சிதறப் போகிறதா பஞ்சாப் காங்.?சித்துவுக்கு ஆதரவாக பெண் அமைச்சர் ராஜினாமா- அணி திரளும் எம்.எல்.ஏக்கள்!
சண்டிகர்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து விலகிய மாஜி கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்துவுக்கு ஆதரவாக பெண் அமைச்சர் ஒருவர் ராஜினாமா செய்துள்ளார். மேலும் சித்துவுக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பஞ்சாப் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த அமரீந்தர்சிங் பாஜகவில் இணையக் கூடும் என தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த தகவல்கள் வெளியான சிறிது நேரத்திலேயே பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத்சிங் சித்து ராஜினாமா செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சித்து ராஜினாமா
தமக்கு முதல்வர் பதவி கிடைக்காத கோபத்தில் சித்து ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் அமரீந்தர்சிங், பாஜக பக்கம் போவதைத் தடுக்கவே நவ்ஜோத்சிங் சித்து, காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய டெல்லி மேலிடம் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அமரீந்தர்சிங் குட்டு
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சித்து ராஜினாமா செய்த உடனேயே தமது ட்விட்டர் பக்கத்தில், சித்து ஒரு நிலையான மனிதரே அல்ல.. பாகிஸ்தான் எல்லையில் உள்ள பஞ்சாப் போன்ற மாநிலத்துக்கு சித்து தகுதியான நபரும் அல்ல என கூறியிருந்தார். இந்த நிலையில் சித்துவுக்கு ஆதரவாக காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் ராஜினாமா செய்தனர்.

பெண் அமைச்சர் ராஜினாமா
மேலும் சித்துவுக்கு ஆதரவாக அமைச்சர் ரஸியா சுல்தானா தமது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அத்துடன் சித்துவுக்கு ஆதரவாக சில எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனையடுத்து காங்கிரஸ் மேலிடம் மூத்த தலைவர் ஹரீஷ் சவுத்ரியை சண்டிகருக்கு அனுப்பி உள்ளது.
Recommended Video

ஆம் ஆத்மிக்கு தாவலா?
இந்நிலையில் சித்து ஆம் ஆத்மி கட்சிக்கு தாவக் கூடும் என்கிற ஒரு தகவலும் வெளியாகி உள்ளது. பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டி தலைவராக சித்துவை நியமிப்பதில் இழுபறி ஏற்பட்ட போது, ஆம் ஆத்மி கட்சியை புகழ்ந்து ட்விட்டரில் சித்து பதிவிட்டிருந்தார். இதனை சுட்டிக்காட்டும் மாஜி முதல்வர் அமரீந்தர்சிங், காங்கிரஸை விட்டு விலகும் நோக்கத்தில்தான் சித்து தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரை நம்பி எந்த முடிவும் எடுக்க முடியாது என்பதை இனியாவது புரிந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
