பஞ்சாப் தேர்தலுக்கு டிரைலர்- சண்டிகர் மாநகராட்சி தேர்தலில் தனிபெரும் கட்சியாக ஆம் ஆத்மி- பாஜக தோல்வி
சண்டிகர்: சண்டிகர் மாநகராட்சிக்கான தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. சண்டிகர் மாநகராட்சியின் மொத்தம் 35 வார்டுகளில் 14 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. 2-வது இடத்தில் ஆளும் பாஜகவுக்கு 12 இடங்கள் கிடைத்துள்ளன.
பஞ்சாப் சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றும்; அதேநேரத்தில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு என்கின்றன கருத்து கணிப்புகள்.
பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸில் உட்கட்சி மோதலால் கட்சியே பிளவுபட்டிருக்கிறது. முதல்வராக இருந்த அமரீந்தர்சிங் காங்கிரஸை விட்டே வெளியேறிய போதும் உட்கட்சி மோதல் உச்சகட்டம்தான்.

சண்டிகர் மாநகராட்சி தேர்தல்
பஞ்சாப் தேர்தலுக்கு முன்னதாக சண்டிகர் மாநகராட்சி தேர்தல் நடைபெற்றது. சண்டிகர் மாநகராட்சி பாஜக வசம் இருந்தது. சண்டிகர் மாநகராட்சியில் மொத்தம் 35 வார்டுகள் உள்ளன. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

வென்றது ஆம் ஆத்மி
இந்த வாக்கு எண்ணிக்கையில் ஆம் ஆத்மி 14 வார்டுகளைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக வென்றுள்ளது. சண்டிகர் மாநகராட்சியில் பெரும்பான்மைக்கு தேவை மொத்தம் 19 இடங்கள். தற்போதைய ஆளும் பாஜகவுக்கு 12 இடங்கள் கிடைத்துள்ளன. காங்கிரஸ் கட்சி 8 வார்டுகளிலும் சிரோமணி அகாலிதளம் 1 இடத்திலும் வென்றுள்ளது.

மாஜி மேயர்கள் தோல்வி
பாஜகவின் தற்போதைய மேயர் ரவிகாந்த் சர்மா, முன்னாள் மேயர்கள் தாவேஸ் மவுட்கில், ராஜேஷ் கலியா ஆகிய 3 பேரும் இந்த தேர்தலில் தோல்வியைத் தழுவி உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மேயர் கமலேஷும் தோல்வியைத் தழுவி இருக்கிறார். சண்டிகர் யூனியன் பிரதேச காங்கிரஸ் தலைவர் சுபாஷ் சாவ்லாவின் மகன் சுமித் சாவ்லாவும் இத்தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.

இது ச்சும்மா டிரைலர்
இந்த வெற்றி தொடர்பாக கருத்து தெரிவித்த ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் ராகவ் சதா, பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கான முன்னோட்டம்தான் இது.. பஞ்சாப் தேர்தலில்தான் மெயின் பிக்சரை பார்ப்பீங்க என குதூகலமாக கூறினார்.












Click it and Unblock the Notifications