அன்று குஜராத்.. இன்று டெல்லி மாடலா? நெவர்... பஞ்சாப் மக்கள் அனுமதிக்கமாட்டார்கள்: பிரியங்கா காந்தி
சண்டிகர்: பஞ்சாப் சட்டசபை தேர்தலில் டெல்லி மாடலை முன்வைத்து ஆம் ஆத்மி கட்சி பிரசாரம் செய்வதை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் மாநில சட்டசபைக்கு பிப்ரவரி 20-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

டெல்லி கன்ட்ரோல் அரசு
இத்தேர்தலுக்கான பிரசாரம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தேர்தல் பிரசாரத்தில் பேசியதாவது: 2017-ம் ஆண்டு முதல் பஞ்சாப் முதல்வராக அமரீந்தர்சிங் இருந்தார். ஆனால் டெல்லி பாஜகவின் வழிகாட்டுதல்களிலேயே அமரீந்தர்சிங் செயல்பட்டார்.

பஞ்சாப்பில் இருந்து அரசாங்கம்
இத்தகைய காரணங்களால்தான் பஞ்சாப் முதல்வர் பதவியில் இருந்து அமரீந்தர்சிங்கை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்போதைய பஞ்சாப் அரசாங்கம் டெல்லியில் இருந்து ஆட்சி செய்யப்படவில்லை; பஞ்சாப் மக்களை பஞ்சாப்பில் இருந்து ஆளுகிற அரசாங்கம் இப்போது செயல்பட்டு வருகிறது.

ஆம் ஆத்மியின் அஜெண்டா
இதேபோன்ற அஜெண்டாவுடன்தான் ஆம் ஆத்மியும் செயல்பட்டு வருகிறது. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இருந்து உருவானதுதான் ஆம் ஆத்மி கட்சி. ஆம் ஆத்மி கட்சி டெல்லி மாடல் ஆட்சியை உருவாக்க நினைக்கிறது. வாக்காளர்கள் ஒன்றை மட்டும் மறந்துவிடக் கூடாது.. இப்படித்தான் 2014-ல் குஜராத் மாடல் என ஒன்றை சொல்லி மக்களை முட்டாளாக்கினர். இப்போது அதை வியூகத்தை ஆம் அத்மி கையில் எடுத்துள்ளது.

பஞ்சாப் ரத்தம்
ஓராண்டு கால விவசாயிகளின் போராட்டத்தின் போது எண்ணற்ற விவசாயிகள் உயிரிழந்தனர். ஆனால் பஞ்சாப் விவசாயிகள் தங்களது போராட்டங்களை விட்டுக் கொடுக்கவில்லை. இதற்கு பெயர்தான் பஞ்சாபியாத். இதனை என்னால் புரிந்து கொள்ள முடியும். ஏன் என்றால் நான் பஞ்சாபியரை திருமணம் செய்துள்ளேன். என் குழந்தைகள் பஞ்சாப் ரத்தம் கொண்டார்கள். பஞ்சாப் மக்கள் வீர நெஞ்சம் கொண்டவர்கள். இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார்.












Click it and Unblock the Notifications