இதற்கு முன் இப்படி செய்ததில்லை! ராகுல் சர்ப்ரைஸ்.. பஞ்சாப்பில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் காங்!
சண்டிகர்: பஞ்சாப் சட்டசபை தேர்தலில் விரைவில் காங்கிரஸ் கட்சி தனது முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பஞ்சாப்பில் கடந்த வருடம் முன்னாள் முதல்வர் அம்ரிந்தர் சிங்கிற்கும் காங்கிரஸ் மாநில தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவிற்கும் இடையே மோதல் நிலவி வந்தது. இந்த மோதல் பெரிதாகவே அம்ரிந்தர் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சியில் இருந்து வெளியேறினார்.
இதையடுத்து நவ்ஜோத் சிங் சித்து முதல்வர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு நெருக்கமான சரண்ஜித் சிங் சன்னி முதல்வராக நியமிக்கப்பட்டார். ஆனால் முதல்வரான சில நாட்களிலேயே சரண் ஜித் சிங் சன்னிக்கு நவ்ஜோத் சிங் சித்துவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அமைச்சரவை
இருவருக்கும் இடையே அமைச்சரவையை தேர்வு செய்வதில் இருந்து பல விஷயங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தற்போது பஞ்சாப்பில் பிப்ரவரி 20ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதிலும் கூட இருவர் இடையே கடுமையான கருத்து வேறுபாடு உள்ளது. இதனால் களத்திலும் தேர்தல் பணிகள் சுணக்கம் அடைந்துள்ளன. இந்த தேர்தலில் வென்றால் பஞ்சாப்பின் அடுத்த முதல்வர் யார் என்பதே நவ்ஜோத் சிங் சித்து மற்றும் சன்னி இடையே நிலவும் மோதலுக்கு காரணம்.

நவ்ஜோத் சிங் சித்து
நவ்ஜோத் சிங் சித்து முதல்வராக வேண்டும் என்ற திட்டத்தில் இருக்கிறார். அதேபோல் சன்னியும் தொடர்ந்து முதல்வர் பதவியில் நீடிக்க வேண்டும் என்ற திட்டத்தில் உள்ளார். இந்த நிலையில்தான் பஞ்சாப் சட்டசபை தேர்தலில் விரைவில் காங்கிரஸ் கட்சி தனது முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜலந்தரில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கு காங்கிரஸ் விரைவில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும்.

சரண் ஜித் சிங் சன்னி
இதற்கு முன்பெல்லாம் இப்படி செய்தது இல்லை. ஆனால் இந்த முறை வேட்பாளரை அறிவிக்கும் முடிவில் இருக்கிறோம். காங்கிரஸ் நிர்வாகிகள்தான் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்ய போகிறார். ஒரே கட்சியை இரண்டு பேர் தலைமை தாங்க முடியாது. ஒரே ஒருவர் மட்டுமே கட்சியை வழி நடத்த முடியும். காங்கிரஸ் கட்சியினரின் கோரிக்கையும் அதுவாகவே உள்ளது. முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படும் நபருக்கு இன்னொரு நபர் முழு ஆதரவு தருவதாக கூறியுள்ளார்.

ராகுல் காந்தி
சித்து, சன்னி என்று இருவரின் மனதிலும் காங்கிரஸ் கட்சிதான் இருக்கிறது. நான் பஞ்சாப் மக்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டு இருக்கிறேன். தொடர்ந்து பஞ்சாப் மக்களிடம் இருந்து நிறைய கற்பேன். இந்த மாநிலத்தின் அமைதிக்கு களங்கம் ஏற்பட விடமாட்டேன் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி இப்படி முதல்வர் வேட்பாளர் பற்றி பேசிய போது சித்து, சன்னி இருவருமே மேடையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications