தங்கம் விலையில் "நல்ல செய்தி.." ஆனா அடுத்த வரியே வெடியை வீசிய ஆனந்த் சீனிவாசன்! இப்படி சொல்லிட்டாரே
சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஜெட் வேகத்தில் உயர்ந்து புதிய உச்சம் தொட்டு வருகிறது. 24 கேரட் தங்கம் விலை ஏற்கனவே ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. இதற்கிடையே தங்கம் விலை இந்தளவுக்கு வேகமாக உயர்வதற்கான காரணத்தை விளக்கியுள்ள ஆனந்த் சீனிவாசன், அது குறைவதற்கு எந்தளவுக்கு வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்தும் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்குப் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ஏற்கனவே ரூ.10 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. 22 கேரட் தங்கமும் கூட மெல்ல ரூ.10 ஆயிரம் என்ற இலக்கை நெருங்கிவருகிறது. இதனால் ஏழை மற்றும் மிடில் கிளாஸ் மக்கள் தங்கத்தை நினைத்துக் கூட பார்க்க முடியாத சூழலே ஏற்பட்டுள்ளது.

ஆனந்த் சீனிவாசன்
இதற்கிடையே தங்கம் விலை உயர்வுக்கான காரணத்தைத் தனது யூடியூப் பக்கத்தில் விளக்கியுள்ள ஆனந்த் சீனிவாசன், வரும் நாட்களில் தங்கம் விலை எப்படி இருக்கப் போகிறது.. அது குறைவதற்கு ஏன் வாய்ப்பு குறைவு என்பது குறித்து விளக்கியுள்ளார். மேலும், தங்கம் விலை தற்போது இருப்பதில் இருந்து எந்தளவுக்கு அதிகரிக்கும் என்பது குறித்தும் முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
நல்ல செய்தி
இது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் பக்கத்தில், "நான் எனது வாழ்நாளுக்குள் ஒரு நாள் நடக்கும் என நினைத்தது மிக வேகமாக 5 ஆண்டுகளுக்குள் நடந்துவிட்டது. இதற்கு டிரம்ப், ஜி ஜின்பிங் மற்றும் புதினுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அவர்கள் 3 பேரும் சேர்ந்து எனது கனவை நனவாக்கிவிட்டனர். 24 கேரட் தங்கம் ஒரு கிராம் வரி இல்லாமலேயே ரூ.10, ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ஏற்கனவே ரூ.9000+ தாண்டிவிட்டது. அதுவும் சீக்கிரம் ரூ.10,000ஐ தாண்ட வாய்ப்பு இருக்கிறது. இது தங்கம் வைத்திருக்கும் நாம் அனைவருக்கும் நல்ல நாளை கொடுத்துள்ளது.
சர்வதேச சந்தையில் தங்கம் ஒரு அவுன்ஸ் தங்கம் 3544 டாலர் என இருக்கிறது. 3600 டாலர் என்ற இலக்கையும் கூட சீக்கிரமே அடைந்துவிடும். 3600 டாலர் என்றால் நமது நாட்டிலும் 22 கேரட் தங்கமே ரூ.10, ஆயிரத்தைத் தாண்டிவிடும்.
காரணங்கள் என்ன?
தங்கம் விலை இப்போதைக்குக் குறைய வாய்ப்பே இல்லை. தங்கம் விலை உயரவே வாய்ப்பு இருக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அந்நாட்டின் ரிசர்வ் வங்கி தலைவர் ஜெரோம் பவல் இடையே மோதல் ஆரம்பித்துவிட்டது. அமெரிக்காவில் மந்தநிலை வரலாம் என்பதால் வரியைக் குறைக்க வேண்டும் என அங்குள்ள வர்த்தகர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால், ஜெரோம் பவல் வரியைக் குறைக்க மாட்டேன் என்கிறார்.
எவ்வளவு உயரும்?
ஒருவேளை அவர் வரியைக் குறைத்தாலும் தங்கத்திற்கு நல்லதுதான். டாலர் மதிப்பு குறையும் தங்கத்தின் மதிப்பு அதிகரிக்கும். இதே நிலை தொடர்ந்தால் சர்வதேச மார்க்கெட்டில் ஒரு அவுன்ஸ் தங்கம் 3750 டாலர் முதல் 4000 டாலர் வரை தொடும். டிரம்ப் இதேபோல நடந்து கொண்டு இருந்தால் தங்கம் விலை இந்தாண்டு இறுதிக்குள் 4000 டாலரை தொட்டுவிடும். அதாவது இந்தியாவில் ரூ.11,500 முதல் 12,000 வரை போகும்.
எவ்வளவு தங்கம் தேவை?
அவசரத்திற்கு உதவ மிடில் கிளாஸ் மக்களுக்குத் தங்கம் தேவை. 200 கிராம் தங்கமாவது ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவை. அதுவே ரூ.25 லட்சம் வரை போக வாய்ப்பு இருக்கிறது.
இப்போது குறையுமா?
இப்போது உடனடியாகத் தங்கம் விலை குறையுமா எனப் பலரும் என்னிடம் கேட்கிறீர்கள். தற்போதைய சூழலில் தங்கம் விலை குறையாது. ஜி ஜின்பிங், புதின் ஆகியோர் தான் பெரிய பிரச்சினை. அங்கெல்லாம் தேர்தல் மூலம் அவர்களைக் காலி செய்ய முடியாது. இதுபோக ஜெரோம் பவலும் அடுத்த ஓராண்டுக்கு இருப்பார். டிரம்ப் வேற இருக்கிறார். இதனால் தங்கம் விலை இறங்க எந்தவொரு வாய்ப்பும் இல்லை" என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications