ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி போச்சு.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. இது இன்னும் நிற்காது போலையே!
மும்பை: கடந்த சில நாட்களாகவே இந்தியப் பங்குச்சந்தைகள் சரிந்து வருகிறது. நேற்றைய தினம் பங்குகள் சற்று மோசமாகவே சரிந்த நிலையில், இதனால் இந்திய முதலீட்டாளர்களுக்குச் சுமார் ரூ.8 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு நிறுவனங்களின் பங்குகளும் சரிந்து வரும் நிலையில், முதலீட்டாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்தியப் பங்குச்சந்தைகள் கடந்த சில ஆண்டுகளாகவே சீராக இருந்து வந்தது. பெரியளவில் எந்தவொரு சரிவும் இல்லாமல் தொடர்ந்து ஏறி வந்தது. இதனால் பல கோடி இந்தியர்கள் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்ய ஆரம்பித்தனர். இதற்கிடையே நேற்று வியாழக்கிழமை இந்தியப் பங்குச் சந்தைகள் கடுமையாகச் சரிந்தது.

8 லட்சம் கோடி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட முக்கிய பங்குகளின் விலையும் குறைந்தது. மேலும், உலோகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களின் பங்குகளும் கூட கடுமையாகக் குறைந்தன. இதன் காரணமாக ஒரே நாளில் முதலீட்டாளர்களின் பணம் சுமார் ₹8 லட்சம் கோடி காணாமல் போனது.
இந்தியப் பங்குச்சந்தைகள் கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாகச் சரிந்து வருகிறது. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் ஒரே வாரத்தில் சுமார் 1500 புள்ளிகள் சரிந்துள்ளன. இன்றும் அது தொடர்ந்து சரிந்து, 84,145 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையான நிஃப்டி கூட 5வது நாளாக இன்றும் சரிந்தே வருகிறது. அது இப்போது 25,860 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
ரிலையன்ஸ்
இந்தியாவின் மிக முக்கிய நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் கடுமையாகச் சரிந்துள்ளது. நேற்றும் நான்காவது நாளாக அந்தப் பங்குகள் ரேட் குறைந்தது. ₹1,611 என்பதில் இருந்து ஒரே வாரத்தில் சுமார் 130 ரூபாய் அது சரிந்துள்ளது. இந்த 9% சரிவால் ரிலையன்ஸ் நிறுவனம் சுமார் ₹1.7 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்தது. நாட்டின் முக்கியமான தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கியும் நான்காவது நாளாகச் சரிந்து ₹85,000 கோடியை இழந்தது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உட்படப் பலரும் தங்கள் பங்குகளை விற்க ஆரம்பித்துள்ளதே இதற்குப் பிரதானக் காரணமாக இருக்கிறது. குறிப்பிட்ட சில பங்குகள் என இல்லாமல் பரவலாக எல்லா நிறுவனங்களுமே இதனால் பாதிக்கப்படுகிறது.. நேற்றைய தினம் நிஃப்டி மிட்கேப் பங்குகளில் 100க்கு 95 பங்குகளும், ஸ்மால்கேப் பங்குகளில் 100-க்கு 85 பங்குகளும் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
துறை ரீதியாக
துறை ரீதியாக பார்த்தோம் என்றால் நிஃப்டி மெட்டல் முதலிடம் பிடித்தது. நிஃப்டி மெட்டல் குறியீடு சுமார் 3.5% வீழ்ச்சியடைந்தது. ஜேஎஸ்பிஎல், நால்கோ, ஹிந்துஸ்தான் காப்பர், என்எம்டிசி என பல மெட்டல் நிறுவனங்கள் சரிவையே சந்தித்துள்ளன. விரைவில் காலாண்டு முடிவுகள் வரவுள்ள நிலையில், அது மோசமாக இருக்கும் என்று கருதி ஐடி நிறுவனங்களின் பங்குகளும் விற்கப்படுகிறது. இதனால் ஐடி பங்குகளும் மோசமாகச் சரிந்துள்ளன. திங்கள்கிழமை டிசிஎஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வெளியாகும் நிலையில், அதன் பிறகு வரிசையாக முடிவுகள் வெளிவரும். இதுவே சரிவுக்குப் பிரதானக் காரணமாகும்.
இதர நிறுவனங்கள்
இது மட்டுமின்றி விப்ரோ, கோஃபோர்ஜ், ஆரக்கிள் ஃபைனான்சியல் சர்வீசஸ் சாஃப்ட்வேர் பங்குகள் 3% முதல் 3.5% வரை குறைந்தன. நேற்றைய தினம் வர்த்தகத்தின் கடைசி அரை மணி நேரத்தில் கேபிடல் சரக்கு பங்குகள் திடீரெனச் சரிந்தன. சீன நிறுவனங்களுக்கு அரசு ஒப்பந்த ஏலங்களில் கட்டுப்பாடுகளைத் தளர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், இவை சரிந்தன. பிஹெச்இஎல் 10% சரிந்த நிலையில், ஏபிபி இந்தியா, சீமென்ஸ் இந்தியா, லார்சன் & டூப்ரோ பங்குகளும் குறைந்தன.












Click it and Unblock the Notifications