தொழுகைக்கு சிரமப்பட்ட முஸ்லிம்கள்.. மசூதி கட்ட இடம் தானம் தந்த சீக்கிய பெண்.. பணத்தை கொட்டும் இந்துக்கள்
சண்டிகர்: இஸ்லாமியர்கள் பக்கத்து கிராமத்துக்கு சென்று தொழுகை நடத்தி வந்த நிலையில் அவர்களுக்கு மசூதி கட்டுவதற்காக சீக்கிய மதத்தை சேர்ந்த 75 வயது மூதாட்டி தனது இடத்தை தானமாக வழங்கி உள்ளது. அதேபோல் அந்த கிராமத்தை சேர்ந்த இந்துக்களும் மசூதி கட்டுவதற்கு நன்கொடை வழங்கி உள்ளனர். சமீபத்தில் தான் கிறிஸ்துமஸ் கொண்டாட எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் தாக்குதல் நடத்திய நிலையில் இந்த செய்தி வெளியாகி அனைவரிடமும் பாராட்டை குவித்து வருகிறது.
நம் நாட்டில் பல்வேறு மொழி, மதங்களை சார்ந்த மக்கள் உள்ளனர். பெரும்பாலான இடங்களில் மொழி, மதத்தை கடந்து மக்கள் சகோதரத்துவ உணர்வுடன் வாழ்கின்றனர். இருப்பினும் ஆங்காங்கே மொழி, மதம் சார்ந்த பிரச்சனைகளில் நடக்கிறது.

சமீபத்தில் கூட கிறிஸ்துமஸ் ஊர்வலம், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது டெல்லி, கேரளா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் உள்ளிட்ட சில இடங்களில் ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி அதிர வைத்தது.
இப்படியான சூழலில் தான் தற்போது பஞ்சாப்பில் மதத்தை கடந்து ஒரு சம்பவம் நடந்துள்ளது. இஸ்லாமியர்கள் பக்கத்து கிராமத்துக்கு சென்று தொழுகை நடத்தி வந்த நிலையில் அவர்களுக்கு மசூதி கட்டுவதற்காக சீக்கிய மதத்தை சேர்ந்த 75 வயது மூதாட்டி தனது இடத்தை தானமாக வழங்கி உள்ளது. அதேபோல் அந்த கிராமத்தை சேர்ந்த இந்துக்களும் மசூதி கட்டுவதற்கு நன்கொடை வழங்கி உள்ளனர்.
இந்த சம்பவம் நடந்துள்ள கிராமத்தின் பெயர் ஜக்வாலி. இது பஞ்சாப்பின் ஃபதேகட் சாஹிப் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜக்வாலி கிராமத்தில் சுமார் 750 குடும்பங்கள் உள்ளன. இதில் 400 முதல் 500 குடும்பத்தை சேர்ந்தவர்கள் சீக்கியர்களாக உள்ளனர். 150 குடும்பத்தினர் இந்துக்களாக உள்ளனர். 100 குடும்பத்தினர் இஸ்லாமியர்கள் ஆவார்கள்.
கிராமத்தில் சீக்கியர்களுக்கான குருத்வாரா உள்ளது. அதேபோல் இந்துக்கள் வழிபடுவதற்கு சிவ்ன கோவில் உள்ளது. ஆனால் மசூதி கிராமத்தில் உள்ளது. இதனால் இங்குள்ள இஸ்லாமியர்கள் அருகே உள்ள கிராமத்தில் உள்ள மசூதிக்கு சென்று வந்தனர். மேலும் கிராமத்தில் மசூதி கட்ட இஸ்லாமியர்கள் முடிவு செய்தனர். ஆனால் போதிய அளவில் இடம் இல்லை. இதனால் மசூதி கட்டுவது கைகூடவில்லை.
இதற்கிடையே தான் சீக்கியரான பிபி ரஜிந்தர் கவுர் என்ற 75 வயது மூதாட்டி தனது சொந்த நிலத்தை மசூதி கட்டுவதற்காக வழங்கி உள்ளார். அவரது பெயரில் உள்ள நிலம் தற்போது மசூதியின் கமிட்டியின் பெயரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி பிபி ரஜிந்தர் கவுர் கூறுகையில் ‛‛எங்களின் இஸ்லாமிய நண்பர்கள் மசூதிக்கும், நமாஸ் செய்வதற்கும் பக்கத்துக்கு கிராமங்களுக் சென்று வருகின்றனர்.இதனால் நான் எனது 1,360 சதுரஅடி நிலத்தை அவர்களுக்கு தானமாக வழங்கி உள்ளனே். அவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நானும் மகிழ்ச்சியடைந்துள்ளேன்'' என்றார்.
இதுபற்றி பிபி ரஜிந்தர் கவுரின் பேரன் சாத்னம் சிங் கூறுகையில், ‛‛எங்கள் கிராமத்தில் உள்ள இந்துக்கள், இஸ்லாமியர்கள் மற்றும் நாங்கள் அனைவரும் சகோதர உணர்வுடன் வாழ்ந்து வருகிறோம். தலைமுறை தலைமுறையாக நாங்கள் இப்படி இருக்கிறோம்.
ஒவ்வொரு மதம் சார்ந்த நிகழ்ச்சிகளில் மதங்களை கடந்து நாங்கள் அனைவரும் பங்கேற்று வருகிறோம். மசூதி இல்லாமல் இருந்தது. குருத்வாரா, கோவில் அருகே எங்களுக்கு இடம் உள்ளது. அதனை பாட்டி தானமாக கொடுக்க முன்வந்தார். இதுபற்றி இஸ்லாமியர்களிடம் கூறினேன். அங்கு மசூதி கட்ட முடிந்தால் தானம் தருவதாக கூறினேன். அவர்களும் ஒப்புக்கொண்டனர்'' என்றார்.
தற்போது மசூதி நிர்வாகத்துக்கு இந்துக்கள் நன்கொடை வழங்கி வருகின்றனர். தற்போது வரை மொத்தமாக ரூ.3.50 லட்சம் வரை நன்கொடை கிடைத்துள்ளது. இந்த மசூதி கட்டும் பணி இப்போது தொடங்கி உள்ளது. பஞ்சாப் சாஹி இமாம் மவுலானா உஸ்மான் லுதியான்வி மசூதிக்கு அடிக்கல் நாட்டினார்.
இதுபற்றி பாஜக கட்சியை சேர்ந்த அஜய்ப் சிங் கூறுகையில்,‛‛நாங்கள் கோவில் கட்ட இஸ்லாமியர்களும், சீக்கியர்களும் பங்களிப்பு செய்தனர். அதேபோல் குருத்வாரா கட்டுவதற்கு அனைத்து மதத்தினரும் பங்களிப்பு செய்தோம். இப்படி தான் நாங்கள் வாழ்கிறோம். கடைசி செங்கல் வைக்கும் வரை நாங்கள் கட்டுமான பணிக்கு பங்களிப்பு செய்வோம்'' என்றார்.
அதேபோல் பிராமணர் சமுதாயத்தை சேர்ந்த குர்சேவாக் குமார் கூறுகையில், ‛‛எங்கள் கிராமத்தின் ஒற்றுமையை நினைத்து பெருமைப்படுகிறோம். அனைத்து தரப்பினரின் ஆதரவுக்காக மசூதி கமிட்டியின் தலைவர் கலா கான் நன்றி தெரிவித்துள்ளோம். இங்கு அனைத்து மதத்தை சேர்ந்த மக்களும் அமைதியாகவும் வாழ்ந்து வருகிறோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications