சாணியை குவித்து தொல்லை.. குர்கான் மைதானத்தில் முஸ்லீம்கள் தொழுகை நடத்த இந்து அமைப்புகள் எதிர்ப்பு
சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் உள்ள குர்கான் பகுதியில் உள்ள மைதானத்தில் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்கு இந்து அமைப்புகள் அனுமதிக்காததால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
குர்கான் நகரில் உள்ள செக்டார் 12 என்ற பகுதி, தொழுகை நடத்துவதற்காக 2018ஆம் ஆண்டு இந்து மற்றும் முஸ்லிம்கள் இடையே ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட ஒரு பகுதியாகும்.

இந்த பகுதிகளில் தொழுகை நடத்தக் கூடாது என்று அப்போது தகராறு எழுந்தபோது பேச்சுவார்த்தை நடத்தி இந்த முடிவு எட்டப்பட்டு இருந்தது.
ஆனால் இந்த ஒப்பந்தத்தை மதிக்காமல் மீண்டும் இந்து அமைப்புகள் தொழுகை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு வகையில் இடையூறுகள் செய்து வருகின்றன.
இன்று காலையிலேயே இந்து அமைப்புகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் இந்த மைதானத்தில் சென்று அமர்ந்து கொண்டு, இதை கைப்பந்து மைதானமாக மாற்ற இருப்பதாக தெரிவித்தனர். வெள்ளிக்கிழமையான இன்று அங்கு தொழுகை நடத்த வந்த இஸ்லாமியர்களை தொழுகை நடத்தக் கூடாது என்று திருப்பி அனுப்பினர்.
கடந்த வாரம் இதே மைதானத்தில் பசு சாணங்கள் நிறைய கொண்டு போடப்பட்டு அங்கு தொழுகை நடத்த விடாமல் இந்து அமைப்புகள் இடையூறு செய்து இருந்தன. இந்த நிலையில் இந்த வாரம் கைப்பந்து மைதானம் அமைக்க இருப்பதாக கூறி தொழுகைக்கு இடையூறு செய்கின்றனர்.
குர்கான் நகர நிர்வாகம், கடந்த வாரம் தொழுகை நடத்துவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த 8 பகுதிகளை தொழுகையை நடத்த கூடாத இடங்கள் என்று மாற்றி அறிவித்தது. பொது இடங்களில் தொழுகை நடத்த தங்கள் அனுமதி தேவை என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதிகாரிகள் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு எங்கெங்கு தொழுகை நடத்தலாம் என்பது பற்றி முடிவு எடுக்கப்படும் என்று நகர நிர்வாகம் அறிவித்திருந்தது.
அதேநேரம், இதுவரை அதுபோன்ற கமிட்டி அமைக்கப்படவில்லை. செக்டார் 12 உள்ளிட்ட பொது இடங்களில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தக் கூடிய பகுதிகளுக்கு வெளியே இந்து அமைப்பினர் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வந்ததால் நிர்வாகம் இதுபோன்ற ஒரு முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டது.
இந்தநிலையில் ஹரியானா மாநில முதல்வர் எம்.எல் கட்டார் (பாஜக) அளித்த பேட்டியில், அனைவருக்கும் வழிபாடுகள் நடத்துவதற்கு உரிமை இருக்கிறது. அதேநேரம் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் பிரார்த்தனைகள் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications