பஞ்சாப் முதல்வரை.. அவரின் தொகுதிலேயே வீழ்த்திய.. சின்ன போன் ரிப்பேர் கடை ஓனர்! வென்றது எப்படி?
சண்டிகர்: பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை அவரின் சொந்த தொகுதியிலேயே போன் சரி செய்யும் கடை வைத்துள்ள இளைஞர் வீழ்த்தி இருக்கிறார்.
பஞ்சாப் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை அடைந்துள்ளது. இங்கு முதல்முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைகிறது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி 91 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
இங்கு காங்கிரஸ் கட்சி 19 இடங்களில் முன்னிலை வகிக்கிறது; அகாலிதளம் 4 இடத்தில் முன்னிலையில் உள்ளது. பாஜக கூட்டணி 2 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

தோல்வி
தேர்தலில் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் மொத்தம் இரண்டு தொகுதியில் போட்டியிட்டார். இரண்டிலும் அவர் தோல்வி அடைந்துவிட்டார். பதார் என்ற தனி தொகுதியில் இவர் போட்டியிட்டார். அதேபோல் சம்கார் சாகிப் தொகுதியில் முதல்வர் சரண்ஜித் சிங் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் சரண்ஜித் சிங் என்பவரிடம் தோல்வி அடைந்துள்ளார். இதில் சரண்ஜித் சிங் பதார் தொகுதியில் தோல்வி அடைந்ததுதான் அரசியல் உலகில் வைரலாகி உள்ளது.

யாரிடம் தோல்வி
பதார் தொகுதியில் லாப் சிங் என்பவரிடம் சன்னி தோல்வி அடைந்தார். லாப் சிங் ஆம் கட்சி வேட்பாளர். உள்ளூரை சேர்ந்தவர். இவர் அங்கு மொபைல் போன் ரிப்பேர் செய்யும் கடை வைத்துள்ளார். மிகவும் எளிமையான குடும்பத்தை சேர்ந்தவர். இவரின் அப்பா அரசியல் பக்கம் செல்லாதவர். இவரின் அப்பா லாரி டிரைவராக இருக்கிறார். அதேபோல் இவரின் தாயார் வீடு வேலை செய்கிறார்.

எப்படி இணைந்தார்
ஆம் ஆத்மி கட்சியில் 2013ல் சாதாரண உறுப்பினராக இவர் இணைந்தார். பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சிக்கு போஸ்டர் ஒட்டும் கடைநிலை தொண்டராக போட்டியிட்டார். அங்கிருந்து வேகமாக சொந்த ஊரில் கட்சி பணிகளை செய்து தலைமையின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதையடுத்து சட்டசபை தேர்தலில் லாப் சிங் பதார் தொகுதியில் போட்டியிட வைக்கப்பட்டார்.

முதல்வர்
அங்கு முதல்வர் சன்னி போட்டியிடுவது தெரிந்ததும் உள்ளூர் நிர்வாகியான லாப் சிங் களமிறக்கப்பட்டார். இவரை பெரிய அளவில் நம்பிக்கையோடு எல்லாம் ஆம் ஆத்மி களமிறக்கவில்லை. முயற்சி செய்து பார்க்கலாம் என்றே களமிறக்கி உள்ளனர். ஆனால் முதல்வரை எதிர்த்து போட்டியிடுகிறோம் என்றெல்லாம் கவலைப்படாமல் நேரடியாக களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்தார்.இந்த தொகுதியில் மொத்தம் 74 கிராமங்கள் இருந்துள்ளது.

கிராமங்கள் பற்றி தெரியும்
இந்த கிராமங்கள் அனைத்தும் லாப் சிங்கிற்கு அத்துப்படி. எங்கே என்ன பிரச்சனை என்று இவருக்கு தெரியும். ஆம் ஆத்மி சார்பாக கடந்த 8 வருடமாக இங்கு இவர் கடுமையான தேர்தல் பணிகளை செய்து இருக்கிறார். பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து உள்ளார். இதனால் கிராம மக்களுக்கு இவரை நன்றாக தெரிந்து இருக்கிறது. ஆம் ஆத்மி லாப் சிங் அங்கு உள்ளூர் பிரபலம்.

சன்னி
ஆனால் முதல்வராக இருந்தும் கூட சன்னிக்கு அங்கு பெரிய அளவில் ஆதரவு இல்லை. பலருக்கு அவரை பெரிதாக தெரியவில்லை. தலித் என்பதை தாண்டி மக்களால் அவருடன் கனெக்ட் ஆக முடியவில்லை. இதை பயன்படுத்தி வீடு வீடாக சென்று லாப் சிங் பிரச்சாரம் செய்து இருக்கிறார். இந்த பிரச்சாரமே அவருக்கு இப்போது தேர்தலில் வெற்றியை தேடிக்கொடுத்து இருக்கிறது.
Recommended Video

தேடி உதைப்பார்
தேர்தல் பிரச்சாரத்தின் போதே, நான் 12வதுதான் படித்து இருக்கிறேன். ஆனால் எனக்கு என் மக்கள் பிரச்சனை தெரியும். என் தொகுதி பிரச்சனை தெரியும். எங்களுக்கு காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை. இந்த தொகுதியில் நான் வெற்றிபெறுவேன். அப்போது முதல்வர் சன்னி தனக்கு இந்த தொகுதியை பரிந்துரை செய்தவரை தேடி தேடி உதைப்பார்.. ஏனென்றால் இங்கு நான்தான் வெற்றிபெறுவேன் என்று லாப் சிங் கூறினார். அவர் கூறியது போலவே இப்போது பதார் தொகுதியில் முதல்வரையே வீழ்த்தி வென்றுள்ளார்.












Click it and Unblock the Notifications