ஜிஎஸ்டி கூட்டம்.. மதுரைக்கு அனைவரையும் வரவேற்கிறோம்! நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவித்த ஸ்டாலின்
சண்டிகர்: ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் மதுரையில் நடைபெறும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளதற்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 47 வது கூட்டம் சண்டிகரில் 2 நாள் நடந்தது. இதில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர். தமிழகம் சார்பில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார். இந்த கூட்டம் நேற்று நிறைவு பெற்றது.
இந்த கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி எல்இடி விளக்குகளுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும், சூரியசக்தியில் இயங்கும் ஹீட்டர்களுக்கான ஜிஎஸ்டி வரி 5இல் இருந்து 12 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பேனா மை, கத்தி, பிளேடு ஸ்பூன்களுக்கு ஜிஎஸ்டி வரி 12ல் இருந்து 18 சதவீதமாக கூட்டப்பட்டுள்ளது. கிரைண்டர், அரிசி ஆலை இயந்திரங்களுக்கான வரி 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும் அதிகரிக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இந்த 2 நாள் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்று முடிவடைந்தது. இதையடுத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ‛‛ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் ஆகஸ்டில் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் முதல்வாரம் தமிழகத்தின் மதுரையில் இந்த கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் ஆன்லைன் விளையாட்டு, குதிரை பந்தயம் மீதான ஜிஎஸ்டி குறித்து விவாதிக்கப்படும்'' என்றார்.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை மதுரையில் நடத்த வேண்டும் என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அழைப்பு விடுத்த நிலையில் அதனை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்நியைில் நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை மதுரையில் நடத்த வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. கோவில் நகரமான மதுரை மற்றும் அங்குள்ள மக்கள் சார்பில் மத்திய அமைச்சர்ள், மாநில அ்மைச்சர்கள், உயர் அதிகாரிகளை நாங்கள் வரவேற்கிறோம்'' என குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications