ஒன்று.. இரண்டல்ல! 35 முறை தோல்வி.. ஆனாலும் விடலையே! ஓர் ஐஏஎஸ் அதிகாரியின் நிஜக்கதையை கேளுங்கள்
சண்டிகர்: ஹரியானாவை சேர்ந்த ஒருவர் போட்டி தேர்வுகளில் 35 முறை தோல்வியுற்ற பின்னர் 36வது முறையாக தேர்வில் வெற்றி பெற்று ஐஏஎஸ் அதிகாரியாக உருவெடுத்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.
இன்று நாம் நாகரீக மனிதர்களாக இருக்கிறோம். ஆனால் இந்த நிலையை வந்தடைய நமக்கு குறைந்தபட்சம் 50 ஆயிரம் ஆண்டுகளாவது ஆகியிருக்கும். அதாவது இத்தனை ஆண்டுகள் மனிதன் தன்னை பரிணமித்துக்கொள்ள எடுத்த முயற்சிதான் இன்றை நம்மை இந்த நிலைக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. இயற்கை பேரழிவுகள், நோய்கள், வேட்டை விலங்குகள், இன குழு மோதல்கள் இப்படி ஏராளமான பிரச்னைகளை மனிதர்கள் எதிர்கொண்டு வந்திருக்கிறார்கள்.

இதில் ஏதேனும் ஒன்றில் நம் மூதாதையர்கள் தளர்ந்து போய், அட போங்கப்பா என சொல்லியிருந்தால் மனித இனமே உருவாகியிருக்க முடியாது. ஆகவே முயற்சி என்பது மனிதனின் மனதிற்குள் இயல்பாகவே இருக்கிறது. பயம் எப்படி வந்தது என யாருக்கும் தெரியாதோ, அதேபோல முயற்சியும் செல்போனில் இருக்கும் புளுடூத் போல நமக்குள் இன்பில்டாகவே இருக்கிறது. ஆனால் நம்மை சுற்றியுள்ள புற சூழல்கள் இந்த முயற்சியை மழுங்கடித்துள்ளன.
எதை செய்ய வேண்டும் என்கிற புரிதல் இல்லாமல் இருப்பது, பண தேவைக்காக மட்டுமே ஓடிக்கொண்டிருப்பது, அறிவார்ந்த சமூகத்திற்கு பதில் மேட்டிமை வாய்ந்த சமூகத்தை நோக்கி நகர முயற்சிப்பது போன்றவை நம்முடைய முயற்சியை மழுங்க செய்துவிடுகிறது. இதிலிருந்து மீள்பவர்கள் மிக சொச்சம்தான். அப்படிப்பட்டவரில் ஒருவர்தான் ஹரியானாவின் ஐஏஎஸ் அதிகாரியான விஜய் வர்தன். இவர் ஐஏஎஸ் அதிகாரியான கதை ஒவ்வொரு இளைஞர்களுக்கும் நிச்சயம் உத்வேகம் அளிக்கும்.
குறிப்பாக, 'விளையும் பயிர் முளையிலேயே தெரியும், முதல் கோணல் முற்றும் கோணல்' என்கிற சொலவடைகளை நம்பி வாழ்க்கையில் முயற்சியை கைவிட் இளைஞர்கள் இவரது முயற்சி குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் இன்றைய காலத்தில் இளைஞர்கள், மாணவர்கள் ஒரு சில முயற்சியிலேயே தங்களது லட்சியத்தை அசால்ட்டாக கைவிட்டுவிடுகின்றனர். ஆனால் விஜய் வர்தனின் கதை அப்படியானதல்ல.
பிடெக் எலக்டாரின் இன்ஜினியரிங் படித்துவிட்டு ஐஏஎஸ் ஆகவேண்டும் என்கிற கனவுடன் பயணிக்க தொடங்கியவர்தான் இவர். இவர் எழுதாத போட்டி தேர்வுகளே இல்லை என்று சொல்லாம். யுபிஎஸ்சி தேர்வுகளை ஒரு முறை இருமுறை அல்ல.. 35 முறை எழுதி தோல்வி கண்டுள்ளார். எல்லா தேர்வுகளிலும் தோல்வி, எதை தொட்டாலும் தோல்வி, எதை செய்தாலும் தோல்வி இப்படி இவரது கதை தோல்வியிலேயே இருந்தது. ஆனாலும் இவர் விட்டுக்கொடுப்பதாக இல்லை.
36வது முறை இவர் எழுதிய தேர்வில் 104வது இடம் பிடித்து ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானார். இருப்பினும் இது அவருக்கு போதவில்லை. தன்னுடைய தோல்விகளை ஆய்வு செய்து அதிலிருந்து பலவீனங்களை கண்டுபிடித்து மீண்டும் முயன்றார். இந்த முறை ஐஏஎஸ்-ஆக தேர்ச்சியடைந்தார். தற்போது சோஷியல் மீடியாவில் இவருடைய கதை வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இவருடைய முயற்சிகள் நமக்கு உணர்த்துவது ஒன்றுதான். இந்த உலகில் லாயக்கற்றவர்கள் என்று யாரும் கிடையாது. எல்லோருக்கும் திறமை இருக்கிறது. ஆனால் அதை வெளியில் கொண்டுவருவது நம்முடைய வேலைதான்.
விஜய் வர்தனினின் வாழ்க்கையில் அவரது குடும்பம் இந்த தோல்விகளை தாங்கி உதவி செய்திருக்கலாம். யுபிஎஸ்சி தேர்வு எழுத வரும் பலரது குடும்பங்கள் சாமானியர்களுடையதுதான். அவர்களால் ஒன்றிரண்டு தோல்விகளை தாண்டி மூன்றாவது நான்காவது தோல்விகளை தாங்கிக்கொள்ள முடியாது. பொருளாதார சுமை, கடன் போன்றவை மிகுந்த அழுத்தத்தை கொடுக்கும். இருப்பினும் அதையும் தாண்டி இலக்கை அடைவதுதான் வெற்றி. உண்மையை சொல்வதெனில் முயற்சி என்பதே வெற்றிதானே!












Click it and Unblock the Notifications