சொந்த வீடு vs வாடகை வீடு.. இளைஞர்கள் என்ன செய்ய வேண்டும்.. சூட்சுமமே இதுதான்! ஆஹா நோட் பண்ணுங்க
சென்னை: இந்த காலத்தில் இளைஞர்களிடையே வீட்டை வாங்குவதற்கான ஆர்வம் குறைந்து வருகிறது. பலரும் வாடகை வீடே போதும் என இருக்கிறார்கள். உண்மையில் தற்போதிருக்கும் சூழலில் சொந்தமாக வீட்டை வாங்குவது சரியான முடிவாக இருக்குமா.. இல்லை வாடகை வீட்டில் இருப்பதே சரியாக இருக்குமா என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சொந்தமாக ஒரு வீட்டை வாங்க வேண்டும் என்பதே கிட்டதட்ட அனைத்து இந்தியர்களின் கனவாக இருந்தது. இப்போதும் கூட பலரும் சொந்தமாக வீட்டை வாங்கவே ஆசைப்படுகிறார்கள் என்ற போதிலும் இளைஞர்களிடையே மனமாற்றம் அதிகரித்துள்ளது. வீட்டை வாங்கலாமா.. இல்லை வீட்டை வாடகைக்கு எடுத்தாலே போதுமா என்ற யோசனை பல இளைஞர்களுக்கு வந்துவிட்டது.

பிரச்சினை என்ன
இது தொடர்பாகக் கோபாலன் எண்டர்பிரைசஸின் இயக்குநர் பிரபாகர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்திருந்த பேட்டியில், "இளைஞர்கள் இப்போது வீடு வாங்க வேண்டாம் என்ற மனநிலையில் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. முக்கிய நகரங்களில் வீடுகளின் விலை எங்கோ போய்விட்டது. மேலும், மாணவர் கடன், வேலைக்காக வேறு ஊர்களுக்குச் செல்ல வேண்டியது, அதிகரிக்கும் வீட்டுக் கடன் உள்ளிட்ட காரணங்களால் பல இளைஞர்களுக்குச் சொந்தமாக ஒரு வீடு என்பதே எட்டாத கனியாக மாறிவிட்டது" என்கிறார்.
சொந்த வீடு
வீட்டை வாடகைக்கு எடுப்பதில் பல நல்ல விஷயங்கள் இருக்கிறது. முதலில் நீங்கள் பெரிய தொகையை உடனடியாக கொடுக்க தேவையில்லை.. வீட்டைப் பராமரிக்கும் பொறுப்பும் செலவும் உங்களுடையது இல்லை. மேலும், உங்கள் கேரியருக்காக நீங்கள் வெவ்வேறு ஊர்களுக்குச் செல்ல வேண்டி இருந்தால் வீட்டை வாடைக்கு எடுப்பதில் பக்காவாக இருக்கும். அதேநேரம் வாடகைக்கு நீங்கள் கணிசமான தொகையை எடுத்து வைக்க வேண்டும். வீடு ஒருபோதும் உங்களுக்கு ஒரு செல்வமாக மாறாது.
வாடகை வீடு
ஆனால், வீட்டை வாங்கும்போது நீங்கள் எடுத்தவுடன் டவுன் பேமேண்டாக பெரிய தொகை கட்ட வேண்டும். மேலும், வரி, இன்சூரன்ஸ், வீட்டின் பராமரிக்கும் இருக்கிறது.. இதுபோக மாதாமாதம் குறிப்பிட்ட இஎம்ஐ தொகையையும் செலுத்த வேண்டும். இந்த இஎம்ஐ கூட பெரும்பாலும் சந்தையைப் பொறுத்து வட்டி மாறும் என்பதால் அதுவும் கூட திடீரென உயர வாய்ப்பு இருக்கிறது. அதேநேரம் இதை எல்லாம் தாண்டிவிட்டால் உங்களுக்கு வீடு சொந்தமாகிவிடும். மாதாமாதம் செலவு இருக்காது. ரியல் எஸ்டேட் மதிப்பும் உயரும். அதாவது நீண்ட கால நோக்கில் அது ஒரு செல்வமாகவே மாறும்.
மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கும் 28 வயது இளைஞர் என்ன செய்யலாம் என்ற கேள்விக்குப் பிரபாகர் மேலும் கூறுகையில், "முதலில் எமர்ஜென்சி தொகையை ரெடி செய்து வைக்க வேண்டும். பிறகு தேவையான இன்சூரன்ஸ், ஓய்வுக்கு பிந்தைய செலவுகளுக்கான தொகை ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும். அவை எல்லாம் ஓரளவுக்கு செட்டிலான பிறகு, டவுன்பேமேண்டிற்கான தொகையைச் சேர்க்க வேண்டும். அதன் பிறகு வீடு வாங்குவதே சரியானதாக இருக்கும்.
சரியான வயது எது
வீடு வாங்குவதற்குச் சரியான வயது என்று ஒன்று இல்லவே இல்லை. அது ஒவ்வொருவரைப் பொறுத்து மாறும். உங்கள் வயது, சம்பளம், வேலை நிரந்தரமா இல்லையா என்பதைப் பொறுத்து, உங்கள் குடும்ப பின்னணி எனப் பலவற்றைப் பொறுத்து மாறும். ஆனால், 30களின் தொடக்கத்தில் இருக்கும் ஒருவர் சொந்தமாகத் தாராளமாக வீட்டை வாங்கலாம். அதேநேரம் ஒரு விஷயத்தை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது உங்கள் இஎம்ஐ என்பது உங்கள் வருமானத்தில் 30-40%க்கு மேல் போகவே கூடாது. இல்லையென்றால் குடும்பம் நடத்துவதிலேயே சிக்கல் வரும்.
மாற்று வழி
அதேநேரம் இன்னும் சிலர் வேறு ஒரு ஐடியாவை தருகிறார்கள். அதாவது ஒரு கோடி ரூபாய் வீட்டை வாங்குகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதற்கு நீங்கள் ரூ.20 லட்சம் டவுன் பேமெண்ட் செலுத்திவிட்டு 8% வட்டியில் 30 ஆண்டுகளுக்குச் செலுத்தும் வகையில் ரூ.80 லட்சம் லோன் எடுக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அப்போது நீங்கள் மாதம் சுமார் ரூ.60,000ஐ இஎம்ஐயாக கட்ட வேண்டும்.
அதாவது 30 ஆண்டுகளில் நீங்கள் வட்டியாக மட்டும் சுமார் ரூ.1.35 கோடி செலுத்துவீர்கள். ஒட்டுமொத்தமாக ரூ.2.16 கோடி செலுத்தியிருப்பீர்கள். அதற்குப் பேசாமல் ரூ.30 ஆயிரத்தில் நல்ல சவுகரியமாக ஒரு வீட்டில் வாடைக்குப் போய்விட்டு, மீதி ரூ.30,000ஐ சரியான விஷயத்தில் முதலீடு செய்தால்.. அதே 30 ஆண்டுகளில் உங்களுக்கு மிகப் பெரிய தொகை கிடைக்கும். அதை வைத்து இன்னுமே கூட பெரிய வீட்டைக் கடனே இல்லாமல் வீடு வாங்கலாம் என்கிறார்கள்.
சூட்சுமம் என்ன?
வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை இன்னுமே எல்லாரிடமும் இருக்கிறது. தற்போதைய சூழலில் அதை ஹோல்டில் மட்டுமே போட்டு இருக்கிறார்கள். வீட்டை வாங்குவது ரியல் எஸ்டேட்டில் நல்ல முதலீடாகவே இருக்கும் என்றாலும் அதை எப்போது வாங்க வேண்டும். எப்படி வாங்க வேண்டும் என்பதிலேயே சூட்சமம் இருப்பதாக வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.












Click it and Unblock the Notifications