4 மாவட்டம்.. 150 கிமீ.. 6 நாட்கள்! ஹரியானாவில் காங்கிரஸ் மாஸ் பிளான்.. கைகொடுக்குமா ராகுல் யாத்திரை?
சண்டிகர்: ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை தீவிரமடைந்துள்ள நிலையில் நாளை (ஜன.05) இந்த யாத்திரை உத்தரப் பிரதேசத்திலிருந்து ஹரியானாவில் நுழைகிறது.
ஏற்கெனவே இம்மாநிலத்தில் காங்கிரஸ் வலுவாக இருந்த நிலையில் கடந்த 2014ம் ஆண்டு முதல் தனது பிடியை கட்சி கொஞ்சம் கொஞ்சமாக இழக்கத் தொடங்கியது. தற்போது பாஜகதான் ஆட்சியில் இருக்கிறது. எனவே, மீண்டும் மாநிலத்தில் கட்சியின் செல்வாக்கை அதிகரிக்க இந்த யாத்திரையை பயன்படுத்திக்கொள்ள காங்கிரஸ் திட்டமிட்டிருக்கிறது. அதற்கேற்றாற்போல சில முன்னேற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது.
திட்டமிட்டபடி நாளை ஹரியானாவின் பானிபட் பகுதிக்குள் யாத்திரை நுழையும். யாத்திரையை வரவேற்க கூடுதலான ஆட்களை திரட்ட வேண்டும் என்று கட்சியின் தலைவர்கள் பானிபட், கர்னால் மற்றும் குருக்ஷேத்ரா மாவட்டங்களில் தங்கி ஆட்களை தயார் செய்து வருகின்றனர். நாளை மறுநாள் அதாவது ஜனவரி 6ம் தேதி பானிபட்டில் பேரணி முடிந்தவுடன் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் ராகுல் காந்தி சிறப்புரையாற்றுகிறார்.

பேரணி
இந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தனது பலத்தை நிரூபித்தே ஆக வேண்டும். ஏனெனில் இதற்கு முன்னர் கடந்து வந்த மாநிலங்களில் காங்கிரசின் செல்வாக்கை பார்த்து பாஜக சற்று அதிர்ச்சியில்தான் இருக்கிறது. அதேபோல பாஜக ஆளும் மாநிலங்களிலும் இந்த எண்ணிக்கை கூடுதலாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிடில் யாத்திரை கடும் விமர்சனத்திற்கு உள்ளாகும். எனவேதான் ஹரியானா காங்கிரஸின் முக்கிய தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா பேரணியில் ஆட்களை கூடுதலாக பங்கேற்க வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். மாநிலம் முழுவதும் சுமார் 6 நாட்கள் ராகுல் காந்தி பேரணியை மேற்கொள்கிறார்.

ஹரியானா
பானிபட்டில் இரண்டு நாட்களும், கர்னால், குருக்ஷேத்ரா மற்றும் அம்பாலா மாவட்டங்களில் தலா ஒரு நாட்களும் யாத்திரை நடைபெறுகிறது. இதனையடுத்து ஜனவரி 10ம் தேதி யாத்திரை பஞ்சாப் மாநிலத்தில் நுழைகிறது. இதற்கு முன்னர் கர்னால் மாவட்டத்தில் கபடி போட்டி ஒன்று நடைபெறுகிறது. இந்த போட்டியை ராகுல் காந்தி பார்த்து ரசிப்பார். அதேபோல குருக்ஷேத்ராவில் உள்ள புனித தலங்களுக்கு சென்று தரிசனம் செய்வார். ஜனவரி 8 ஆம் தேதி பிரம்ம சரோவரில் "ஆரத்தியில்" பங்கேற்பார் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் ராகுல் காந்தியை தொடர்ந்து அமித்ஷா 11 மாநிலங்களுக்கு அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

தேர்தல்
அதன்படி ஹரியானாவுக்கும் இம்மாத இறுதியில் செல்ல இருக்கிறார். ஏற்கெனவே கடந்த 2019ம் ஆண்டு ஹரியானா சட்டப் பேரவை தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், மாநிலத்தின் உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றில் காங்கிரஸ் கடும் பின்னடைவை சந்தித்திருக்கிறது. எனவே எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஹரியானாவில் வெற்றி பெற வேண்டும் என்று உறுதியுடன் இருக்கிறது. அதற்காக கட்சி தலைவர்களை கடுமையாக வேலை வாங்கி வருகிறது. கடந்த 2014ம் ஆண்டு தேர்தலை விட 2019ம் ஆண்டு தேர்தலில் கட்சியின் செல்வாக்கு கொஞ்சம் அதிகரித்திருக்கிறது.இதனை மேலும் அதிகரிக்க வைப்பதே காங்கிரஸின் நோக்கமாகும்.

வாக்கு வங்கி
மாநிலத்தின் பெரும்பாலான தொகுதிகளில் பஞ்சாபியர்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கிறது. எனவே இவர்களிடம் காங்கிரஸ் தனது செல்வாக்கை அதிகரிக்க வேண்டும். பாஜக தனது வெற்றிக்கு இதைதான் செய்தது. அதாவது பஞ்சாபியான மனோகர் லால் கட்டாரை முதலமைச்சர் வேட்பாளராக 2014ல் பாஜக நிறுத்தியனர் மூலம் அவர்களது வாக்கு வங்கியை கவர்ந்தது. எனவே காங்கிரசும் இது போல் ஏதாவது செய்தால்தான் அது மாநிலத்தில் ஆதிக்கம் செலுத்தும். ஒட்டுமொத்தமாக 6 நாட்கள் 4 மாவட்டங்கள் 150 கி.மீ என ராகுல் காந்தி ஹரியானாவில் பயணிக்கிறார்.












Click it and Unblock the Notifications