30%க்கு மேல் வரி.. 13 வயதில் வைபவ் சூர்யவன்ஷி கட்டும் வரி எவ்வளவு தெரியுமா? தலையே சுத்துது போங்க
சென்னை: ஐபிஎல் தொடரில் இந்தாண்டு பலரது கவனத்தையும் ஈர்த்தவர் வைபவ் சூர்யவன்ஷி. அதிரடி பேட்ஸ்மேனான இவரைக் கண்டால் எதிரணி வீரர்களே ஒரு நொடி மிரண்டு விடுகிறார்கள். இதனால் அவரது வருமானமும் எகிறியுள்ளது. இப்படி மைனர் வருமானம் ஈட்டும்போது எவ்வளவு வருமான வரி கட்ட வேண்டும்.. இதற்கான திட்டம் என்ன என்பது தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்!
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக இளம் வயதிலேயே கோடீஸ்வரராக மாறியவர் வைபவ் சூர்யவன்ஷி. வெறும் 13 வயதிலேயே ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 1.10 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட இவர், தற்போது சுமார் 7 கோடி ரூபாய் சொத்து மதிப்பைக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு சிறுவன் இவ்வளவு பெரிய தொகையைச் சம்பாதிக்கும்போது, அதற்கு வருமான வரி கட்ட வேண்டுமா என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது.

வருமான வரிச் சட்டம்
பொதுவாக இந்தியாவில் ஒரு நபர் 18 வயது பூர்த்தியடைந்த பின்னரே தனிநபர் வருமான வரி செலுத்துவாராகக் கருதப்படுவார் என்ற எண்ணம் மக்களிடையே உள்ளது. ஆனால், இந்திய வருமான வரிச் சட்டம் 1961ன் படி, வருமானம் ஈட்டுவதற்கு வயது ஒரு தடையல்ல. ஒரு மைனர் சிறுவன் அல்லது சிறுமி வருமானம் ஈட்டினால், அதற்கான வரி விதிகள் மற்றவர்களிடமிருந்து சற்று மாறுபடுகின்றன. வைபவ் போன்ற விளையாட்டு வீரர்களுக்கு இது எப்படிப் பொருந்தும் என்பதை விரிவாகப் பார்ப்போம்.
வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 64(1A)-ன் கீழ், ஒரு மைனர் சிறுவன் ஈட்டும் வருமானம் பொதுவாக அவரது பெற்றோரின் வருமானத்துடன் இணைக்கப்படும் . அதாவது, தந்தை அல்லது தாய் ஆகிய இருவரில் யாருடைய ஆண்டு வருமானம் அதிகமாக இருக்கிறதோ, அவர்களுடைய வருமானத்துடன் மைனரின் வருமானமும் சேர்க்கப்பட்டு அதற்குரிய வரி விதிக்கப்படும். பரிசுப் பொருட்கள் அல்லது சேமிப்பின் மூலம் வரும் வட்டி போன்றவற்றுக்கு இந்த விதியே பொருந்தும்.
சட்டம் சொல்வது என்ன
ஆனால், இந்த விதியில் ஒரு முக்கியமான விதிவிலக்கு உள்ளது. ஒரு மைனர் தனது சொந்தத் திறமை, தனித்திறன் அல்லது கடின உழைப்பின் மூலமாக வருமானம் ஈட்டினால், அந்த வருமானம் பெற்றோரின் வருமானத்துடன் சேர்க்கப்படாது. வைபவ் சூர்யவன்ஷி ஒரு கிரிக்கெட் வீரராக தனது திறமையால் ஐபிஎல் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளார். எனவே, இந்த வருமானம் அவருக்கு மட்டுமே சொந்தமானது மற்றும் அவரே இதற்காகத் தனி வரித் தாக்கல் செய்ய வேண்டும்.
வைபவ் சூர்யவன்ஷி போன்ற இளம் விளையாட்டு வீரர்கள் பெறும் ஊதியம் 'தொழில்முறை வருமானம்' அல்லது 'ஊதியம்' என்ற பிரிவின் கீழ் வரும். ஐபிஎல் போன்ற தொடர்களில் விளையாடுவதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவருக்கு வழங்கும் தொகையில், வரி பிடித்தம் செய்யப்பட்ட பின்னரே மீதத் தொகை வழங்கப்படும். அவருக்கு 18 வயது பூர்த்தியாகாததால், அவரது தந்தை அல்லது தாய் பாதுகாவலராக இருந்து அவரது வரி கணக்குகளைக் கவனிப்பார்கள்.
எந்த வரி பொருந்தும்
மைனராக இருந்தாலும், ஒரு தனிநபருக்குப் பொருந்தும் அதே வருமான வரி அடுக்குகளே இவர்களுக்கும் பொருந்தும். புதிய வரி முறையின்கீழ் அதிகபட்சம் 12.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி விலக்கு உண்டு. ஆனால் வைபவ் சூர்யவன்ஷியின் வருமானம் ஒரு கோடி ரூபாயைத் தாண்டுவதால், அவர் அதிகபட்ச வரி விகிதமான 30 சதவீத வரியைச் செலுத்த வேண்டியிருக்கும். இதனுடன் கூடுதல் கட்டணங்களும் பொருந்தும்.
மைனர்கள் சார்பாக வருமான வரித் தாக்கல் செய்யும்போது, வருமான வரி இணையதளத்தில் Representative Assessee என்ற முறையில் பதிவு செய்ய வேண்டும். வைபவ்வின் தந்தை அல்லது சட்டப்பூர்வப் பாதுகாவலர் இதற்கான பொறுப்பை ஏற்பார். மைனரின் பெயரிலேயே பான் கார்டு பெறப்பட வேண்டும். அனைத்து நிதி பரிவர்த்தனைகளும் அந்த பான் கார்டு மூலமாகவே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது கட்டாயமாகும்.
எப்படி
- அதாவது விளையாட்டு/ சினிமா என திறமை மூலம் வருமானம் ஈட்டுவோர் இப்படி பாதுகாவலர் மூலம் மைனர் பிரிவில் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.
- முதலீட்டு வட்டி / பரிசு மூலம் மைனருக்கு வருமானம் கிடைக்கும் போது, அது அதிக வருமானம் ஈட்டும் பெற்றோரின் வருமானத்தோடு சேர்க்கப்படும்.
வைபவ் சூர்யவன்ஷியின் வளர்ச்சி இந்திய இளம் தலைமுறைக்கு ஒரு பெரிய உந்துதலாக அமைந்துள்ளது. அதே சமயம், இளம் வயதிலேயே பெரிய தொகையை ஈட்டும்போது நிதி மேலாண்மை மற்றும் வரி விதிகளைச் சரியாகப் பின்பற்றுவது மிகவும் அவசியம். வைபவ் போன்ற திறமையான வீரர்கள் இந்திய விளம்பரச் சந்தையிலும் பெரிய அளவில் ஈர்க்கப்படுவதால், வரும் காலங்களில் அவர்களது வருமானம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இப்போது அவரது பெற்றோரே இந்த அனைத்தையும் ஒருங்கிணைத்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications