தீபாவளிக்கு மட்டுமே ‛ஓபன்’.. ஹாசனாம்பா கோவிலுக்குள் விடாமல் அமைச்சரை நிறுத்திய பெண் போலீஸ்.. ஏன்?
பெங்களூர்: கர்நாடகாவில் தீபாவளிக்கு மட்டுமே ஹாசனாம்பா கோவில் திறக்கப்படும். தற்போது ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வரும் நிலையில் அமைச்சரையே கோவிலுக்குள் விடாமல் பெண் போலீஸ் தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கர்நாடகாவில் ஹாசன் மாவட்டத்தில் ஹாசனாம்பா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் என்பது தீபாவளிக்கு மட்டுமே திறக்கப்படும். தீபாவளி சமயத்தில் 10 நாட்களுக்கு மேலாக ஆண்டுதோறும் பக்தர்கள் தரிசனம் செய்வார்.

மேலும் இந்த கோவிலின் இன்னொரு சிறப்பு என்னவென்றால் கோவிலில் பூஜைகள் முடிந்து கதவு மூடும்போது உள்ளே விளக்கு ஏற்றி வைக்கப்படும். இந்த விளக்கு அடுத்த ஆண்டு தீபாவளிக்கு கோவிலை திறக்கும்போது வரை அணையாமல் தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கும்.
இத்தகைய சிறப்பு கொண்ட இந்த கோவில் தீபாவளி பண்டிகையொட்டி கடந்த 2ம் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. கர்நாடகாவின் பல இடங்களில் இருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு சென்று தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தான் கலால் துறை அமைச்சர் ஆர்பி திம்மாபூர் இன்று கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றார்.
அப்போது கோவிலில் அதிகளவில் பக்தர்கள் இருந்தனர். குறிப்பாக விவிஐபி பாஸ் வைத்திருக்கும் ஏராளமானவர்களும் கோவில் அருகே போலீசார் தடுத்து நிறுத்தியிருந்தனர். இதை பார்த்த அமைச்சர் ஆர்பி திம்மாபூர் தனது காரில் அரை மணிநேரம் காத்திருந்தார். அதன்பிறகும் கூட கோவிலில் கூட்டம் என்பது குறையவில்லை. இதையடுத்து அமைச்சர் மட்டும் காரில் இருந்து கோவில் உள்ளே செல்ல முயன்றார்.
இந்த வேளையில் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பெண் போலீஸ் அவரை தடுத்து நிறுத்தினார். அமைச்சர் ஆர்பி திம்மாபூர் ஒன்றும் சொல்லவில்லை. கோவிலுக்கு வெளியே அவர் காத்து நின்றார். இதனை அங்குள்ள வருவாய்த்துறை அதிகாரிகள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவர்கள் அந்த பெண் போலீசிடம், அவர் அமைச்சர் ஆர்பி திம்மாபூர் என கூறினர்.
இதை கேட்டு அந்த பெண் போலீஸ் ஷாக்காகி நின்றார். இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் அமைச்சர் ஆர்பி திம்மாபூரை கோவிலுக்குள் அழைத்து சென்று தரிசனம் செய்ய வைத்தனர். அமைச்சர் ஆர்பி திம்மாபூர் கோவில் கருவறை சென்று தரிசனம் செய்து திரும்பினார். இந்த சம்பவம் சிறிது நேரம் ஹாசனாம்பா கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications