வேதாந்தா குழுமத்தில் அமலாக்கத் துறை திடீர் சோதனை.. FEMA வழக்கில் சிக்கிக்கொண்ட அனில் அகர்வால்?
அமலாக்கத் துறை (ED) வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான டெல்லி மற்றும் மும்பை அலுவலங்கள், வீடுகள் என அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகிறது. வெளிநாட்டு முதலீட்டு மேலாண்மை சட்டம் (FEMA) விதிமீறல் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சோதனை திங்கள்கிழமை இரவு முதல் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமலாக்கத் துறை அதிகாரிகள், வேதாந்தா குழுமத்துடன் தொடர்புடைய இடங்களில் இருந்து டிஜிட்டல் தரவுகள் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தாலும், அதிகாரப்பூர்வ தகவல் வந்தால் மட்டுமே உண்மையான நிலவரம் தெரியும்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு கீழ் இயங்கும் அமலாக்க துறை தற்போது சுமார் ரூ.1,500 கோடி மதிப்புள்ள வேதாந்தா குழுமத்தின் சந்தேகத்துக்குரிய வெளிநாட்டு பணப் பரிவர்த்தனைகள் மற்றும் நிதி பயன்பாடு குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விசாரணை தொடர்பாக அமலாக்கத் துறை இதுவரை முழுமையான அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடவில்லை.
இந்த விசாரணையிலும், சோதனையிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், வேதாந்தா குழுமத்துக்கு உடனடி குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்படாது. ஆனால், சட்டப்படி அபராதம் விதிக்கப்படும். இது சம்பந்தப்பட்ட தொகையின் மூன்று மடங்கு வரை அதாவது 1500 கோடி ரூபாய் மதிப்பிலான முறைகேட்டிற்கு சுமார் 4,500 கோடி ரூபாய் வரையிலான தொகை அபராதமாக விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை வேதாந்தா குழுமத்தின் நிதி நடவடிக்கைகளை ஆழமாக பாதிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளரான வேதாந்தா குழுமம் இந்தியாவின் மிகப் பெரிய இயற்கை வள குழுமங்களில் ஒன்று. ஜிங்க், வெள்ளி, எண்ணெய் மற்றும் எரிவாயு, அலுமினியம், இரும்பு தாது, எஃகு மற்றும் செம்பு ஆகிய உலோக உற்பத்தியில் பெரும் தொழிற்சாலைகளை வைத்துள்ளது. இதன் முக்கிய துணை நிறுவனங்களில் ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் மற்றும் கேர்ன் ஆயில் அண்ட் கேஸ் ஆகியவை அடங்கும்.
இந்த சோதனை நடைபெறும் அதே வேளையில், வேதாந்தா குழுமத்திற்கு ஒரு நல்ல செய்தியையும் பெற்றுள்ளது. ICRA ரேட்டிங் நிறுவனம், குழுமத்தின் முக்கிய நிறுவனங்களின் நீண்டகால ரேட்டிங்கை AA+ ஆக உயர்த்தியுள்ளது. கடந்த 10 வருடத்தில் இக்குழுமம் பெற்ற அதிகப்படியான கடன் தர நிலை ஆகும். AA+ ரேட்டிங் பெற்ற பத்திரங்கள், நிதி கடமைகளை சரியான நேரத்தில் நிறைவேற்றும் உயர் பாதுகாப்பு கொண்டவை என்று கருதப்படுகின்றன.
இந்த சோதனை தொடர்ந்து அமலாக்கத் துறையின் விசாரணை முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த நிகழ்வு, பெரும் குழுமங்களின் நிதி நடவடிக்கைகள் மீதான அரசின் கண்காணிப்பு அதிகரித்து வருவதை உணர்த்துகிறது.












Click it and Unblock the Notifications