ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை
சென்னை: ஏப்ரல் 1-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை ஒரு நிதியாண்டு இந்தியாவில் கணக்கிடப்படுகிறது. மார்ச் 31-ம் தேதியுடன் அந்த ஆண்டின் அனைத்து நிதி நடவடிக்கைகளும் முடிவடையும். எனவே, ஏப்ரல் 1-ம் தேதி வங்கி ஊழியர்கள் அந்த ஓராண்டு காலத்தின் அனைத்து வரவு-செலவு கணக்குகளையும், தணிக்கை செய்யும் பணிகளை மேற்கொள்வார்கள். இந்த நாளில் வங்கிகள் ஏன் பொதுமக்களுக்காக செயல்படாது. ஏப்ரல் 1ம் தேதியான இன்று என்னென்ன பரிவர்த்தணைகளை மக்கள் மேற்கொள்ள முடியும் என்பதை பார்ப்போம்.
புதிய நிதியாண்டு ஏப்ரல் 1-ல் தொடங்குவதால், கணினி அமைப்புகளைப் புதுப்பிப்பது வங்கிகளின் மரபு.. அத்துடன் பழைய கணக்குகளைச் சீரமைக்கும் பணிகளில் வங்கிகள் ஈடுபடும். வங்கிகள் இந்த முக்கியமான உள்ளிருப்பு பணிகளைச் செய்வதற்கு ஏதுவாக, ஏப்ரல் 1 ல் வாடிக்கையாளர்களுக்கான பொதுப் பணப்பரிவர்த்தனைகளை நிறுத்தி வைக்கின்றன. இன்று வங்கிகள் எந்த ஊழியருக்கும் விடுமுறை தராது. அவர்கள் அனைவரும் அலுவலகத்தில் வேலை செய்வார்கள்.. ஆனால் வங்கி பொதுமக்களுக்குச் செயல்படாது.

ஏப்ரல் 1-ம் தேதி நிதியாண்டு ஏன்
பொதுவாக ஏப்ரல் 1-ம் தேதி நிதியாண்டு ஏன் இந்தியாவில் அறிவிக்கப்பட்டது என்பது பலருக்கும் தெரியாது.இதன் பின்னணி பற்றி பார்ப்போம். உலகம் முழுவதும ஏப்ரல் 1ம் தேதி நிதியாண்டு கிடையாது. உலகில் பல்வேறு நாடுகள் வெவ்வேறு காலகட்டங்களை நிதியாண்டாகக் கொண்டுள்ளன. பல நாடுகள் (உதாரணமாக: அமெரிக்கா, சீனா) ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை காலண்டர் ஆண்டையே நிதியாண்டாகவும் பின்பற்றுகின்றன.
ஆங்கிலேயர் காலம்
இந்தியாவில் ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரையிலான காலத்தை நிதியாண்டாகப் பின்பற்றுவதற்குப் பின்வரும் முக்கிய காரணமும் இருக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், 1867-ல் இங்கிலாந்தின் நிதி ஆண்டு முறையை ஒட்டியே இது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதிருந்து இன்றுவரை அதே நடைமுறை பின்பற்றப்படுகிறது.
பட்ஜெட் காரணம்
ஏனெனில் இந்தியா ஒரு விவசாயம் சார்ந்த பொருளாதாரத்தைக் கொண்ட நாடாகும். இந்தியாவின் பருவமழை மற்றும் அறுவடை காலங்களுக்கு (மார்ச் மாதம் அறுவடை முடிவடையும்) ஏற்றவாறு, ஒரு ஆண்டின் வருமானத்தைக் கணக்கிட்டு, அடுத்த ஆண்டுக்கான திட்டங்களை வகுக்க இந்த ஏப்ரல்-மார்ச் கால அளவு மிகவும் வசதியாக இருக்கிறது. அதேபோல் மத்திய அரசு பட்ஜெட்டை பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்கிறது. புதிய நிதியாண்டு ஏப்ரலில் தொடங்குவதால், பட்ஜெட் அறிவிப்புகளைச் செயல்படுத்துவதற்கு ஏதுவாக ஒரு மாத கால இடைவெளி கிடைக்கிறது.
ஏப்ரல் 1 ம் தேதியான இன்று வங்கிகளில் என்ன செய்ய முடியும்?
ஏப்ரல் 1-ம் தேதி வங்கி கிளைகள் பொதுமக்களுக்கான பணப்பரிவர்த்தனைக்கு (Public Dealing) விடுமுறை என்பதால், நேரில் சென்று எந்த பணிகளையும் முடிக்க முடியாது. நகை அடகு வைப்பது, வீட்டுக்கடன் வாங்குவது, வாகனக்கடன் வாங்குவது, தனிநபர் கடன் வாங்குவது உள்பட கடன் தொடர்பான எந்த பரிவர்த்தனைகளை செய்ய முடியாது. அதேபோல் வங்கியில் போய் பணம் போட முடியாது. இருப்பினும், நீங்கள் கீழ்க்கண்ட டிஜிட்டல் வசதிகளைப் பயன்படுத்தித் தடையின்றிப் பரிவர்த்தனை செய்யலாம்:
கூகுள் பே, போன் பே, பேடிஎம், அமேசான் பே, பாரத் பே, இப்போ பே என பல்வேறு அனைத்து வகையான யுபிஐ செயலிகள் மூலம் பணத்தை அனுப்பவும் பெறவும் முடியும். இணைய வங்கி ) & மொபைல் ஆப் எப்போதும் போல் செயல்படும் கணக்கு விவரங்களைச் சரிபார்க்கலாம். நிதி பரிமாற்றம் (NEFT, IMPS, RTGS) செய்ய முடியும். ஏடிஎம்களில் பணம் எடுப்பது மற்றும் டெபாசிட் செய்வது வழக்கம்போலச் செயல்படும். மின்சாரக் கட்டணம், மொபைல் ரீசார்ஜ் மற்றும் இதர ஆன்லைன் பில்களைச் செலுத்த முடியும்.
எவற்றைச் செய்ய முடியாது?
செக் கிளியரன்ஸ்: காசோலைகளை நேரில் செலுத்தி மாற்ற முடியாது. இதற்கான பணிகள் அடுத்த வேலை நாளில் தான் தொடங்கும். புதிய கணக்கு தொடங்குதல், லாக்கர் வசதி, டிடி (Demand Draft) எடுத்தல் போன்ற கிளைக்குச் சென்று செய்ய வேண்டிய பணிகள் இருக்காது. வங்கி கவுண்டர்களில் செய்யப்படும் அதிகப்படியான பணப் பரிவர்த்தனைகள் அன்று நடைபெறாது.












Click it and Unblock the Notifications