தேர்தல் அறிவிப்பிற்கு.. சில மணி நேரம் முன் வந்த முக்கிய உத்தரவு.. பஞ்சாபில் என்ன தான் நடக்கிறது?
சண்டிகர்: பஞ்சாபில் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளக் காங்கிரஸ் கட்சி போராடி வரும் சூழலில், அக்கட்சிக்கு அடுத்தடுத்து சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பஞ்சாப் மாநிலத்தில் மட்டுமே காங்கிரஸ் ஆளும் கட்சியாக உள்ளது.
எனவே, அங்கு மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இருப்பினும், இதுவரை அங்கு நடைபெற்ற நிகழ்வுகள் அக்கட்சிக்குச் சாதகமாக இல்லை.

பஞ்சாப் சூழல்
முதலில் முதல்வராக இருந்த அமரிந்தர் சிங்கிற்கும் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே மோதல் உச்சமடைய, அமரிந்தர் சிங் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக சரண்ஜித் சிங் சன்னி கொண்டு வரப்பட்டார். பஞ்சாபில் சுமார் 30% தலித்துகள் உள்ளதால் அதே சமூகத்தைச் சேர்ந்த சரண்ஜித் சிங் சன்னி முதல்வராக நியமிக்கப்பட்டது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அதேநேரம் இப்போது பஞ்சாபில் பிரதமர் பாதுகாப்பு குறைபாடு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய உத்தரவு
இந்தச் சூழலில் தான் இன்று மாலை 5 மாநில தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாக சில மணி நேரத்திற்கு முன்பு பஞ்சாப் மாநிலத்திற்கு புதிய டிஜிபியாக வி.கே.பவ்ரா நியமிக்கப்பட்டார். சர்வீஸ் கமிஷன் வழங்கிய மூன்று பெயர்களில் இருந்து பாவ்ரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் அடுத்த 2 ஆண்டுகளுக்கு இந்த பதவியில் இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

100 நாட்களுக்குள் 3 டிஜிபி
பஞ்சாபில் வெறும் 100 நாட்களுக்குள் 3 பேர் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக கடந்த செப். மாதம் தான் இக்பால் ப்ரீத் சிங் சஹோடா டிஜிபியாக நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்தில் தான் அமரீந்தர் சிங் மற்றும் நவ்ஜோத் சிங் சித்து இடையே மோதல் ஏற்பட்டது. அமரிந்தர் சிங் கட்சியில் இருந்து வெளியேறிய பின்னர், கடந்த டிசம்பரில் சட்டோபாத்யாய பஞ்சாப் டிஜிபியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் நியமிக்கப்பட்டு சில வாரங்களில் இப்போது வி.கே.பவ்ரா டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

என்ன காரணம்
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு, பஞ்சாப் மாநிலத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்கப் பிரதமர் மோடி சென்றிருந்தார். ஹுசைன்வாலாவில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வெறும் 10 கிலோமீட்டர் தொலைவில் அவரது காரை போராட்டக்காரர்கள் மறித்தனர். இதனால் மேம்பாலம் ஒன்றின் மீது சுமார் 20 நிமிடங்கள் பிரதமர் மோடி காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதையடுத்து வேறுவழியின்றி பிரதமர் மோடி திரும்பினார்.

உள் துறை
இது பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாட்டில் மாபெரும் குறைபாடாகப் பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், இது குறித்து உள் துறை அமைச்சகம் நேரடியாக விசாரணைக்கு நடத்தி வருகிறது. அதன்படி தற்போது டிஜிபி பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டுள்ள சட்டோபாத்யாய உள்ளிட்ட பல மூத்த பஞ்சாப் போலீஸ் அதிகாரிகளிடம் உள் துறை அமைச்சக அதிகாரிகள் நேரடியாக விசாரணை நடத்தினர். இந்த விவகாரம் பஞ்சாப் அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தியுள்ள சூழலில், நிலைமையை சமாளிக்க தற்போது டிஜிபி மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications