விட்டதை பிடித்த TCS.. பெரிய ப்ராஜெக்ட் தொக்கா சிக்கியிருக்கு.. இனி கொண்டாட்டம் தான்!
இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), ஒரு மாபெரும் வர்த்தகத்தை கைப்பற்றியுள்ளது. உலகின் முன்னணி ஆயுள் காப்பீடு மற்றும் ஓய்வூதிய நிறுவனங்களில் ஒன்றான 'கனடா லைஃப்' (Canada Life) நிறுவனத்திடமிருந்து பல மில்லியன் யூரோ மதிப்புள்ள, பல ஆண்டுகால பிரம்மாண்ட தொழில்நுட்ப மாற்றுத் திட்ட ஒப்பந்தத்தை டிசிஎஸ் நிறுவனம் வென்றுள்ளது.
இந்த ஒப்பந்தம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜூன் 8, 2026 அன்று டிசிஎஸ் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் உலகளாவிய பிஎஃப்எஸ்ஐ (BFSI - வங்கி, நிதி மற்றும் காப்பீட்டுத் துறை) சந்தையில் தனது அசைக்க முடியாத ஆதிக்கத்தை டிசிஎஸ் நிறுவனம் மீண்டும் நிரூபித்துள்ளது.

இந்த புதிய ஒப்பந்தத்தின்படி, பிரிட்டன் (UK), அயர்லாந்து, ஐல் ஆஃப் மேன் (Isle of Man) மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் முழுவதும் பரந்து விரிந்துள்ள 'கனடா லைஃப்' நிறுவனத்தின் ஒட்டுமொத்த தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை (IT Infrastructure Services) நவீனமயமாக்கும் பொறுப்பை டிசிஎஸ் ஏற்கவுள்ளது.
குறிப்பாக, அந்த நிறுவனத்தின் தரவு மையங்கள் (Data Centres), முக்கிய ஐடி கட்டமைப்பு வசதிகள், End-user computing மற்றும் Software lifecycle management இனி முழுமையாக டிசிஎஸ் நிர்வகிக்கவுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மூலம் இந்த உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் வழியாக, கனடா லைஃப் நிறுவனத்தின் செயல்பாட்டுத் திறன் அதிகரிப்பதுடன், வாடிக்கையாளர்களுக்கான சேவை வேகமும் பன்மடங்கு உயரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராயல் பேங்க் ஆஃப் கனடா (RBC) ஒப்பந்த இழப்பு
காப்பீட்டுத் துறையில் டிசிஎஸ் பெற்றுள்ள இந்த பிரம்மாண்ட வெற்றி, அந்நிறுவனத்திற்கு மிகச் சரியான நேரத்தில் கிடைத்துள்ள ஒரு முக்கிய விஷயமாகும். ஏனெனில், சில நாட்களுக்கு முன்புதான் கனடாவின் மிகப்பெரிய நிதி நிறுவனமான 'ராயல் பேங்க் ஆஃப் கனடா' (RBC) நிறுவனத்துடன் டிசிஎஸ் கொண்டிருந்த 20 ஆண்டுகால நீண்ட தொழில்நுட்ப ஒப்பந்தத்தின் ஒரு பகுதி கைநழுவிப் போனது.
ராயல் பேங்க் ஆஃப் கனடா நிறுவனத்தின் அந்த ஐடி சேவைப் பொறுப்புகள் டிசிஎஸ் நிறுவனத்திடமிருந்து அசென்சர் (Accenture) நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அந்த குறிப்பிட்ட திட்டத்தில் பணியாற்றி வந்த டிசிஎஸ் நிறுவனத்தின் சுமார் 150 ஐடி ஊழியர்கள், தங்களின் வேலைவாய்ப்புப் பரிமாற்ற செயல்முறையின் (Rebadging Process) கீழ் இனி அசென்சர் நிறுவனத்தின் ஊழியர்களாக மாற்றப்படவுள்ளனர் என்ற தகவல் வெளியானது.
வட அமெரிக்கச் சந்தையில் ஏற்பட்ட இந்தச் சிறிய பின்னடைவால் முதலீட்டாளர்கள் மத்தியில் லேசான தொய்வு ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது ஐரோப்பாவில் கிடைத்துள்ள இந்த மெகா மல்டி-மில்லியன் யூரோ ஒப்பந்தம் டிசிஎஸ் நிறுவனத்திற்குப் புதிய உத்வேகத்தைத் தந்துள்ளது.












Click it and Unblock the Notifications