"தங்கம்.." ஒரு லட்ச ரூபாய்! அந்த வார்த்தையை நோட் பண்ணுங்க! இனிமேல் இப்படி தானாம்- ஆனந்த் சீனிவாசன்
சென்னை: தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. கொரோனா சமயத்தில் உயரத் தொடங்கிய தங்கம் விலை அதன் பிறகு குறையவே இல்லை என்று சொல்லலாம். இதற்கிடையே தங்கம் விலை உயர்வுக்கான காரணத்தை விளக்கியுள்ள ஆனந்த் சீனிவாசன், அதற்கு இருக்கும் சர்வதேச தொடர்புகள் குறித்தும் முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்தியாவில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் எப்போதும் தங்கத்தையே முதல் சேமிப்பாகக் கருதுவார்கள். நீண்ட கால நோக்கில் தங்கம் விலை எப்போதும் அதிகரிக்கவே செய்யும். ஆபத்தான காலங்களிலும் கை கொடுக்கும்.. இதன் காரணமாகவே தங்கத்தில் பிரதானமாக முதலீடு செய்வார்கள்.

தங்கம் விலை
அப்படிப்பட்ட தங்கம் விலை கடந்த சில காலமாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.110க்கு மேல் அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாகத் தங்கம் விலை குறைந்தாலும் ஒட்டுமொத்தமாக அது அதிகரித்தே வருகிறது. இதனால் மிடில் கிளாஸ் மக்களால் தங்கத்தை வாங்க முடியாத சூழலே ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே தங்கம் விலை குறித்தும் அது வரும் காலங்களில் எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களைப் பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் பகிர்ந்துள்ளார். தங்கம் விலை உயர்வுக்கும் அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதத்திற்கும் இடையே உள்ள தொடர்பை விளக்கியுள்ள அவர், வரும் காலங்களில் அதன் விலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களையும் பகிர்ந்துள்ளார்.
ஆனந்த் சீனிவாசன்
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "தங்கம் விலை ரூ.8200ஐ தாண்டிவிட்டது. கடந்த ஒரு வாரத்தில் தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இது 22 கேரட் தங்கத்தின் விலை.. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் கூட ஏற்கனவே (சில நாட்களுக்கு முன்பு) ரூ.9000ஐ கடந்து இருந்தது. இதில் ஜிஎஸ்டி சேர்த்தால் ரூ.9400 கிட்ட போய்விடும். எனவே, நீங்கள் தங்கத்தை வெறும் காயினாக வாங்கினாலே கிட்டதட்ட ரூ.10 ஆயிரம் ஆகிவிடும்.
ஆனால், ரூ.10,000 வந்துவிட்டது என உறுதியாகச் சொல்ல சில காலம் காத்திருக்க வேண்டும். ஹச் எனத் தும்பினால் ரூ.10,000ஐ அது தொட்டுவிடும். ஒரு ரூ.300 அதிகரித்தால் நாம் உறுதியாகச் சொல்லிவிடலாம். ஒரு கிராம் ரூ.10,000 என்றால் 10 கிராம் ஒரு லட்ச ரூபாய் என்று அர்த்தம். இவ்வளவு சீக்கிரம் தங்கம் விலை ரூ.10,000 வரும் என நான் எதிர்பார்க்கவே இல்லை.
அமெரிக்கா கனெக்ஷன்
தங்கம் விலை இப்போது உயர்ந்திருக்கிறது என்றால் அதற்கு அமெரிக்கா தான் காரணம்.. அமெரிக்கா மத்திய வங்கி கூட்டம் சமீபத்தில் நடந்த நிலையில், அதன் பிறகு அதன் தலைவர் ஜெரோம் பவல் பேசினார். அமெரிக்காவில் பணவீக்கமும் அதிகரிக்கும் அதேநேரம் வளர்ச்சியும் குறையும் என்கிறார். இது அட்ஜெஸ்ட் ஆகி முடிவதற்குள் இந்தாண்டு இறுதிக்குள் இரண்டு முறை வட்டி விகிதத்தைக் குறைக்கப் போவதாகச் சொல்லியிருக்கிறார். எனவே, சந்தை வட்டி விகிதம் குறைக்கப்படும் என எதிர்பார்க்கிறது.
தங்கம் விலை அதிகரிக்கும்
இதனால் அமெரிக்காவில் டாலர் மதிப்பு குறையும். தங்கம் விலை அதிகரிக்கும். ஏற்கனவே அமெரிக்காவில் தங்கம் விலை (ஒரு அவுன்ஸ்) 3000 டாலரை தாண்டிவிட்டது. இதனால் அமெரிக்காவில் பங்குச்சந்தை உயர்ந்தது.. இந்தியாவிலும் பங்குச்சந்தை உயர்ந்துள்ளது" என்றார். அமெரிக்க மத்திய வங்கி இந்தாண்டு இன்னும் 6 முறை கூட்டத்தை நடத்தவுள்ளது. அதில் இரண்டு முறை வட்டியைக் குறைப்பதாக அறிவித்துள்ளனர். அதுபோல வட்டி விகிதம் குறைக்கப்படும்போது தங்கம் விலை அதிகரிக்கும் என்பதே ஆனந்த் சீனிவாசனின் கருத்தாக இருக்கிறது.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications