ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. பாஜகவுக்கு ஆப்பா? கூட்டணியை ஓகே செய்த இரண்டு முக்கிய கட்சிகள்!
சண்டிகர்: ஹரியானாவில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநிலத்தில் ஆட்சி மாற்றத்திற்கு முக்கிய காரணமாக இருக்கும் ஜனநாயக ஜனதா கட்சி (ஜேஜேபி), சந்திரசேகர் ஆசாத்தின் ஆசாத் சமாஜ் கட்சியுடன் கூட்டணியை உறுதி செய்திருக்கிறது. இந்த கூட்டணி ஹரியானாவில் உள்ள 21 சதவிகித தலித் வாக்கு வங்கியை குறி வைத்திருக்கிறது.
ஹரியானாவில் 90 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இந்த தொகுதிகள் அனைத்திற்கும், அக்டோபர் 1ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 4ம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் வெளியாகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து அம்மாநிலத்தில், களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜக பெரும்பான்மையை பெறவில்லை, அப்போது ஜேஜேபி கட்சிதான், பாஜகவுக்கு 10 எம்எல்ஏக்களுடன் ஆதரவளித்து ஆட்சியில் அமர வைத்தது. இதற்கு கைமாறாக, இக்கட்சியின் தலைவரான துஷ்யந்த் சவுதாலாவை, பாஜக துணை முதல்வராக்கியது. ஆனால், இந்த ஆண்டு தொடக்கத்தில், நிலைமை தலைகீழாக மாறியது. அதாவது, ஜேஜேபி கட்சி பாஜகவுக்கான தனது வாபஸை திரும்ப பெற்றுக் கொண்டது.
மறுபுறம் இக்கட்சியிலிருந்து 7 எம்எல்ஏக்கள் விலகிவிட்டனர். இவர்களில் ஒருவர் காங்கிரசில் இணைந்தார். இரண்டு பேர் பாஜகவில் இணைந்துள்ளனர். இந்நிலையில், இந்த தேர்தலில் மீண்டும் பாஜகவுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்று ஜேஜேபி கூறியிருக்கிறது. அதேநேரம், சந்திரசேகர் ஆசாத்தின் ஆசாத் சமாஜ் கட்சியுடன் கூட்டணியை உறுதி செய்திருக்கிறது. இந்த கூட்டணி ஹரியானாவில் உள்ள 21 சதவிகித தலித் வாக்கு வங்கியை குறி வைத்திருக்கிறது.
கூட்டணி குறித்து பேசிய இரு கட்சியின் தலைவரும், "இந்த கூட்டணியுடன், நாங்கள் ஹரியானாவை முன்னோக்கி கொண்டு செல்வோம்" என்று கூறியுள்ளனர். மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 70 தொகுதிகளில் ஜேஜேபியும், 20 இடங்களில் ஆசாத் சமாஜ் கட்சியும் (ஏஎஸ்பி) போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த கூட்டணி ஜாட் மற்றும் தலித் வாக்கு வங்கியை ஒருங்கிணைக்கும் என்று சொல்லப்படுகிறது. ஹரியானா மக்கள் தொகையில் ஜாட் இனத்தவர்கள் 26% இருக்கிறார்கள்.
மறுபுறம் பாஜகவில், தேர்தலில் போட்டியிட பல முக்கிய தலைகள் ஆர்வம் காட்டி வருவதால், யாரை வேட்பாளராக தேர்ந்தெடுப்பது என, கட்சி குழம்பி போயுள்ளது. குறிப்பாக பாத்ஷாபூர் சட்டமன்றத் தொகுதியில், முதல்வர் மனோகர் லாலுக்கு சிறப்புப் பணி அதிகாரியாக இருந்த ஜவஹர் யாதவ் போட்டியிட ஆர்வம் தெரிவித்திருக்கிறார். ஆனால், அதேபோல மாவட்டத் தலைவர் கமல் யாதவ், முன்னாள் அமைச்சர் ராவ் நர்பீர் சிங் ஆகியோரும் தங்களை வேட்பாளராக அறிவிக்க கோரி கட்சி தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
இந்த தொகுதி குர்கான் மக்களவை தொகுதியின் கீழ் வருகிறது. இந்த மக்களவை தொகுதியில் பாஜகதான் சமீபத்தில் வெற்றி பெற்றிருந்தது. சுமார் 1.25 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இந்த தொகுதியை பாஜக கைப்பற்றியிருந்தது.
தொகுதியில், யாதவர்கள் 1.25 லட்சம் பேரும், ஜாட்கள் சுமார் 60,000 பேரும், பட்டியல் சமூகத்தினர் 50,000 பேரும், பிராமணர்கள் 30,000 பேரும் உள்ளனர். இவர்கள் தவிர பஞ்சாபிகள், குஜ்ஜர்கள், ராஜபுத்திரர்கள் மற்றும் முஸ்லிம்கள் போன்ற பிற சமூகத்தினரும் ஓரளவு இருக்கின்றனர். எனவே, இதனையெல்லாம், கணக்கில் கொண்டுதான் வேட்பாளரை கட்சி களமிறக்கும் என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications