தமிழகம் VS கர்நாடகா.. ஓசூருக்கு போட்டியாக பெங்களூரில் 2வது விமான நிலையம் ஏன்? பின்னணியில் பிசினஸ்
பெங்களூர்: ஓசூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததை தொடர்ந்து அவசர அவசரமாக கர்நாடகா அரசு பெங்களூரில் 2வது விமான நிலையத்தை அமைக்கும் பணியை தொடங்கி உள்ளது. அதற்கான இடம் தேர்வு செய்யும் பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்நிலையில் தான் பெங்களூர் 2வது விமான நிலையத்தை வைத்து கர்நாடகா அரசு பிசினஸ் ரீதியாக தமிழக அரசுக்கு எப்படி செக் வைக்க திட்டமிட்டுள்ளது என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.
தமிழக - கர்நாடகா எல்லையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் உள்ளது. இங்கு தற்போது பல்வேறு தொழிற்சாலைகள் வருகின்றன. பெங்களூரில் உள்ள இடநெருக்கடியால் சில நிறுவனங்கள் ஓசூருக்கும் வரும் நிலை உள்ளது. இதனால் தான் ஓசூரில் 2 ஆயிரம் ஏக்கரில் ஆண்டுக்கு 30 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்) பயணிகளைக் கையாளக்கூடிய வகையில் ஒரு பன்னாட்டு விமான நிலையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.

இதுதொடர்பாக அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் தமிழக சட்டசபையில் 110வது விதியின் கீழ் அறிவித்தார். இந்த அறிவிப்பு என்பது கர்நாடகாவின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. ஓசூரில் விமான நிலையம் அமைத்து பெங்களூரின் முதலீடு வணிகத்தை தமிழ்நாடு கவர்ந்து விடுமோ என்ற அச்சம் கர்நாடகா அரசுக்கு ஏற்பட்டது.
இதையடுத்து உடனடியாக பெங்களூரில் 2வது விமான நிலையம் அமைக்கப்படும் என்று கர்நாடகா அரசு அறிவித்தது. தற்போது பெங்களூரில் கெம்பேகவுடா விமான நிலையம் இருந்தாலும் கூட தமிழகத்துக்கு போட்டியாக இன்னொரு விமான நிலையத்தை அமைக்கும் பணியை கர்நாடகா அரசு தொடங்கி உள்ளது.
அதன்படி பெங்களூர் தெற்கு பகுதியில் உள்ள கனகபுரா ரோடு மற்றும் பெங்களூர் வடக்கு பகுதியில் உள்ள நெலமங்களா என்ற 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த 2 இடங்களில் ஒன்றில் விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் எந்த இடம் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை. மாறாக இழுபறி நீடித்து வருகிறது. இதுபற்றி மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‛‛பெங்களூரில் 2 வது விமான நிலையம் அமைப்பதற்காக கனகபுரா, நெலமங்களாவில் இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. 2 இடங்களிலும் மொத்தமாக 4 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது'' என்றார்.
இந்நிலையில் தான் தற்போது கர்நாடகா அரசு பதற்றமடைந்துள்ளது. ஏனென்றால் பெங்களூரை சுற்றி 2வது விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்யாவிட்டால் அது தமிழக அரசுக்கு சாதகமாக அமைந்து விடும். இதனால் உடனடியாக 2வது விமான நிலையம் அமைக்கும் இடத்தை பைனல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி கர்நாடகா அரசு பெங்களூர் தெற்கு பகுதியான கனகபுரா ரோட்டில் விமான நிலையம் அமைக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் இதன் பின்னணியில் தான் தமிழகத்தை மனதில் வைத்து கர்நாடகா அரசு திட்டம் ஒன்றை தீட்டி வருகிறது. அதாவது எந்த காரணம் கொண்டும் பெங்களூர் 2வது விமான நிலையம் தமிழகத்தின் வணிகத்துக்கு சாதகமாக மாறிவிடக்கூடாது. அப்படி நடந்தால் அது பெங்களூரின் வளர்ச்சியை பாதிக்கும். இதனால் தமிழகம் வணிகம், வர்த்தகம் ரீதியில் பயன்பெறாத வகையிலும், மாறாக பெங்களூரில் உள்ள வர்த்தகத்தை அவர்களே தக்க வைக்கும் வகையிலும் பெங்களூரில் 2வது விமான நிலையம் அமைக்க கர்நாடகா அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும் தற்போது ஓசூரில் விமான நிலையத்தை கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பெங்களூரில் இருந்து ஓசூர் சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஓசூரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் தான் பெங்களூரில் எலக்ட்ரானிக் சிட்டி அமைந்துள்ளது. இங்கு ஐடி உள்பட பல தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதனால் ஓசூரில் விமான நிலையம் அமைத்தால் ஓசூரும் வளர்ச்சி பெறும். ஓலா உள்ளிட்ட நிறுவனங்கள் ஓசூரில் முதலீடு செய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்யும் நிறுவனங்களும் ஓசூரை குறிவைத்து முதலீடு செய்கின்றனர். இங்கிருந்து பெங்களூர் பக்கம் என்பதால் இந்த முடிவை அந்த நிறுவனங்கள் எடுத்துள்ளன. இதனால் பெங்களூரின் வளர்ச்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்துக்கு போட்டியாக பெங்களூர் தெற்கு பகுதியான கனகபுரா ரோட்டில் விமான நிலையம் அமைத்தால் அது தமிழகத்தை நோக்கி முதலீடு செல்வதை தடுக்க முடியும் என்று கர்நாடகா அரசு நம்புகிறது


Click it and Unblock the Notifications
