ஜிஎஸ்டி : ஆகஸ்டு மாதம் ரூ. 90,669 கோடி வசூல் - குறைவிற்கான காரணத்தை ஆராயும் அரசு!
ஜிஎஸ்டியின் ஆகஸ்டு மாதத்தின் வரி வசூலானது எதிர்பார்க்கப்பட்ட அளவை விட குறைவாக வசூலானதால் மத்திய அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.
டெல்லி: ஆகஸ்டு மாதத்திற்கான ஜிஎஸ்டி வரியாக சுமார் 90,669 கோடி ரூபாய் வசூலாகியுள்ளதாக ஜிஎஸ்டி வரிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை கடந்த ஜூலை மாதம் அமல்படுத்தப்பட்டது. முதல் மாதத்திலேயே 95,000 கோடி வசூல் செய்யப்பட்டது.
விற்பனை வரி, நுழைவு வரி, சுங்க வரி, ஆயத்தீர்வை, மாநில வரி, மாவட்ட வரி போன்ற பத்துக்கும் மேற்பட்ட பலமுனை வரிகளை ஒழித்து விட்டு அதற்கு மாற்றாக ஒரு முனை வரியான சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டது.

ஜிஎஸ்டியில் பதிவு
எதிர்பார்க்கப்பட்டது போலவே, ஜிஎஸ்டியில் பதிவு செய்தவர்களில் 74 சதவிகிதம் பேர் அதாவது சுமார் 38 லட்சம் தொழில் நிறுவனங்களும் வர்த்தகர்களும் தங்களின் ஜூலை மாதத்திய ஜிஎஸ்டி வரியை ஜிஎஸ்டிஎன் இணைய தளத்தின் வாயிலாக செலுத்தினர்.

வரி வசூல் எவ்வளவு
இதன்மூலம் ஜூலை மாதத்தின் வரி வசூலானது உத்தேசமாக 95000 கோடி ரூபாய் வசூலானதாக ஜிஎஸ்டி வரிகள் ஆணையம் துள்ளிக் குதித்தது. ஆனாலும், யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பது போல, ஜிஎஸ்டி ஆணையத்திற்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

உள்ளீட்டு வரி பயன்பாடு
அது என்னவென்றால், ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்படுவதற்கு முன்பு வர்த்தகர்களும் தொழில் நிறுவனங்களும் கொள்முதல் செய்தது மற்றும் இறக்குமதி செய்த வகையில் கிடைக்கப் பெற்ற உள்ளீட்டு வரிப் பயன்பாடாக (Input Tax Credit or Transition credit) இருந்த சுமார் 64000 கோடி ரூபாயை சுமார் 162 தொழில் நிறுவனங்கள் திரும்பப் பெற்றுக் கொண்டதுதான்.

162 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
இதனால், அதிர்ச்சியடைந்த ஜிஎஸ்டிஎன் ஆணையம் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட தொகையை உள்ளீட்டு வரிப்பயன்பாடாக எடுத்துக்கொண்ட மேற்கண்ட 162 தொழில் நிறுவனங்களுக்கும் விளக்கம் கேட்டு ஓலை அனுப்பி உள்ளது.

ஆகஸ்ட் மாத வரி வசூல்
இந்நிலையில், கடந்த ஆகஸ்டு மாதத்திற்கான ஜிஎஸ்டி வரியாக சுமார் 90,669 கோடி ரூபாய் வசூலாகியுள்ளதாக ஜிஎஸ்டி வரிகள் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தின் வசூலை விட அதிகமாக வசூலாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதைவிட குறைவாக வசூலாகியுள்ளது.

வசூல் திருப்தியே
வரி வசூல் குறைந்தது கவலை அளிப்பதாக உள்ளதாகவும், ஆனால் அதே சமயத்தில் உத்தேச மதிப்பீடான சுமார் 85000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகவே வசூலானது திருப்தி அளிப்பதாக உள்ளது என்று ஜிஎஸ்டி வரிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டி வரிகள் ஆணையம்
இவற்றில் சுமார் 14,402 கோடி ரூபாய் மத்திய வரியாகவும் (CGST) மாநில வரி வசூலாக(SGST) சுமார் 21,067 கோடி ரூபாயகவும், ஒருங்கிணைந்த வரியாக (IGST) சுமார் 47,377 கோடி ரூபாயும், சொகுசு பொருட்களின் மீது வசூலிக்கப்படும் வரி வருவாயக சுமார் 7,823 கோடி ரூபாயும் வசூலானதாக ஜிஎஸ்டி வரிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

வரி வசூல் குறைந்துள்ளது
மேலும், பல வர்த்தகர்களும் தொழில் நிறுவனங்களும் இன்னும் தங்களின் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதத்திற்கான வரியை செலுத்தாமல் உள்ளனர். இதனாலேயே வரி வசூல் குறைந்துள்ளதாக ஜிஎஸ்டி வரிகள் ஆணையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications