் சேர்ந்துள்ளார். இன்னும் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படாத நிலையில் அவரது எதிர்காலத்தை இன்று வெளியாகும் சண்டூர் சட்டசபை தொகுதியின் இடைத்தேர்தல் முடிவு நிர்ணயம் செய்யும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தான் அந்த தொகுதியில் போட்டியிட்ட பாஜகவின் ஜனார்த்தன ரெட்டியின் ஆதரவாளர் பங்காரு ஹனுமந்தா காங்கிரஸ் வேட்பாளர் அன்னபூர்ணாவிடம் தோல்வியடைந்துள்ளார்.
கர்நாடகாவில் பல்லாரி மாவட்டத்தில் சண்டூர் சட்டசபை தொகுதி உள்ளது. கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் டிகே துக்காராம் 2008, 2013, 2018 ஆகிய ஆண்டுகளை தொடர்ந்து 2023ல் நடந்த தேர்தலிலும் 4வது முறையாக வென்றார்.

முன்னாள் அமைச்சரான இவருக்கு காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கவில்லை.இதற்கிடையே தான் சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் டிகே துக்காராம் பல்லாரி நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அந்த தேர்தலிலும் அவர் வென்று எம்பியானார்.
இதனால் துக்காராம் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். சண்டூர் சட்டசபை தொகுதி காலியானது. இதையடுத்து நவம்பர் 13ம் தேதி சண்டூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் என்பது நடக்கும் அறிவிக்கப்பட்டது. இங்கு மொத்தம் 6 பேர் வேட்பாளராக போட்டியிட்டனர். இவர்கள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் துக்கராம் மனைவி அன்னபூர்ணா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பாஜக சார்பில் பங்காரு ஹனுமந்தா வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இவர் பாஜகவின் எஸ்டி விங்க் தலைவராக உள்ளார். அதோடு ஒரு காலத்தில் கர்நாடகா அரசியலை ஆண்ட ஜனார்த்தன ரெட்டியின் ஆதரவாளராகவும் உள்ளார்.
கர்நாடகாவில் குதிரை பேர அரசியலில் கொடிகட்டி பறந்த ஜனார்த்தன ரெட்டி அதன்பிறகு கனிம சுரங்க முறைகேடு வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஜாமீனில் உள்ள அவர் கடந்த ஆண்டு தனிக்கட்சி மூலம் எம்எல்ஏ ஆனார். அதன்பிறகு மீண்டும் பாஜகவில் சேர்ந்துள்ளார்.
இன்னும் அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால் அவர் சண்டூரில் தனது ஆதரவு வேட்பாளர் பங்காரு ஹனுமந்தாவை வெல்ல வைக்க தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டார். சண்டூர் என்பது பல்லாரி மாவட்டத்தில் உள்ளது. இது ஜனார்த்தன ரெட்டியின் சொந்த மாவட்டமாகும். இது பங்காரு ஹமனுந்தாவுக்கு பாசிட்டிவ்வாக பார்க்கப்படுகிறது. இதனால் பங்காரு ஹனுமந்தா வெல்லும்பட்சத்தில் கர்நாடகா பாஜகவில் மீண்டும் ஜனார்த்தன ரெட்டி வளர வாய்ப்புள்ளது. இதை கருத்தில் கொண்டு தான் ஜனார்த்தன ரெட்டி தனது சகோதரர்களுடன் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
அதன்பிறகு கடந்த 13ம் தேதி அமைதியாக சண்டூர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் என்பது நடந்தது. மொத்தம் 76.24 சதவீத ஓட்டு பதிவானது. இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பல்லாரியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் இந்த ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மொத்தம் 19 ரவுண்ட்டுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
காலை 9.30 மணி நிலவரப்படி 4வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடந்து வந்தது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் அன்னபூர்ணா 1001 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார். அன்னபூர்ணா மொத்தம் 20,128 ஓட்டுகள் பெற்றுள்ள நிலையில் பாஜக வேட்பாளர் பங்காரா ஹனுமந்து 19,127 ஓட்டுகள் பெற்று பின்தங்கி இருந்தார்.
காலை 10.45 மணிக்கும் டிரெண்ட் என்பது மாறவில்லை. காங்கிரஸ் வேட்பாளர் அன்னபூர்ணா மொத்தம் 62,177 ஓட்டுகள் பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் பங்காரா ஹனுமந்தா 56,523 ஓட்டுகள் பெற்று பின்தங்கி உள்ளார். இருவருக்கமான ஓட்டு வித்தியாசம் என்பது 5,554 என்று அளவில் இருந்தது.
இறுதியாக 19 வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் அன்னபூர்ணா வெற்றி பெற்றார். அவர் மொத்தம் 93,616 ஓட்டுகள் பெற்றார். பாஜக வேட்பாளர் பங்காரு ஹனுமந்தா 83,967 ஓட்டுகள் பெற்றார். இதன்மூலம் பங்காரு ஹனுமந்தாவை விட 9,649 ஓட்டுகள் அதிகம் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் அன்னபூர்ணா வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications