ஐயோ மீண்டும் மீண்டுமா.. சர்வதேச மார்க்கெட்டில் உயரும் தங்கம் விலை.. நாளை தான் ஆட்டமே இருக்கு
வாஷிங்டன்: கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாகச் சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், இப்போது நிலைமை மொத்தமாக மாறிவிட்டது. தங்கம் விலை படுவேகமாக உயர்ந்து வருகிறது. இது நாளை இந்தியச் சந்தைகளிலும் நிச்சயம் எதிரொலிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தங்கம் விலை உயர்வுக்கு இரு பிரதானக் காரணம் சொல்லப்படும் நிலையில், இது குறித்து நாம் பார்க்கலாம்.
தங்கம் விலை கடந்த இரண்டு வாரங்களாக ஓரளவுக்குக் குறைந்து வந்தது. சர்வதேச மார்க்கெட்டில் தங்கம் விலை குறைந்ததாலேயே அது இந்தியாவிலும் எதிரொலித்தது. குறிப்பாக அக்ஷய திருதியை நாளில் கூட தங்கம் விலை உயரவில்லை. இதனால் மக்கள் ஆர்வமாகத் தங்கம் வாங்கினர். ஆனால், இப்போது நிலைமை மாற தொடங்கிவிட்டது.

தங்கம் விலை
இதற்கிடையே இன்று செவ்வாய்க்கிழமை தங்கம் விலை கடந்த இரண்டு வாரங்களில் இல்லாத அளவுக்குப் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதற்கு இரு முக்கிய காரணங்கள் சொல்லப்படுகிறது. ஒன்று அதிபர் டிரம்ப் மீண்டும் வரி குறித்துப் பேசி வர்த்தகப் போர்ப் பதற்றத்தை அதிகரிக்கிறார்.. அடுத்தது அமெரிக்க பெடரல் வங்கியின் கூட்டம். இந்த இரண்டும் தான் தங்கம் விலை உயரப் பிரதானக் காரணமாக இருக்கிறது.
பறக்குது தங்கம் விலை
அமெரிக்காவில் இப்போது ஸ்பாட் தங்கம் 1.61% உயர்ந்து 3,385 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது. அதாவது 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 9,166.26 ரூபாய் என்ற ரேஞ்சில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல கோல்ட் ப்யூச்சர்ஸும் 2 சதவிகிதம் உயர்ந்து 3,398 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது. அதாவது 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹9,197.94 என்று வர்த்தகமாகிறது. இந்தியாவில் டாலர்- ரூபாய் மதிப்பு காரணமாகவும் இறக்குமதி வரி, ஜிஎஸ்டி உள்ளிட்டவை காரணமாகவும் தங்கம் விலை இதைவிடச் சற்று அதிகமாகவே இருக்கும்.
வல்லுநர்கள் சொல்வது என்ன
கடந்த இரண்டு வாரங்களாகச் சரிந்து வந்த தங்கம் விலை திடீரென அதிகரிக்கத் தொடங்கியுள்ளது குறித்து முதலீட்டு நிறுவனமான யூபிஎஸ் ஆய்வாளர் ஜியோவானி ஸ்டானோவோ கூறுகையில், "இத்தனை காலமாகத் தங்கம் விலை உயர்வுக்குக் காரணமாக இருந்தவை தொடர்கிறது. இன்னும் வர்த்தகப் போர் சீராகவில்லை. உலக நாடுகள் ரிசர்வ் நாணயமாக டாலரை வைத்திருக்கலாமா என யோசித்து வருகின்றன. இதனால் இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கம் விலை 3,500 டாலரை தாண்டும் என நினைக்கிறோம்" என்றார்.
டிரம்ப்பின் இரு அறிவிப்புகள்
தங்கம் விலை இப்போது திடீரென அதிகரிக்க டிரம்ப்பின் இரு அறிவிப்புகள் முக்கிய காரணம். முதலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, டிரம்ப் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு 100% இறக்குமதி வரியை அறிவித்தார். இருப்பினும், அதை எப்படி நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளார்கள் என்பது குறித்த தகவல்களை அவர் பகிரவில்லை. அடுத்து திங்கள்கிழமை மருந்துகள் இறக்குமதிக்கு வரிகளை இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பொதுவாக வரி பதற்றம், போர் பதற்றம், அரசியல் குழப்பம் இருக்கும் போது முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீட்டை அதிகரிப்பார்கள். இதுபோல சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ரிசர்வ் வங்கிகளும் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றன. இதன் காரணமாகவே கடந்த மாதம் தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு கிராம் 3,500 வரை போனது. அதன் பிறகு சீனாவுடன் வர்த்தகப் போரை முடிவுக்குக் கொண்டு வருவது போல டிரம்ப் பேசியதால் தங்கம் விலை சரிந்தது. இப்போது மீண்டும் அவர் வரி என ஆரம்பித்தவுடனேயே தங்கம் விலை அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.
அமெரிக்க பெடரல் வங்கி கூட்டம்
அதேபோல அமெரிக்க பெடரல் வங்கியின் இரண்டு நாள் கூட்டம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த முறை ஜெரோம் பவுல் வட்டியைக் குறைக்க மாட்டார். ஆனால், வரும் காலத்தில் எந்தளவுக்கு வட்டியை குறைக்கும் திட்டம் இருக்கிறது என்பது குறித்து அவரது கருத்து முக்கியமானதாகப் பார்க்கப்படும். வட்டியைக் குறைப்பேன் என்பது போலச் சொன்னால் தங்கம் விலை இன்னும் எகிறும்.. வட்டியைக் குறைக்கப் போவதில்லை என்பது போலச் சொன்னால் தங்கம் விலை ஸ்டெடியாக இருக்கும்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்












Click it and Unblock the Notifications